NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Tuesday, January 31, 2012

89.38 கோடியை எட்டிய மொபைல்போன் வாடிக்கையாளர்கள்


மொபைலும் கையுமாக இல்லாத நபர்களை இன்று பார்ப்பது மிக கடினமான ஒன்று. அந்த அளவுக்கு தொழில் நுட்ப வசிதகளையும், சவுகரியங்களையும் மொபைல்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது தொழில் நுட்ப உலகம். இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரது எண்ணிக்கை மொத்தம் 893.84 மில்லியனை எட்டி உள்ளது.
லேண்ட் லைன் பயன்படுத்துவோரது எண்ணிக்கை 926.53 மில்லியனை நெருங்கி உள்ளது. ஒட்டு மொத்தமாக தொலைபேசி பயன்படுத்தும் மக்கள் அடர்த்தி இந்தியாவில் 76.86% சதவிகிதத்தை எட்டி இருக்கிறது.
106.38 மில்லியன் மக்கள் ஐடியா செலுலாரை பயன்படு்த்துகின்றனர். யூனினார் நிறுவனம் 36.31 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 175.65 மில்லியன் வாடிக்ககையாளர்களையும், மக்கள் மத்தியில் அதிக பெயர் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் 150.08 மில்லியன் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
மொபைலகள் பயன்படுத்துவோரது எண்ணிக்கை பற்றி தெரிந்து கொள்ளும் போது, பிராட் பேண்டு வசதியை உபயோகிப்போரது விவரமும் பார்ப்போம். நவம்பர் மாதம் 13.13 மில்லியன் வாடிக்கையாளர்களும், டிசம்பர் மாதம் 13.30 மில்லியன் வாடிக்கையாளர்களும் பிராட் பேண்டு வசதியை பயன்படு்த்தி இருக்கின்றனர். இங்கே கூறப்பட்டுள்ள இந்த ஒரு மாத கால அளவில் 1.3 சதவிகிதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது பிராட் பேண்டு சேவை.
அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசி மற்றும் கைப்பேசியின் விவரம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் பார்வையாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறிய தகவலாக இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

Post Comment

இரவு விருந்து.... புரட்டியெடுத்த ஷாரூக்கான்!

அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.

ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.

விருந்து நடந்து இடத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் அங்கு நின்று கொண்டிருந்த இயக்குநர் சிரிஷ் குந்தரை நோக்கி வேகமாக சென்றார். பின்னர் திடீரென அவருடைய நீளமான தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். சிரிஷ் குந்தர் முகத்தில் ஷாருக்கான் மாறிமாறி குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த உணவகத்தின் உரிமையாளரான பாபா தீவான் தலையிட்டு ஷாருக்கானை பிடித்து வேறுபக்கமாக அழைத்துச் சென்றார். ஆனால் அவரை வெளியேறச் சொன்னார் ஷாரூக். உடனே சஞ்சய் தத் தலையிட்டு, ஷாரூக்கை அழைத்துச் சென்றுவிட்டாராம். அவர் மட்டும் வராமலிருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகிவிட்டிருக்கும் என்கிறார்கள்.

பின்னர் இயக்குநர் சிரிஷ் குந்தர், விருந்து நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது அவருடைய முகம் முழுவதும் வீங்கி காணப்பட்டது. 

சிரிஷ் குந்தரின் மனைவி பிரபல இயக்குநர் ஃபராகான் ஆவார். இவரும், ஷாருக்கானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஷாரூக் தனது மே ஹுன் நா மற்றும் ஓம் ஷாந்தி ஓம் படங்களை இயக்கும் வாய்ப்பை ஃபரா கானுக்கு தந்திருந்தார். ஏராளமான படங்களில் ஷாரூக்கானுக்காக நடனம் அமைத்தவர் அவர்தான். ஆனால் தீஸ் மார் கான் படத்தில் ஃபராகான் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்ய, பிரச்சினை ஆரம்பமானது.

சிரீஷ் குந்தரும் ஒரு காலத்தில் ஷாரூக்கின் நண்பராக இருந்தார். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாரூக்கை மோசமாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு ஷாரூக் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில், ஷாரூக்கின் ரா ஒன் படம் குறித்து கேவலமான விமர்சித்திருந்தாராம் சிரிஷ்.

இந்த நிலையில், நேற்றைய விருந்துக்கு வந்த ஷாரூக்கை மிகவும் கோபப்படுத்தும் விதத்தில் சிரீஷ் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில்தான் ஷாரூக் வெளுத்தாராம். எனினும் இதுபற்றி போலீசில் புகார் தரப்போவதில்லை என்று பாராகான் தெரிவித்து உள்ளார்.

"ஒருவரை அடிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது மோசமான விஷயம் என்றும் அடிக்கடி கூறுவார் ஷாரூக். அவரா இப்படிச் செய்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது," என்றார் ஃபாராகான்.

இந்த சண்டையின் போது நேரில் பார்த்த அனைவருமே, ஷாரூக் பக்கம் தவறில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். 

2008-ம் ஆண்டு கத்ரீனா கைஃபின் பிறந்த நாள் விருந்தில் ஷாரூக்கானும் சல்மான் கானும் கைகலப்பில் இறங்கி பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்!

Post Comment

பிசிசிஐ செயற்குழு கூடி விவாதம்

இந்திய அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்புடன் இருந்து வரும் நிலையில் இந்திய அணியின் தோல்விகள் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் பி்ப்ரவரி 13ம் தேதி கூட்டியுள்ளனர். அன்று அணியில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்வுள்ளது.

இங்கிலாந்துக்குப் போன இந்திய கிரிக்கெட் அணி அங்கு பெரும் தோல்வியைச் சந்தித்தது. டெஸ்ட்டில் முதல் தர வரிசையில் இருந்த நிலையையும் பறி கொடுத்து விட்டு பரிதாபமாக திரும்பியது.

ஆனால் உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பாக ஆடியது. ஆனால் தற்போது மறுபடியும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அடி வாங்கி வருகிறது. டெஸ்ட் தொடரையும் இழந்து விட்டது.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.இப்படி வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதும், உள்ளூரில் சிறப்பாக ஆடுவதுமாக இருந்தால் எப்படி.எங்கு ஆடினால் என்ன சிறப்பாக விளையாட வேண்டியதுதானே என்று அவர்கள் நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

மேலும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இளம் வீரர்களுக்கு முறையாக, நியாயமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 13ம் தேதி கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது. அப்போது இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்தும், அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Post Comment

Saturday, January 28, 2012

மோசமான கருத்துக்களை சென்சார் - ட்விட்டர் அதிரடி

 இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.

இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.

இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.

சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.

அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.

ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.

இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.

இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது.

ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.

Post Comment

இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூகுள்

 கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும் விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன. இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள் சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.

இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும், இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனுக்கு எதிராக கூகுள், யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை செய்ய முடியாது என வாதிட்டன.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.


இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ் அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார்.

மேலும் கூறுகையில், "எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத் தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப் போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச- மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை பொறுப்பாகாது," என்றார்.

Post Comment

Friday, January 27, 2012

ஆதார்-நடைமுறை சிக்கலுக்குத் தீர்வு


இந்தியாவில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் இந்திய தனி அடையாள அட்டை ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அத்திட்டத்தில் மக்களின் விவரங்களைப் பதிவு செய்யும்.
அதேநேரத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவு அமைப்பான என்.பி.ஆர். மற்ற மாநிலங்களில் அந்தப் பணியை மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டி, பயோமெட்ரிக் பதிவுகளை எந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு பிரதமருக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
யு.ஐ.டி.ஏ.ஐ. திட்டக் கமிஷன் அதிகாரத்துக்கு உட்பட்டும், என்.பி.ஆர். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.
அதையடுத்து, அந்தப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்வதற்கான அமைச்சரவைக் குழு கூடி விவாதித்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சுமார் 95 அல்லது 96 சதம் பயோமெட்ரிக் பதிவுகளை ஒரே அமைப்பு மேற்கொள்ளும் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கவலைகளை யு.ஐ.டி.ஏ.ஐ. கவனத்தில் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டபிறகு, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், மசோதா ஒன்றும் கொண்டுவரப்படும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
ஏற்கெனவே, யு.ஐ.டி.ஏ.ஐ. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Post Comment

கொலை வழக்கில் ராவணன்

சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண வழக்கில் சிக்கவில்லையாம், மாறாக கொலை வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கோவை போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளைத் திருமணம் செய்தவர். அந்த வகையில், சசிகலாவுக்கு இவர் தங்கை கணவர் ஆவார். கோவையில் வசித்து வரும் ராவணன், இங்கிருந்தபடி கொங்கு மண்டல அதிமுகவை ஆட்டிப் படைத்து வந்தார்.

அதிமுகவில் இவரது ஆட்டம் அதிகமானது சமீ்ப காலத்தில்தான். கடந்த சில ஆண்டுகளாக இவர் போட்ட ஆட்டத்தால் அதிமுகவினர் கடும் எரிச்சலில் இருந்தனர். ஆனால் சசிகலாவின் ஆதரவால் எதிர்ப்பாளர்களை நசுக்கி வந்தார்.

அரசுப் பணியிடங்களில் இடமாற்றம், நல்ல பசையான இடங்களுக்குப் போக விரும்பியோர் என பலரும் இவரைத் தேடிப் போகும் நிலையை ஏற்படுத்தினார். இதில் பெரும் பணம் பார்த்தார்.

இதுதவிர நில அபகரிப்பு, மிரட்டல் என பல்வேறு புகார்களும் உள்ளன. கல் குவாரி உரிமம் உள்ளிட்ட விவகாரங்களிலும் இவரது பெயர் பெருமளவில் அடிபட்டது. இதில் இவர் மீது கோவையில் வழக்குப் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

சமீ்பத்தில்தான் கோவையைச் சேர்ந்த மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் ராவணன் மீது நில அபகரிப்புப் புகார் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் கோவை நடந்த ஒரு மர்ம மரணம் தொடர்பாக ராவணன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சூலூர் பகுதியில் சமீபத்தில் செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது விபத்து என அப்போது கூறப்பட்டது. ஆனால் கொலை என அவரது மகன்கள் கூறி வந்தனர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர்கள் நேரிலேயே மனு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அது கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில்தான் தற்போது ராவணன் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ராவணனை போலீஸார் பல்லடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மணி நேரமாக தீவிர விசாரணை நடந்து வருகிறதாம். இதுவரை இதுகுறித்து போலீஸ் தரப்பில் கப்சிப் என உள்ளனர். ஆனால் ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது உண்மைதான் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் ராவணன் கைது குறித்து கோவை போலீஸார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப திவாகரன் தலைமறைவாக உள்ள நிலையில், மறுபக்கம் ராவணன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுளள தகவல் சசிகலா தரப்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Post Comment

நிலம் கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு

 புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிக்கு, நிலங்களை கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 


நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாக சாலை கட்டமைப்பு உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக, சாலைகள் விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும்,  நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி  நடைபெறும் வண்ணமும், ரூ.152  கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Wednesday, January 25, 2012

முன்னாள் விஞ்ஞானிகள் மீது அரசு நடவடிக்கை


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் உள்பட நான்கு விண்வெளி விஞ்ஞானிகள், அரசுப் பணி எதையும் மேற்கொள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது.
இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆந்த்ரிக்ஸுக்கும் தனியார் நிறுவனமான டேவாஸுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பத்தில், மாதவன் நாயர் உள்ளிட்டோரின் பங்கு குறித்து ஆய்வு நடத்திய பிறகு அரசு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மாதவன் நாயர், இஸ்ரோ தலைவராக இருந்த காலகட்டத்தில், ஆந்த்ரிக்ஸுக்கும் டேவாஸுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எஸ் பேண்ட் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, கடந்த ஆண்டு மே இறுதியில், முன்னாள் கண்காணிப்பு ஆணையர் பிரத்யூஸ் சின்ஹா தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தார் பிரதமர். அந்தக் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மாதவன் நாயருடன், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர் கே. பாஸ்கர நாராயணா, ஆந்த்ரிக்ஸின் முன்னாள் மேலாண் இயக்குநர் கே.ஆர். ஷ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போதைய இஸ்ரோ தலைவரான கே. ராதாகிருஷ்ணன்தான் காரணம் என்றும், இந்தப் பிரச்சினையில் அரசாங்கத்தை அவர் தவறாக வழி நடத்தியிருப்பதாகவும் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், அதில் விஞ்ஞானிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நிர்வாகத்துறையில் உள்ளவர்களை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டேவாஸுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்றும், ஆனால், தற்போதைய விதிகளின்படி இஸ்ரோ அவ்வாறு செய்யக் கூடாது என்றும் நாயர் சுட்டிக்காட்டினார்.

Post Comment

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு கர்நாடகா அளித்தது பாராட்டு

ஆட்டோவில் விட்டுச் சென்ற ஐந்து லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த, தமிழகம் வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கனை, பெங்களூரு நகர போலீஸ், மாநகராட்சி மேயர் கவுரவித்தனர். தமிழகம், வேலூர் மாவட்டம், பெருமாள் குப்பத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பெங்களூரில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன், தன் ஆட்டோவில் பயணித்த பிஜாப்பூரை சேர்ந்த ராமாச்சார்யா, விட்டு சென்ற ஐந்து லட்ச ரூபாயை, அவரிடம் டிரைவர் பாண்டுரங்கன் ஒப்படைத்தார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கனை, 
                           பெங்களூரு போலீஸ் உதவி கமிஷனர் சோனி, பாராட்டி பத்திரம் வழங்கினார். மேலும், பெங்களூரு மாநகராட்சி மேயர் சாரதம்மா, பாண்டுரங்கனை பாராட்டி, அவரது குடும்பத்தினர் ஐந்து பேர் பயன் பெறும் வகையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ சேவை காப்பீட்டை வழங்கினார். மேலும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Post Comment

Tuesday, January 24, 2012

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  

வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

Post Comment

Monday, January 23, 2012

உலகை சுற்றி வலம் வந்த மிக இளம் வயது இளம் யுவதி



உலகை ஒற்றைக்கப்பல் மூலம் சுற்றி வலம் வந்த மிக இளம் வயது நபராக லாரா டெக்கர் (Laura Dekker) எனும் நெதர்லாந்து இளம் யுவதி
புதிய சாதனை படைத்துள்ளார். 16 வயது மட்டுமே நிரம்பிய லாரா சுமார் ஒருவருடமாக மேற்கொண்ட இச்சுற்று பயணத்தின் முடிவில் கரிபியன் தீவுகளில் உள்ள புனித மார்டென் துறைமுகத்தில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார். அவரை அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். 

கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 20 ம் திகதி 11.5 மீற்றர் நீளம் கொண்ட தனது படகில் பயணத்தை ஆரம்பித்தார். 15,000 கி.மீ மேல் கடலில் பயணித்துள்ளார். முதலில் அவர் தனியாக செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. நெதர்லாந்து சமூக வலைத்தளங்களும், அவரது பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம்  சென்றிருந்தன. லாரா தனது படகு பயணத்தின் போது தனக்கேற்படும் அனுபவங்களை உடனுக்குடன் பதிந்து கொள்ள வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தார். இது இளம் சமூகத்திற்கு நல்லதல்ல. அவர்களின் மனதில் தேவையில்லாத விபரீத ஆசைகளை ஏற்படுத்திவிடக்கூடியது என நெதர்லாந்து சமூக வலைத்தளங்கள் தெரிவித்திருந்தன. எனினும் நீதிமன்ற தீர்ப்பு லாராவுக்கு சாதகமகவே இருந்தது.  சாதிக்க துடித்த லாராவை அவரது தாயாரும் தைரியமாக வழியனுப்பி வைத்தார். இப்போது உலகை தண்ணீரில் சுற்றிவந்த மிக இளம்வயது நபராக லாரா சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரது சாதனையை கின்னஸ் குழுவினரோ, வேறு கடல் பிரயாண துறையினரோ உத்தியோகபூர்வமாக பதிந்து கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டனர்.

இளம் வயது காரர்களிடையே இந்த ஆபத்தான படகுபிரயாணம் செய்யும் ஆசையை தூண்டுவதற்கு காரணியாக இப்பதிவு இருந்துவிட கூடாது என்பது அவர்கள் வாதம்.

Post Comment

Sunday, January 22, 2012

இந்தியன் ஆயில் கழகத்தில் இன்ஜினியர் பணி


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: Engineers/Graduate Apprentice Engineers (GAES)

காலியிடங்கள்: 225

வயது வரம்பு: 30.06.2012 தேதிப்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி உச்ச வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Civil, Chemical/Petrochemical/ Computer Engineering/IT, Electrical/Electrical & Electronics, Instrumentation/ Electronics Instrumentation, Medical Engineering, Metallurgical Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். OBC/பொது பிரிவினர் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  SC/ST/PWD பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: ரூ.24,900

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2012 நுழைவுத் தேர்வு அடிப்படையில் தகுதியாநவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

GATE தேர்வு நடைபெறும் நாள்: 12.02.2012

GATE-2012 நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரமும்www.gate.iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ioci.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.02.2012.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி கையெழுத்திட்டு தங்களின் கைவசம் வைத்துக்கொள்ளவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அப்போது GATE -2012 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, கல்வித்தகுதி, வயது, ஜாதி சான்றிதழ்கள் மற்றும் இந்தியன் ஆயில் கழக பணிக்குரிய ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
குறிப்பு: இந்தியன் ஆயில் கழகம் மற்றும் GATE இணையதளங்களை தொடர்ந்து கவனித்து வரவும்.

Post Comment

Saturday, January 21, 2012

ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா' விஜய்

கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.

எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும் செய்திகள் மற்றும் பேச்சுக்களின் விளைவு!

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம், நிச்சயமாக விஜய் இல்லை!

இது ஷங்கர் என்ற திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை. அதுமட்டுமல்ல, இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட பண்ணியிருக்க முடியும். ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் பணியாற்றியிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, விஜய் மற்றும் அவரது குழுவினர், நண்பன் படம் ஒரே வாரத்தில் ரஜினியின் எந்திரனை மிஞ்சிவிட்டதாக தங்களுக்கு ரிப்போர்ட்ஸ் வந்துள்ளதாகவும், அதனை ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும் என்றும் கூறினர் (பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாமே!).

குறிப்பாக விஜய் பேசுகையில், 'இந்தப் படம் ரஜினியின் எந்திரன் பட வசூலுக்கு ஈக்குவலா வந்துள்ளதாகவும், சில இடங்களில் அதை மிஞ்சியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை,' என்றார், ரொம்ப அடக்கமான பிள்ளை போல!

எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் எந்திரனுக்கு 3000 அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி கிடைத்தது. ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.

முதல் மூன்று நாட்களில் எந்திரன் வசூலித்தது ரூ 62 கோடி. முதல் வாரத்தில் அது 117 கோடியாக உயர்ந்தது. முதல் வார முடிவில் நண்பன் வசூலித்ததாகக் கூறப்படுவது ரூ 20 கோடி மட்டும்தான். இந்தப் படம் தினசரி வசூலாக முதல் மூன்று நாட்கள் ரூ 4 கோடி வசூலித்தாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.

ச்சும்மா லுலுலாயி...

சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்யின் தந்தையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ சந்திரசேகரன், "நாங்கள் அவ்வப்போது மாபெரும் வசூல், இந்தப் படத்தின் சாதனை முறியடிப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் தருவோம், பேட்டி கொடுப்போம். அதையெல்லாம் நம்பாதீர்கள். படம் ஓடவேண்டுமே என்பதற்காக நாங்களாகவே செய்யும் தவறான வேலை இது. இதை நம்பி அரசு எங்களை வரி கேட்கிறது," என்றார்.

நண்பன் வசூல் பற்றி 'டாக்டர்' விஜய் சொல்வதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது!!

Post Comment

ஓய்வூதியம் பெற ஸ்மார்ட்கார்டு : ஜெ. அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோர் இனி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயோமெட்ரிக் கார்டுகள் மூலம் வங்கி ஏடிஎம்களில் பணம் பெறும் திட்டத்தை விரிவாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை வங்கிகள் மூலமாக பயோமெட்ரிக் ஸ்மார்ட் அட்டையினை பயன்படுத்தி வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டார். இம்முன்னோடித் திட்டத்தின்படி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளிகளின் பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்படும். பயனாளிகளின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட அட்டையை பயன்படுத்தி வங்கி சேவையாளர்கள் மூலமாக பயனாளிகளின் கிராமத்திற்கு நேரில் சென்றே பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார் கோவில் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டம் ஆகிய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முன்னோடித் திட்டம் பயனாளிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இம்முன்னோடித் திட்டத்தினை மாநிலத்திலுள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். 

மூன்று கட்டமாக செயல்படுத்தப்படும்

இம்முன்னோடித் திட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 4,385 கிராமங்களில் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி வங்கிகள் மூலம் ஓய்வூதியத் தொகையை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த 4,385 கிராமங்களிலும் இத்திட்டம் இந்த வருடம் ஜுன் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும். 

இரண்டாம் கட்டமாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,000 முதல் 2,000 வரை மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி வங்கிகள் மூலம் ஓய்வூதியத் தொகை வழங்கும் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்றாம் கட்டமாக இதர கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் மூலம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post Comment

செயற்கை விந்தணு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள். இது மலட்டுத்தன்மையினால் சந்ததியை உருவாக்க முடியாமல் இருந்த ஆண்களுக்கு வரப்பிரசாதம் என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர். இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கலிபோர்னியாவை விஞ்ஞானிகள் செயற்கை விந்தணு உற்பத்தி செய்யும் உயிரியல் இயந்திரம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த செயற்கை ஆண் உறுப்பில் விந்தணுக்களை செலுத்தியதில் அவை எண்ணற்ற விந்தணுக்களை உற்பத்தி செய்தன. இந்த செயற்கை விந்தணு உற்பத்தி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த புதிய முயற்சி மலட்டுத் தன்மையால் மருகிப்போயிருந்த ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Post Comment

Friday, January 20, 2012

835 டாக்டர்கள் நியமனம்

 தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 835 டாக்டர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் சிறப்பு மருத்துவப் படிப்பை கடந்த ஆண்டு 416 பேர் படித்து முடித்தனர். அவர்கள் கடந்த ஜூனில் நடைபெற்ற பணி நியமன கலந்தாய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.


 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன. ஏழை மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
 ஒரு டாக்டருடன் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் டாக்டர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாலும், பணி ஓய்வு, பதவி உயர்வு மற்றும் பணி துறப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், இளஞ்சிசு தீவிர சிகிச்சையகம் ஆகியவற்றில் இப்போது 835 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பட்டியல் பெறப்பட்டு டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.


 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில், ஒவ்வொரு நிலையத்திலும் தனியாக மூன்று செவிலியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
 இப்போது அந்த நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.4 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.4,500-ம், மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.5,500-ம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.


 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அவர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு சிறப்புப்படியாக மாதந்தோறும் ரூ.500 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Thursday, January 19, 2012

ட்யூப்லெஸ் டயர்கள் சிறந்ததா?

ட்யூப்லெஸ் டயர்களை பயன்படுத்துவது சிறந்தது என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர். ட்யூப்லெஸ் டயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? அதில், அப்படி என்னதான் கூடுதல் சிறப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
ட்யூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் உள்ளிட்ட பிரத்யேக வேதிப்பொருட்களின் பூச்சுடன் உறுதியாக வடிவக்கப்பட்டுள்ளன. இதனால், வெப்பமாகாது என்பதுடன் உட்புறத்திலிருந்து காற்று வெளியேற வாய்ப்பு மிக மிக குறைவு.

மேலும், வாகனத்தின் எடைக்கு தக்கவாறு டயருக்குள் காற்று சமநிலையுடன் இருப்பதால் டயரின் சுழலும் வேகம் மற்றும் தன்மையும் சீராக இருக்கும். இதனால், அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம்.

விபத்துக்களுக்கு டயர் பஞ்சராவதும், ட்யூப் வெடிப்பதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சாதாரண டயர்கள் எளிதில் பஞ்சராவதற்கும், ட்யூபில் உராய்வு அதிகமாகி வெடிப்பதற்கான ஆபத்துக்களும் அதிகம். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் கூடிய உறுதியான ரப்பரை கொண்டிருப்பதால் காற்று திடீரென வெடித்து வெளியேறாது. 

மேலும், பஞ்சராகும் வாய்ப்பும் குறைவு என்பதுடன் பஞ்சரானாலும் காற்று உடனடியாக வெளியேறி டயர் பஸ்க் ஆகாது. இதனால், பெரிய அளவிலான விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று ஆட்டோ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும்போது டயர், ட்யூப் இடையில் ஏற்படும் அதிக உராய்வு காரணமாக ட்யூபில் உள்ள காற்று சூடாகி வெடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், ட்யூப்லெஸ் டயர் அதிவேகத்தில் செல்லும்போதும் அதிக சூடாகாது என்பதால் டயர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு.

சில சமயங்களில் வாகனத்தின் எடை அதிகமாகும்போது ட்யூபில் காற்று சமநிலை இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் பேலன்ஸ் இல்லாமல்(வாப்லிங்) செல்லும். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களில் இந்த பிரச்னை இருக்காது. ரோடு கிரிப்பும் அதிகமாக இருக்கும். இதனால்தான், ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் ட்யூப்லெஸ் டயர்களை பொருத்துகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ட்யூப்லெஸ் டயர்கள் பல்வேறு நாடுகளில் பரவலாக வரவேற்க்கப்பட்டுள்ள நிலையிலும், இந்திய மார்க்கெட்டில் ட்யூப்லெஸ் டயர்கள் இதுவரை பெரிய வரவேற்பை பெறவில்லை என்றும் ஆட்டோ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Post Comment

தமிழகத்தில் தேச பக்தி அதிகம்-தூர்தர்ஷன்

நாட்டில் உள்ள தூர்தர்ஷன் நிலையங்களிலேயே சென்னை தூர்தர்ஷன்தான் அதிக அளவிலான தேசபக்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, தேச பக்தியில் சிறந்தவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

தேச பக்திப் பாடல்கள், நாடகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த நிகழ்ச்சிகள் என தேசம் சார்ந்த நிகழ்ச்சிகளை, தேச பக்தி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வரும் ஒரே தொலைக்காட்சி நிறுவனம் மத்திய அரசின் தூர்தர்ஷன் மட்டும்தான்.

தனியார் தொலைக்காட்சி நிலையங்களில் இவற்றை சற்றும் எதிர்பார்க்க முடியாது. அவர்களும் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அதுவும் கூட சில டிவிகளில் பார்க்க முடியாது.

சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்ற நாட்களில் கூட இந்த தனியார் தொலைக்காட்சிகள் தேச பக்தி நிகழ்ச்சிகளைப் போடுவதில்லை. மாறாக நீங்கள் நடித்த படங்களில் கவர்ச்சி மிதமிஞ்சி நிற்கிறதே அது எப்படி என்று ஏதாவது ஒரு நடிகையிடம், ஏதாவது ஒரு டிவி தொகுப்பாளர் படு கவனமாக கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்.

இப்படிப்பட்ட சாட்டிலைட் மாயைக்கு மத்தியில், தன்னிலை தவறாமல், தொடர்ந்து தேச பக்தி நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன் பாராட்டுக்குரியதே. அதேசமயம், இந்தியாவிலேயே அதிக அளவிலான தேச பக்தி நிகழ்சசிகளை ஒளிபரப்பி நாட்டிலேயே தமிழ்நாட்டுக்காரர்கள்தான் தேச பக்தியில் சிறந்தவர்கள் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளது சென்னை தூர்தர்ஷன்.

இதுதொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தொகுத்துள்ள தகவலின் அடிப்படையில், சென்னை தூர்தர்ஷன் நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 66 தேச பக்தி தொடர்கள், ஆவணப் படங்களை ஒளிபரப்பியுள்ளது. அனைத்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தது மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பானவையாகும்.

இந்த விஷயத்தில் சென்னைக்குப் பக்கத்தில் கூட வேறு எந்த தூர்தர்ஷன் நிறுவனமும் இல்லை என்பது அத்தனை தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பெருமை தருவதாக உள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி தூர்தர்ஷன் கேந்திரா கூட வெறும் 19 நிழ்ச்சிகளை மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் ஒளிபரப்பியுள்ளது ஆச்சரியம் தருகிறது. 3வது இடத்தில் கேரளா உள்ளது. இதன் பங்கு 18தான்.

இன்னொரு விஷயத்திலும் சென்னை தூர்தர்ஷன் கலக்கியுள்ளது. அதாவது பிற நிலையங்கள் எல்லாம் அவரவர் மாநில சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்துதான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளன. ஆனால் சென்னை அப்படி அல்ல தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் நாட்டு்க்காகப் போராடிய பலரையும் கூட அது தனது ஆவணப் படங்கள், தொடர்களில் வெளிப்படுத்தி அவர்களைக் கெளரவித்துள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள் தாகூர், ஜோதிபாசு, மோதிலால் நேரு, அன்னிபெசன்ட் ஆகியோர்.

தேசபக்தி நிகழ்ச்சிகளை மிக மிக குறைந்த அளவில் ஒளிபரப்பியவை பீகாரும், ஆந்திராவும்தான். இங்கு தலா ஒரே ஒரே நிகழ்ச்சி மட்டுமே காட்டியுள்ளனர். பீகார் தூர்தர்ஷன் தனது மாநிலத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன் ராம் பற்றி ஒரு நிகழ்ச்சியை போட்டுள்ளது. ஹைதராபாத் தூர்தர்ஷன், திரிகபத்தா தெலுகு கத்தா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.

இந்த புள்ளி விவரம் மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் தமிழகத்தில் தேச பக்தி அதிகம் இருப்பதையே இந்த அதிக அளவிலான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை காட்டுகிறது. அதனால்தான் தமிழகத்தில்தான் அதிக அளவிலான தேச பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் பிராந்திய உணர்வுகளே அதிகம் உள்ளது இதன் மூலம் வெளிப்படுகிறது என்றார்.

Post Comment

Wednesday, January 18, 2012

துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான்

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் என டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். நண்பன் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், துப்பாக்கி படம் பற்றியும், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து கூறியுள்ளார். துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும். இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான். படத்தின் கதையை அற்புதமாக கொண்டு வந்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கியில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய ஹிட்டாகும் என்று எங்களுக்கு தெரியும். முதல்வன் படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Post Comment

சினிமாவில் நடிக்க உடனே வாங்க.. வாய்ப்பு

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெயரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது.. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு! 

இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இப்படக்குழுவினர் இன்று சென்னை எம்எம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இப்படத்தின் கதையை தற்போதுள்ள பிரபல நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கதை பிடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் எதிர்மறை தன்மையைப் பார்த்து தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். நடிகர்கள் மட்டுமல்ல, இப்படத்தில் கேமராமேன், இசையமைப்பாளர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.

புதுமுக நடிகர் தேர்வை வித்தியாசமாக செய்ய இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான போட்டோக்களையும், வீடியோ சாம்பிள்களையும்karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் (likes and comments) பெறுகிறாரோ அதனடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.

இது குறித்த முழு விபரங்களை www.karma-movie.com என்ற வலைப்பக்க முகவரியில் கொடுத்திருக்கிறோம். 'தில்' இருக்கிறவங்க நடிக்க விண்ணப்பிக்கலாம்," என்றார். 

Post Comment

நோக்கியாவின் ஆஷா சிரீஸ் மொபைல்கள்


ஒரே நிறுவனம் பலவிதமான சிரீஸ்களிஸ் மொபைல்களை வெளியிடுகின்றன. இதில் நோக்கியாவின் ஆஷா சிரீஸ் மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒன்று. ஆஷா-303 மற்றும் ஆஷா-300 என்ற இந்த இரண்டு மொபைல்களும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும் மொபைல்கள்.
நோக்கியா-300 மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இது 2.4 இஞ்ச் அகன்ற டிஎப்டி தொடுதிரை வசதி கொண்ட மொபைல். இன்னொரு மொபைலான ஆஷா-303 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைல். இதில் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.
ஆஷா-300 மற்றும் ஆஷா-303 மொபைல்கள், பவர்ஃபுல் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். நோக்கியா ஆஷா-303 மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியை கொண்டது. இதே ஆஷா-300 மொபைல் சாதாரண நியூமரிக் கீப்பேட் வசதியை கொண்டது.
கேமரா வசதியில் ஆஷா-300 மொபைல், ஆஷா-303 மொபைலைவிடவும் சிறப்பானதாக இருக்கிறது. 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 2592 X 1944 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை பெறுவது மிகவும் எளிதான காரியமாகிறது.
ஆஷா-303 மொபைலில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலுமே விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃப்ரேம்கள் மட்டும் வித்தியாசப்படுகிறது. ஆஷா-300 மொபைல் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களையும், ஆஷா-303 மொபைல் நொடிக்கு 15 ஃபிரேம்களிலும் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியை கொடுக்கின்றது.
ஆஷா-300 மொபைலில் உள்ள ஸ்டான்டர்டு லித்தியம் 1110 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக இயங்க துணை புரிகிறது. ஆஷா-303 மொபைலில் 1,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.      நோக்கியா ஆஷா-300 மொபைல் ரூ.5,000 விலை கொண்டதாக இருக்கும். நோக்கியா ஆஷா-303 மொபைல் ரூ.8,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.  ஆஷா-300, ஆஷா-303 மொபைல்கள், தொழில் நுட்பத்திலும், மற்றும் விலையிலும் வாடிக்கையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

Post Comment

Tuesday, January 17, 2012

ஆஸ்திரேலிய பத்திரிகை "அட்டாக்-'உதவாக்கரை இந்திய அணி!


 டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியை, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன. ரன் எடுக்க திணறிய பேட்ஸ்மேன்களை, உதவாக்கரை என படுமோசமாக விமர்சித்துள்ளன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரிசையாக முதல் மூன்று டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 3-0 என இழந்தது. இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு படுமோசமாக இருந்தது. ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள விமர்சன செய்திகள்: 
"தி ஆஸ்திரேலியன்': 
எட்டு மாதங்களுக்கு முன் நம்பர்-1 அணியாக இருந்த இந்திய அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. பலமாக கருதப்பட்ட "பேட்டிங்' தூண்கள், உடைந்து போன பயனற்ற கற்களாக காட்சி அளித்தனர். இவர்களது உதவாக்கரை ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை. முன்பு ஆஸ்திரேலிய பவுலர்களை பயமுறுத்தக்கூடியவராக இருந்த லட்சுமண், இம்முறை 2, 1, 2, 66, 31,0 என மோசமான ஸ்கோர் எடுக்க, உள்ளூரிலேயே அதிக விமர்சனங்களை சந்திக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்த கையோடு இத்தொடரில் பங்கேற்றார் சேவக். மெல்போர்னில் சூறாவளியாக 67 ரன்கள் எடுத்த இவர், பின் 7, 30, 4, 0, 10 என மட்டமான ஸ்கோரில் வெளியேறினார். தோனியும் பேட்டிங்கில் கோட்டை விட்டார். 6, 23, 57, 2, 12, 2 என குறைவான ஸ்கோர் எடுத்தார். இவரே மோசமாக விளையாடியதால், மற்ற பேட்ஸ்மேன்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த 3 டெஸ்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
பாராட்டு இல்லை:
பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் டிராவிட்டை, ஹாரிஸ் போல்டாக்கினார். உடனே அவர் பின் மிக நீண்ட தூரம் ஓடிச் சென்று, முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார் கேப்டன் மைக்கேல் கிளார்க். அதே நேரத்தில் உமேஷ் யாதவ் 5வது விக்கெட்டை பெற்ற போது, அவருக்கு கேப்டன் தோனி உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் பாராட்டு தெரிவிக்கவில்லை. 
"தி டெய்லி டெலிகிராப்': 
பத்திரிகையாளர் சந்திப்பில் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ட முதல் கேள்வியே,"வங்கதேசத்திடம் விளையாடுவதை போல் உணர்ந்தீர்களா?' என்பது தான். இதுவே இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு நல்ல உதாரணம். தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் சிக்கிய இந்திய கேப்டன் தோனி, அடிலெய்டு டெஸ்டில் பங்கேற்க முடியாது. இது ஏற்கனவே தவிக்கும் இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. "பார்ம்' இல்லாத சேவக், கேப்டன் பதவியை ஏற்க <உள்ளார். இவரது சராசரி இம்முறை 19 ரன்கள் தான். தனது சொந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சேவக், சிதறிப் போன இந்திய அணியை எப்படி மீட்க போகிறார் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இத்தொடரின் புள்ளிவிவரங்களை பார்த்தால், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் புரியும். ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சராசரியாக 47.08 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 22.9 ரன்கள் தான் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நான்கு பேர் 134 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்திய அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரே 83 ரன்கள் தான். ஆஸ்திரேலிய "வேகங்கள்' 57 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
"ஹெரால்டு சன்':
ஆஸ்திரேலிய அணி பயிற்சி உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தியது. கோடிகளில் புரளும் இந்திய வீரர்களோ, பயிற்சிக்கு பதிலாக பெரும்பாலான நேரம் மரங்களின் நிழலில் ஓய்வு எடுத்தனர். இதன் பலனை போட்டிகளில் அனுபவித்தனர்.
"சிட்னிங் மார்னிங் ஹெரால்டு':
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. அப்போது, இதே போன்றதொரு "அடி'யை இந்திய அணிக்கு கொடுக்க வேண்டும் என்று சக வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கட்டளையிட்டார். இதற்கேற்ப விக்கெட் பசியோடு காணப்பட்ட "வேகப்புயல்கள்' இந்திய அணியை சிதறடித்தனர். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் கிளார்க்.
----------
செயலற்ற கேப்டன்
இந்திய கேப்டன் தோனி குறித்து "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,""ஆஸ்திரேலியா வந்த கேப்டன்களில் மிகவும் மந்தமான, செயலற்றவராக தோனியை குறிப்பிடலாம். இவர் தாமதமாக செயல்பட்டதால், பல நேரங்களில் போட்டி கைவிட்டுப் போனது. உதாரணமாக பெர்த் டெஸ்டில் துவக்க வீரர்களான வார்னர், கோவன் இணைந்து 88 ரன்கள் சேர்த்த பின் தான், தனது அணியின் அதிவேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மாவை களமிறக்கினார்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME