ஆதார்-நடைமுறை சிக்கலுக்குத் தீர்வு


இந்தியாவில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் இந்திய தனி அடையாள அட்டை ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அத்திட்டத்தில் மக்களின் விவரங்களைப் பதிவு செய்யும்.
அதேநேரத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவு அமைப்பான என்.பி.ஆர். மற்ற மாநிலங்களில் அந்தப் பணியை மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டி, பயோமெட்ரிக் பதிவுகளை எந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு பிரதமருக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
யு.ஐ.டி.ஏ.ஐ. திட்டக் கமிஷன் அதிகாரத்துக்கு உட்பட்டும், என்.பி.ஆர். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.
அதையடுத்து, அந்தப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்வதற்கான அமைச்சரவைக் குழு கூடி விவாதித்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சுமார் 95 அல்லது 96 சதம் பயோமெட்ரிக் பதிவுகளை ஒரே அமைப்பு மேற்கொள்ளும் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கவலைகளை யு.ஐ.டி.ஏ.ஐ. கவனத்தில் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டபிறகு, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், மசோதா ஒன்றும் கொண்டுவரப்படும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
ஏற்கெனவே, யு.ஐ.டி.ஏ.ஐ. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: