ஓய்வூதியம் பெற ஸ்மார்ட்கார்டு : ஜெ. அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோர் இனி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயோமெட்ரிக் கார்டுகள் மூலம் வங்கி ஏடிஎம்களில் பணம் பெறும் திட்டத்தை விரிவாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை வங்கிகள் மூலமாக பயோமெட்ரிக் ஸ்மார்ட் அட்டையினை பயன்படுத்தி வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டார். இம்முன்னோடித் திட்டத்தின்படி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளிகளின் பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்படும். பயனாளிகளின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட அட்டையை பயன்படுத்தி வங்கி சேவையாளர்கள் மூலமாக பயனாளிகளின் கிராமத்திற்கு நேரில் சென்றே பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார் கோவில் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டம் ஆகிய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முன்னோடித் திட்டம் பயனாளிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இம்முன்னோடித் திட்டத்தினை மாநிலத்திலுள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். 

மூன்று கட்டமாக செயல்படுத்தப்படும்

இம்முன்னோடித் திட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 4,385 கிராமங்களில் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி வங்கிகள் மூலம் ஓய்வூதியத் தொகையை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த 4,385 கிராமங்களிலும் இத்திட்டம் இந்த வருடம் ஜுன் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும். 

இரண்டாம் கட்டமாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,000 முதல் 2,000 வரை மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி வங்கிகள் மூலம் ஓய்வூதியத் தொகை வழங்கும் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்றாம் கட்டமாக இதர கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் மூலம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: