பிசிசிஐ செயற்குழு கூடி விவாதம்

இந்திய அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்புடன் இருந்து வரும் நிலையில் இந்திய அணியின் தோல்விகள் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் பி்ப்ரவரி 13ம் தேதி கூட்டியுள்ளனர். அன்று அணியில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்வுள்ளது.

இங்கிலாந்துக்குப் போன இந்திய கிரிக்கெட் அணி அங்கு பெரும் தோல்வியைச் சந்தித்தது. டெஸ்ட்டில் முதல் தர வரிசையில் இருந்த நிலையையும் பறி கொடுத்து விட்டு பரிதாபமாக திரும்பியது.

ஆனால் உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பாக ஆடியது. ஆனால் தற்போது மறுபடியும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அடி வாங்கி வருகிறது. டெஸ்ட் தொடரையும் இழந்து விட்டது.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.இப்படி வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதும், உள்ளூரில் சிறப்பாக ஆடுவதுமாக இருந்தால் எப்படி.எங்கு ஆடினால் என்ன சிறப்பாக விளையாட வேண்டியதுதானே என்று அவர்கள் நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

மேலும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இளம் வீரர்களுக்கு முறையாக, நியாயமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 13ம் தேதி கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது. அப்போது இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்தும், அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments: