ஆஸ்திரேலிய பத்திரிகை "அட்டாக்-'உதவாக்கரை இந்திய அணி!

by 9:28 AM 1 comments

 டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியை, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன. ரன் எடுக்க திணறிய பேட்ஸ்மேன்களை, உதவாக்கரை என படுமோசமாக விமர்சித்துள்ளன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரிசையாக முதல் மூன்று டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 3-0 என இழந்தது. இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு படுமோசமாக இருந்தது. ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள விமர்சன செய்திகள்: 
"தி ஆஸ்திரேலியன்': 
எட்டு மாதங்களுக்கு முன் நம்பர்-1 அணியாக இருந்த இந்திய அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. பலமாக கருதப்பட்ட "பேட்டிங்' தூண்கள், உடைந்து போன பயனற்ற கற்களாக காட்சி அளித்தனர். இவர்களது உதவாக்கரை ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை. முன்பு ஆஸ்திரேலிய பவுலர்களை பயமுறுத்தக்கூடியவராக இருந்த லட்சுமண், இம்முறை 2, 1, 2, 66, 31,0 என மோசமான ஸ்கோர் எடுக்க, உள்ளூரிலேயே அதிக விமர்சனங்களை சந்திக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்த கையோடு இத்தொடரில் பங்கேற்றார் சேவக். மெல்போர்னில் சூறாவளியாக 67 ரன்கள் எடுத்த இவர், பின் 7, 30, 4, 0, 10 என மட்டமான ஸ்கோரில் வெளியேறினார். தோனியும் பேட்டிங்கில் கோட்டை விட்டார். 6, 23, 57, 2, 12, 2 என குறைவான ஸ்கோர் எடுத்தார். இவரே மோசமாக விளையாடியதால், மற்ற பேட்ஸ்மேன்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த 3 டெஸ்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
பாராட்டு இல்லை:
பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் டிராவிட்டை, ஹாரிஸ் போல்டாக்கினார். உடனே அவர் பின் மிக நீண்ட தூரம் ஓடிச் சென்று, முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார் கேப்டன் மைக்கேல் கிளார்க். அதே நேரத்தில் உமேஷ் யாதவ் 5வது விக்கெட்டை பெற்ற போது, அவருக்கு கேப்டன் தோனி உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் பாராட்டு தெரிவிக்கவில்லை. 
"தி டெய்லி டெலிகிராப்': 
பத்திரிகையாளர் சந்திப்பில் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ட முதல் கேள்வியே,"வங்கதேசத்திடம் விளையாடுவதை போல் உணர்ந்தீர்களா?' என்பது தான். இதுவே இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு நல்ல உதாரணம். தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் சிக்கிய இந்திய கேப்டன் தோனி, அடிலெய்டு டெஸ்டில் பங்கேற்க முடியாது. இது ஏற்கனவே தவிக்கும் இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. "பார்ம்' இல்லாத சேவக், கேப்டன் பதவியை ஏற்க <உள்ளார். இவரது சராசரி இம்முறை 19 ரன்கள் தான். தனது சொந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சேவக், சிதறிப் போன இந்திய அணியை எப்படி மீட்க போகிறார் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இத்தொடரின் புள்ளிவிவரங்களை பார்த்தால், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் புரியும். ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சராசரியாக 47.08 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 22.9 ரன்கள் தான் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நான்கு பேர் 134 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்திய அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரே 83 ரன்கள் தான். ஆஸ்திரேலிய "வேகங்கள்' 57 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
"ஹெரால்டு சன்':
ஆஸ்திரேலிய அணி பயிற்சி உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தியது. கோடிகளில் புரளும் இந்திய வீரர்களோ, பயிற்சிக்கு பதிலாக பெரும்பாலான நேரம் மரங்களின் நிழலில் ஓய்வு எடுத்தனர். இதன் பலனை போட்டிகளில் அனுபவித்தனர்.
"சிட்னிங் மார்னிங் ஹெரால்டு':
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. அப்போது, இதே போன்றதொரு "அடி'யை இந்திய அணிக்கு கொடுக்க வேண்டும் என்று சக வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கட்டளையிட்டார். இதற்கேற்ப விக்கெட் பசியோடு காணப்பட்ட "வேகப்புயல்கள்' இந்திய அணியை சிதறடித்தனர். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் கிளார்க்.
----------
செயலற்ற கேப்டன்
இந்திய கேப்டன் தோனி குறித்து "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,""ஆஸ்திரேலியா வந்த கேப்டன்களில் மிகவும் மந்தமான, செயலற்றவராக தோனியை குறிப்பிடலாம். இவர் தாமதமாக செயல்பட்டதால், பல நேரங்களில் போட்டி கைவிட்டுப் போனது. உதாரணமாக பெர்த் டெஸ்டில் துவக்க வீரர்களான வார்னர், கோவன் இணைந்து 88 ரன்கள் சேர்த்த பின் தான், தனது அணியின் அதிவேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மாவை களமிறக்கினார்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கம்! நன்றி நண்பரே! அன்புடன் அழைக்கிறேன் :"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"