NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Wednesday, March 7, 2012

ஃபிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதை

Time Guerilla’ என்ற பெயரில் ஃபிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதை வெளிவந்துள்ளது

டுத்து உறங்குவதற்கு முன்னால், மறக்காமல் தலையணைக்குக் கீழே கொஞ்சம் புல்லையும் அருகிலுள்ள  மேஜையில் கொஞ்சம் தண்ணீரையும் எடுத்து வைத்தான் காஸ்ட்ரோ. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6ம் தேதி, கிறிஸ்துவைப் பார்த்து மரியாதை செலுத்த மூன்று ஞானிகள் வானத்தில் இருந்து வருவார்கள். வரும்போது கைநிறைய பரிசுப்பொருள்கள் கொண்டுவருவார்கள். இந்த ஞானிகளை ஓர் ஒட்டகம் சுமந்துவரும். களைத்து வரும் ஒட்டகத்தின் சோர்வைத் தீர்க்கத்தான் புல்லும் நீரும். ஆனால், மூன்று ஆண்டுகள் காத்திருந்த பிறகும் குறிப்பிடும்படியான பரிசு எதுவும் காஸ்ட்ரோவுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்னொருமுறை முயன்று பார்ப்பதில் தவறில்லையே நம்பிக்கையுடன் உறங்கினான் காஸ்ட்ரோ.

மறுநாள் கண்விழித்தது அவசரமாகத் தேடியபோது, அட்டையால் செய்யப்பட்ட ஓர் ஊதுகுழல் மட்டுமே கிடைத்தது. ஏமாற்றமாகிவிட்டது காஸ்ட்ரோவுக்கு. ஏன், நான் விரும்பியது கிடைக்கவில்லை? என் மீது ஒட்டகம் கோபம் கொண்டுவிட்டதா? ஞானிகளும்கூடவா கோபித்துக்கொண்டு விட்டார்கள்? எதற்கும் உதவாத இந்த அட்டை பொம்மையை வைத்து என்னதான் செய்யமுடியும்? அல்லது இந்தக் கதைகளே பொய்யாக இருக்குமோ? வரவே போகாத ஒட்டகத்தையும் வானத்தில் இல்லாத ஞானிகளையும் நினைத்து இத்தனை நாள் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு விட்டேனா?

விடைகளைத் தேட ஆரம்பித்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ முதலில் ஒரு நாத்திகவாதியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் முடிவில் கம்யூனிஸ்டாகவும் மாறிப்போனார். ‘நினைவு தப்பிக்கொண்டிருக்கிறது. அதனால், முடிந்தவரை எல்லா செய்திகளையும் பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்தப் புத்தகம் உருவானது’ என்று சொல்லி புன்னகை செய்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

பிப்ரவரி 3ம் தேதி காஸ்ட்ரோ, தன் சுயசரிதையை வெளியிடப்போகிறார் என்னும் செய்தி வெளியானதிலிருந்தே க்யூபர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைக்கப்போகும் அரிய தரிசனம் இது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவரைப் பார்க்க முடிந்தது. அதுவும்கூட சில நிமிடங்கள்தான். அதுவும் திரையில்! மற்றபடி, பொது நிகழ்ச்சியில் நேரடியாகப் பார்த்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஹவானா கருத்தரங்க மையத்துக்கு உள்ளேயும் வெளியிலும் கூட்டம் கூட்டமாகத் திரண்டிருந்தார்கள். ஃபிடல், ஃபிடல்!

காஸ்ட்ரோ அரங்கில் கால் பதித்தபோது, ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது. பலரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர்களில் பலர், தங்கள் வாழ்நாளில் காஸ்ட்ரோவைத் தவிர இன்னொரு க்யூபத் தலைவரைக் கண்டதில்லை. நாற்பத்து எட்டு ஆண்டுகள் க்யூபாவை ஆட்சி செய்த ஃபிடல், அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஃபிடல், உதவியாளர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்தார். அடர்த்தியான வண்ணத்தில் டிராக் சூட். நீல நிறச் சட்டை.

ஆனால், பேசத் தொடங்கியதும் புன்சிரிப்பும் உற்சாகமும் அவரைப் பற்றிக்கொண்டது. ‘எனக்குப் பழைய கடிகாரங்கள், பழைய காலணிகள், பழைய மூக்குக் கண்ணாடிகள் ஆகியவை மிகவும் பிடிக்கும். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை எல்லாமே புதிதாக இருக்கவேண்டும்!’

‘Time Guerilla’ என்பது அவர் வெளியிட்ட ஸ்பானிஷ் நூலின் பெயர். குழந்தைப் பருவம் தொடங்கி, பதவியைக் கைப்பற்றிய டிசம்பர் 1958 வரையிலான விரிந்த காலகட்டம் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் இரு தொகுதிகளில் தொகுக்கப்பட்டிருக்கிறது. கடியுஸ்கா பிளாங்கோ என்னும் பத்திரிகையாளரிடம் காஸ்ட்ரோ மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட ஒட்டகச் சம்பவம் மட்டுமல்ல,‘நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத பல செய்திகள் இந்த இரு நூல்களில் உள்ளன!’ என்றார் காஸ்ட்ரோ.

உடல் நலமின்மை காரணமாக 2006ம் ஆண்டு  தாற்காலிகமாக ஓய்வு பெற்றுக்கொண்ட காஸ்ட்ரோ, அடுத்த இரு ஆண்டுகளில் முற்றிலுமாக அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் பொறுப்புகள் சென்றன. ‘இனி அரசியலில் தலையிடமாட்டேன்’ என்று அறிவித்தாலும் உள்ளூர் செய்திகள் தொடங்கி, அயல்நாட்டுச் செய்திகள் வரை பலவற்றைக் குறித்த தன் கருத்துகளை க்யூபாவின் அதிகாரபூர்வ ஏடான ‘கிரான்மா’வில் தொடர்ந்து எழுதி வந்தார்.

மேடையிலும், தொழில்நுட்ப வளர்ச்சி, சமகால அரசியல் நிகழ்வுகள், தன்னைச் சந்தித்த வெளிநாட்டுப் பிரமுகர்கள் என்று பல விஷயங்களை நினைவுகூர்ந்தார் காஸ்ட்ரோ.  ‘சோஷலிசத்தைக் கொண்டுவந்துவிட்டாலே பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நினைப்பது தவறு!’ என்றார்.

‘உங்களால் எப்படி இவ்வளவு உற்சாகமாக இருக்க முடிகிறது?’ என்று முன்பொருமுறை கேட்கப்பட்டபோது காஸ்ட்ரோ அளித்த விடை, ‘புத்தகங்கள்.’ காஸ்ட்ரோவின் வாசிப்பு வழக்கத்தை நேரில் கண்ட தோழர்களின் குறிப்புகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை.
பொறுப்பு வகித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் 5 அல்லது 6 புத்தகங்களை மாறி மாறி வாசிப்பது அவர் வழக்கம். திடீரென்று இந்த 6 புத்தகங்களையும் அப்படியே வைத்துவிட்டு வேறு ஒரு புதிய துறை சார்ந்த புத்தகத்துக்குத் தாவி, மீண்டும் பழைய புத்தகங்களை அடைவது வழக்கம்.

தினமும் தோழர்கள்தான் அவர் வாசிக்க வேண்டிய செய்தித்தாள்களை சேகரித்து அடுக்கிவைப்பது வழக்கம். சில செய்திகளை, இது இவருக்கு வேண்டாமே என்று நினைத்து விட்டுவிடுவார்கள். மிகச் சரியாக அதைத்தான் தேடிப்பிடித்து படித்துவிட்டு தோழர்களுடன் சண்டையிடுவார் காஸ்ட்ரோ. ‘இவருக்கு எது முக்கியம், எது முக்கியமல்ல என்று தீர்மானிப்பது மிக மிக சிரமமானது!’ என்று அவர்கள் சலித்துக்கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு பற்றிய நீண்ட புத்தகம் இவருக்கு நிச்சயம் தேவையிருக்காது என்றுதான் தோழர்கள் நினைப்பார்கள். ஆனால், எங்காவது ஓர் அறிக்கையில் கோழி வளர்ப்பு பற்றிய விவாதம் எழுப்படும்போது, அந்தப் புத்தகத்தை உடனடியாகக் கொண்டு வரச் சொல்லி கேட்பார்.

ஒருமுறை செய்தித்தாளில் வெப்பமண்டல விவசாயம் எனும் பதத்தைப் பார்த்திருக்கிறார். இதென்ன புதிதாக இருக்கிறதே என்று அது பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றை படித்திருக்கிறார். அதில் கொடுக்கப்பட்ட விவரங்கள் போதாமல் போகவே, ஒரு சிறிய புத்தகம். பிறகு மற்றொரு புத்தகம். இப்படி சிறிது சிறிதாக முன்னேறி 100 புத்தகங்களை வாசித்துவிட்டு ‘ஓ இதுதானா வெப்பமண்டல விவசாயம்!’ என்று ஆச்சரியப்பட்டுவிட்டு அந்தத் துறையைவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

இப்போது காஸ்ட்ரோவுக்கு 85 வயதாகிறது. தன்னுடைய வாசிப்பு வழக்கத்தை அவர் அதிகம் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. ட்விட்டரில் சமீபத்தில் வந்த தன் மரண அறிவிப்புச் செய்தியை வாசித்ததாகவும் ரசித்ததாகவும் சொன்னார். தன் உரையை காஸ்ட்ரோ இப்படி முடித்துக்கொண்டார்: ‘நம்முடைய நாட்டுக்காக, நம்முடைய கிரகத்துக்காக, மனித இனத்துக்காக நாம் கடைசி வினாடிவரை போராட வேண்டியது நமது கடமையாகும்.’ காஸ்ட்ரோ இந்த நிமிடம் வரை உயிர்த்திருப்பதற்குக் காரணம், இந்தப் போராட்ட உணர்வுதான்.

Post Comment

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான 59வது தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)

சிறந்த பொழுது‌போக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)

அறிமுக இயக்குநருக்கான விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்) 

சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)

சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)

சிறந்த படம் - ஐ யாம்

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்

சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி


வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.

தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.

Post Comment

பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.

சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ்.

ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை இன்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அதில் பர்ட்டன் எழுதியுள்ளதாவது:

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.

மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது.

இதனால் முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் அந்த உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார்.

அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அதை தீவிரவாதிகள் னைவுச் சின்னமாக்கிவிடுவர் என்பதாலும், ஒசாமா இறந்தாலும் அவரது கொள்கைகளைப் பரப்ப அது ஒரு மையமாகமும் அடையாளமாகவும் ஆகிவிடும் என்பதாலும் ஒசாமாவை கடலில் புதைத்ததாக அமெரிக்கா சொல்லி வருவதாகத் தெரிகிறது.

Post Comment

Tuesday, March 6, 2012

கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் பட்டம்

கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர்.
இறுதி ஆட்டம் முழுக்கவும் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதற்கொண்டே இந்திய மகளிரின் கைகள் ஓங்கியிருந்தன.
பாட்னாவின் கன்கெர்பாக் பகுதியில் அமைந்துள்ள பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கத்தில் நடந்த இறுதியாட்டத்தில் பெருந்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவி மமதா புஜாரிக்கு பிஹார் முதல்வர் சுஷில் குமார் மோடி பரிசுக் கோப்பையையும், இந்திய அணியின் வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.
முன்னதாக அரையிறுதி ஆட்டங்கள் ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் ரசிகர்கள் மற்றும் பொலிசார் இடையில் அரங்கத்தின் வெளியே தகராறு மூண்டதாகவும் ஆத்திரம்கொண்ட ரசிகர்கள் பொலிசார் மீது கல்லெறிந்ததாகவும், பொலிசார் தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post Comment

5 விருதுகளை அள்ளிய மங்காத்தா சிங்கப்பூர் விழாவில்...

சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் அஜீத்தின் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது.

ஐஎம்என் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 3ம் தேதி சிங்கப்பூரில் நடந்தது. அந்த விழாவில் சிறந்த படம் உள்பட அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிக் குவித்தது அஜீத் குமாரின் 50வது படமான மங்காத்தா சாதனை படைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர் வெங்கட் பிரவு, சிறந்த ஒளிப்பதிவாளர்(சக்தி சரவணன்), சிறந்த பாடகி(சுசித்ரா) மற்றும் சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி அமரன்) ஆகிய 5 பிரிவுகளில் மங்காத்தாவுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

அண்ணன் வெங்கட் பிரபுவும், தம்பி பிரேம்ஜி அமரனும் மங்காத்தாவுக்காக விருது பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பு சிறந்த நடிகர்-ஸ்ரேயா சிறந்த நடிகை

வானம் படத்திற்காக சிலம்பரசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரௌத்திரம் படத்திற்காக ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருது எங்கேயும், எப்போதும் படத்துக்காக ஜெய்க்கு கிடைத்தது. 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி, சந்தியா, மேக்னா நாயுடு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME