பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக் காமல் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்களுக் கெல்லாம் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர் சனமான உண்மை.

தேசிய வழிகாட்டி சேவை

அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 5 சுமை தூக்குவோர் பணியிடங்களுக்காக அரசுத் தேர் வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்தனர். இந்தப் பணியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எம்.ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள், 12-ம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், 10-ம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர், அதற்கும் குறைவான பள்ளிப்படிப்பை முடித்த 177 பேர் என 2,424 பேர் விண்ணப் பித்திருந்தனர்.

இப்படி அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Carrier Service (தேசிய வழிகாட்டி சேவை) இணைய தளத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது படித்த பட்டதாரிகளின் தகவல்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகங்களிலும் இந்த இணையத்தின் மூலம் இடம்பெறச் செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். அந்தத் தகவலைக் கொண்டு வேலை தேடுபவர் வேலை பெறலாம்.
பட்டதாரிகள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் என்ன மாதிரியான வேலையை, எந்தத் துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித் தால் தொடர்புடைய அரசு மற் றும் தனியார் வேலைவாய்ப்பு களை விண்ணப்பதாரரின் செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவலாக தருகிறார்கள்.

வேலை வழிகாட்டி பணி

        படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தேசிய வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல் கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.

இணையத்தில் பதிவு செய்ய..

இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத் தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ளூர் சேவை, பணித்திறன் பயிற்சிகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பெறலாம்.இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம் என்றார்.
இந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம். ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விளக்கம் தருகிறார்கள்.

source.hindu


பலியானோர் கணக்கு!
# ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர். சிகரெட் மட்டுமல்லாமல் பீடி, நேரடி புகையிலை போன்ற மற்றப் பொருட்களும் இதற்குக் காரணமாக உள்ளன. இறப்பவர்களில் 83 சதவீதம் பேர் தற்போது புகைப்பவர்கள் அல்லது முன்னால் புகைத்தவர்கள்.
# இப்படி இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17 சதவீதம் பேர் பலியாகிறார்கள். இப்படி 2004-ம் ஆண்டில் நேரடியாகப் புகைக்காமல் இறந்தவர்களில் 31 சதவீதம் பேர் குழந்தைகள்.
# 20-ம் நூற்றாண்டில் புகையிலைப் பயன்பாட்டால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடி பேர்.
# இதேபோலப் புகைபிடித்தல், புகையிலைப் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருந்தால், 21-ம் நூற்றாண்டில் இறக்கப் போகும் நபர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும்.
# உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.
# உலக இளைஞர்களில் நான்கில் மூன்று பேர் புகை பிடிப்பதன் காரணமாக ஏற்படும் இதயக் கோளாறாலேயே இறக்கிறார்கள்.
# புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட சராசரியாக இத்தனை ஆண்டுகள் முன்னதாகவே இறந்துபோகிறார்கள்: ஆண்கள் : 13.2 ஆண்டுகள் - பெண்கள்: 14.5 ஆண்டுகள்
# புகை பிடிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கை, கால்களுக்கு ஆக்சிஜன் செல்வதைப் புகை பிடிப்பது தடுப்பதால், உடல் ஊனம் ஏற்படலாம்.
# புகை பிடிப்பதால் வரும் எப்சீமியா என்னும் நோய் நுரையீரல் செயல்பாட்டு திறனைக் குறைக்கும். அடிக்கடி மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படும். விளைவாக நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.
# புகை பிடிக்காமல் இருப்பதால் சேமிக்கப்படும் பணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், எவ்வளவு பணத்தைப் புகைப்பதில் கொட்டுகிறோம் என்பது புரியும். ஏனென்றால், இன்றைக்கு மிகக் குறைந்த அளவு என்று வைத்துக் கொண்டாலும்கூட ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5-லிருந்து ரூ. 10 வரை.
# ஆண்டுதோறும் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக 3,000 பேர் நுரையீரல் புற்றுநோயாலும், 46,000 பேர் இதய நோய்களாலும் இறக்கின்றனர்.
# ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றாலும் புகையிலை பயன்பாடு காரணமாகவே உலக அளவில் உற்பத்தி இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. மதுப் பழக்கம், மருத்துவ அவசரகாலச் சிகிச்சைகளால் இழக்கப்படும் நேரத்தைவிட இதனால்தான் உற்பத்தி இழப்பு அதிகம்.
# ரோட்டில் போடப்படும் தார் சிகரெட்டில் அதிகம் இருக்கிறது. இது நுரையீரலில் படிகிறது, புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது.
# ஒரு சிகரெட்டில் 4000 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் 250 வேதிப்பொருட்கள் மோசமானவை. 50 வேதிப்பொருட்கள் புற்றுநோய்க் காரணிகள்.
# புகை பிடிப்பதால் மயக்கம் வரும், சுவையும் மணத்தையும் நன்றாக உணர முடியாது, மூச்சிளைப்பும் தொடர் இருமலும் ஏற்படும், உடல் எதிர்ப்புசக்தியை இழக்கும்.
# புகைப்பதால் உடலில் சேரும் கார்பன் மோனாக்சைடு உடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதால் தசை, மூளை, உடல் திசுக்களும் குறிப்பாக இதயமும் கடுமையாக வேலை பார்க்க வேண்டி வரும். காலப்போக்கில் நுரையீரலுக்கு முழு சுவாசமும் செல்லாது.

thanks.hindu
கரூரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். சென்னையில் கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர். அங்கேயே வேலை தேடிக் கொண்டவர். ஒரு விபத்து காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியவர் திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. ஊர்மணம் செல்லவிடவில்லை. இப்போது வீட்டுத் தோட்டம் உருவாக்கித் தரும் பெரிகாளி என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கூடவே கைவல்யம் என்கிற நர்சரி பண்ணையும் சென்னை அண்ணா நகரில் வைத்துள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.
கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்சில் எம் எஸ் படித்தேன். மீண்டும் அமெரிக்கா செல்ல பல வாய்ப்புகள் அமைந்தும் போக மனம் வரவில்லை. விருப்பமாகவும் இல்லை. இங்கேயே ஒரு தொழில் தொடங்கிக் கொண்டு செட்டிலாகலாம் என யோசித்தேன். அதன் பிறகு நானும் எனது நண்பரும் சேர்ந்து கமாடிட்டி டிரேடிங் தொழில் மேற்கொண்டோம். இதற்கிடையே எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ஓய்வெடுத்த காலத்தில் இயற்கை தோட்டங்கள் கொடுத்த அமைதி என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. அதனால் நர்சரி தொழில் தொடங்கினால் வருமானமும் கிடைக்கும், மன அமைதியும் கிடைக்கும் என்பதால் கமாடிட்டி தொழிலில் எனது பங்கை நண்பரிடம் விற்றுவிட்டு இந்த தொழிலை தொடங்கினேன்.

ஆனால் இந்த தொழில் வெளியிலிருந்து பார்ப்பதுபோல சாதாரணமானது அல்ல என்பதை தொழிலில் இறங்கியதும் தெரிந்து கொண்டேன். இந்த உலகம் ஒரு தனி உலகம். ஒவ்வொன்றுக்கும் தனித் தனி நுணுக்கங்கள் வேண்டும். சாதாரணமாக ஒரு செடி என்று பொதுவாக சொல்லிவிடலாம். ஆனால் அதற்கு பின்னே அழகுக்காக, வாஸ்து, காய்கறி, ஆர்கிட் என பல வகைகள் உள்ளன. வீட்டுக்கு உள்ளே, வீட்டுக்கு வெளியே, வெயில் தாங்கும், நிழலில் வைப்பது, பாரமரிப்பு சார்ந்து ஒவ்வொன்றும் ஒரு விதமானது. இதற்காக நான் முழுமையாக தயாராக வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

நர்சரி தொடங்கி நடத்திக் கொண்டிருக் கும்போதே இது தொடர்பாக பல பயிற்சி களுக்கும் செல்லத்தொடங்கினேன். தோட்டக்கலைத்துறை மற்றும் பிற தனியார் அமைப்புகளின் பயிற்சிகளுக்குச் சென்றேன். இதற்காக பெங்களூரு, சிங்கப்பூர் என துறை சார்ந்து பயிற்சி பட்டங்கள் பெற்றேன். நர்சரி தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் அனுபவம் மற்றும் பயிற்சிக்கு பிறகு தொழில்முறையாக தோட்டம் அமைத்து கொடுக்கும் பெரிகாளி நிறுவனத்தை தொடங்கினேன். வீடுகளில் மாடித்தோட்டம், புல்வெளிகள், ஹோட்டல்கள், ஓய்வு இல்ல பூங்கா அமைப்பது என தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும், இடத்துக்கேற்பவும் இப்போது தோட்டங்களை அமைத்துக் கொடுத்து வருகிறேன்.

வாடிக்கையாளர்களின் இடத்துக்குச் சென்று இடத்தை பார்வையிட்டு தோட்டத்தை எப்படி அமைக்கலாம் என்கிற வடிவமைப்பை அவருக்குக் காட்டுவோம். அவர்களின் தேவை வேறொன்றாக இருந் தாலும், இடத்துக்கு பொருத்தமானதை எடுத்துச் சொல்லுவதுதான் இந்த தொழிலில் முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் ஒன்று கேட்கிறார்கள் என்று அமைத்துக் கொடுத்துவிட முடியாது. அதிலிருந்து கிடைக்கும் பலன் சார்ந்த விஷயங்கள்தான் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான மதிப்பு என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது பழ மரங்கள், காய்கறி செடிகள், கொடி வகைகள், அழகு செடிகள் தவிர போன்சாய், ஆர்கிட் என பல வகைகளிலும் தயார் செய்கிறோம். ஆனால் மரம், செடி,கொடிகள் என எல்லா வகைகளையும் நாங்களே உற்பத்தி செய்வதில்லை. செடி, கொடி வகைகளை தேவைக்கேற்ப வெளியிலிருந்தும் வாங்கிக் கொள்கிறோம். மர வகைகளை உருவாக்க ஆழியாறு பக்கத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம். அங்கிருந்து அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கொண்டு வருகிறோம். தற்போது 12 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை இதன் மூலம் உருவாக்கியுள்ளேன். ஆர்டர்களுக்கு ஏற்ப அவ்வப்போது வேலை ஆட்களை கூடுதலாக அழைத்துக் கொள்வது உண்டு.
இந்த தொழிலை மேற்கொள்வதற்கு அடிப்படை விஷயம் இதை தொழிலாக மட்டும் பார்க்கக்கூடாது. 
          இது நாம் ஒவ்வொருவரும் இயற்கைக்கு செலுத்த வேண்டிய கடமை. ஆனால் இதை எல்லோரும் செய்வதில்லை என்பதால்தான் லாபம்தரும் தொழிலாக மாறியுள்ளது. ஒவ்வொரு தோட்டம் அமைத்த பிறகும், பராமரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பராமரிப்பு வேலைகளையும் நாங்களே மேற்கொள்கிறோம். ஏனென்றால் செடிகள் செழிப்பாக வளர்வது வாங்கியவருக்கு மட்டுமல்ல, எனக்கும் சந்தோஷம் தருகிறது.

source:hindu- maheswaran.p@thehindutamil.co.in
வாழ்க்கையில் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது யாரும் கடவுளை நினைப்பதில்லை. துன்பம் நேரும்போதுதான் கோயிலுக்கு அலைமோதுகிறார்கள். இந்த வாழ்க்கை எனும் பரமபதத்தில் பாம்பிடம் கடிபட்டு நொடிப்பொழுதில் கீழிறங்கி விடும் மனிதர்களையே இங்கு ஏராளம் காண்கிறோம்! ஏன் இந்த நிலை? இந்த பரமபத விளையாட்டை வெல்ல என்ன வழி?! இதோ சத்குரு சொல்கிறார்.

கடந்தகால கர்மவினை எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். 30 வயதுக்குள் 10 கோடி ரூபாய் சம்பாதித்தித்தாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அதை செலவழிக்கலாம் அல்லது அதை வளர வைக்கலாம். கடந்த காலத்தில் உங்களுக்குள் சில வளங்களை நீங்கள் உருவாக்கியிருப்பீர்கள். இந்தப் பிறவியில் ஒன்று அதை வளர்க்கலாம், அல்லது வீணடிக்கலாம். விழிப்புணர்வு இல்லாத நிலையில் அது விரயமானால் கூட மிக நிச்சயமாக உங்களுக்குள் அதனுடைய தன்மை ஏதாவது இருக்கும். உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளால் உங்களுக்குள் இருக்கிற அந்த வளங்கள் இப்போது பொருளாதார வளமாக வெளிப்படலாம். ஒரு நல்ல வீடு, சரியான சூழல், உங்களைச் சுற்றி நல்லவர்கள் இருப்பது போன்றவை. இவை எல்லாம் இருந்தும் கூட அதை நீங்கள் பயன்படுத்தாமல் சோம்பலாக விட்டுவிடவும் கூடும். இதுதான் முழுச்சுற்று. முழுத்தொடர்ச்சி. 

இந்த முழு விளையாட்டே பரமபதம் ஆட்டம் போல் இருக்கிறது என்று நான் திரும்பத் திரும்ப சொல்லுகிற காரணம், ஏணிகளில் ஏறுகிறபோது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நல்ல கர்மவினைகளின் காரணமாக வருகிற வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ஒரு காலக்கட்டத்தில் மீண்டும் பாம்பு கடித்து கீழே இறங்குகிறீர்கள். அப்போது மீண்டும் துன்பம் துவங்குகிறது. என்னவென்று பார்த்து மீண்டும் வளரத் துவங்குகிறீர்கள். மீண்டும் கீழே போகவும் நேரும். இப்படித்தான் முட்டாள்தனமாக தங்கள் சக்திநிலைகளை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போதிய அளவு அறிவுக் கூர்மையாக உள்ளவர்கள், ஒவ்வொரு மூச்சையும் வளர்ச்சியை நோக்கி ஒரு அடியாகத் எடுத்து வைக்க முடியும். அதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. பலமுறை ஒரு மனிதருக்கு நினைவுபடுத்தியும் கூட விழித்துக்கொள்ளாமல் தங்கள் வசதிக்குள்ளேயே தூங்கிக் கொண்டு இருந்தால் நாங்கள் ஏதும் செய்ய இயலாது. அவர் மீண்டும் துன்பப்பட்டு வளர்ச்சிக்கான முயற்சியில் இறங்க வேண்டியதுதான். 

இந்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மக்களுக்குக் கூட முழுமையான ஆன்மீக வளர்ச்சி நிகழ்வதில்லை. மற்றவர்கள் நல்லது நடக்கிறபோது சிரிக்கிறார்கள், தீமை நடக்கிறபோது அழுகிறார்கள். எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொண்டு சமச்சீராக இருப்பவர்கள் இந்த உலகில் மிகச் சிலர்தான். அவர்களுக்கு எதுவும் ஒரு பெரிய மகிழ்ச்சியுமில்லை, எதுவும் பெரிய சிக்கலுமில்லை. எல்லாமே அவர்கள் விடுதலை அடையக்கூடிய வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகள் தான். மற்றவர்கள் சூழல் எப்படி தள்ளுகிறதோ, அதற்கேற்ப ஆடு, மாடுகளைப் போல போவார்கள். மனித உடம்பிலிருக்கிறார்களே தவிர அடிப்படையில் வேறு வித்தியாசமில்லை.
இன்று மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கும், விலங்குகள் வாழ்கிற வாழ்க்கைக்கும் தரத்தின் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன? எண்ணிக்கையளவில் வேண்டுமானால் இருக்கலாம். உங்கள் செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள், டெலிவிஷன் பார்க்கிறீர்கள், பல அபத்தங்களைச் செய்கிறீர்கள். ஆனால் தரத்தின் அடிப்படையில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. அந்த வித்தியாசம் வரவேண்டுமானால் அது விழிப்புணர்வு மூலமாகத்தான் வரமுடியும். வேறு வழியில்லை. 
புத்திக்கூர்மையை பலரும் விழிப்புணர்வு என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விழிப்புணர்வு என்பது இன்னும் ஆழமான ஒரு பரிமாணம். உங்களுக்குள் விழிப்புணர்வு எழுகிறபோது அன்பும், பரிவும் இயல்பாகப் பெருகும். அதன்பின் உங்கள் ஒவ்வொரு சுவாசமும் கூட வளர்ச்சியை நோக்கிப் போகும் ஒரு படிநிலையாக அமையும்.

source.dinamalar

காட்பாடி அருகே மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரியை எளிதில் மறந்திருக்க முடியாது.
சவுதிக்கு வீட்டு வேலைக்கு சென்று, மொழியறியாத தேசத்தில் பல மாதம் கஷ்டங்களை அனுபவித்ததோடு, தன் ஒரு கையையும் பறிகொடுத்து, குற்றுயிரும் குலையுமாக நாடு திரும்பியவர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம்.

வலது காலும் முறிந்துள்ளது. முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அனுபவங்கள் அவர் மனதிலிருந்து  இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவரது முகம் காட்டுகிறது. எழுந்து நடக்கவே சிரமப்பட்டவரிடம், "என்ன நடந்தது?" என்றோம். 

"எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் ஒழுங்கா வேலைக்கு போகலை. பையன் கட்டட வேலைக்கு போய் குடும்பம் நடத்தவேண்டியதா இருந்துச்சு. ஒருநாள் வேலைசெய்றபோது தடுமாறி விழுந்து அவனுக்கு கால் உடைஞ்சு, தொடர்ந்து வேலைக்கு போக முடியாம ஆகிவிட்டது.குடும்பத்துக்கு வருமானமே இல்லாம போச்சு.  கடன் வாங்கி பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திட்டு அந்த கடனையும் திருப்பி கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையிலதான் பையனுக்கு தெரிஞ்ச ஒருத்தர்,  'வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு நல்ல சம்பளம் தராங்க'னு சொல்ல, சரின்னு அங்க போறதுக்கு முடிவு செய்தேன். 

புருஷனும் வேலைக்கு போறதில்லை. பையனுக்கும் அடிபட்டுப்போச்சு. நாமதான் இனி குடும்பத்தை கரைசேர்க்கணும்னு வெளிநாட்டு வேலைக்கு போனேன். நல்ல சம்பளம் தருவாங்க. நம்ம வாழ்க்கை வறுமையும் போயிடும்னு நம்பிப்போனேன். ஆனா கையை இழந்து, காலும் செயல்படாமபோய், இப்போ என்னோட வேலைகளையே என்னால செஞ்சுக்க முடியலை."- கதறி அழுகிறார் கஸ்துாரி.

மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தியவரிடம் "அங்கு வேலைச் சூழல் எப்படி இருந்தது?"  என்றோம்.
" ரியாத்ல எனக்கு வேலை. அரபிக்காரங்க ஒருத்தங்களோட 65 வயசு அம்மாவ பாத்துக்கணும். அவங்க வீட்டு வேலையை எல்லாம் செய்யணும். துணி துவைக்கறது, வீட்டை சுத்தம் பண்றது, அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். காலைல எந்திரிக்கறதுல இருந்து ராத்திரி தூங்குற வரை வேலை இருக்கும். ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. ஜூலை மாசம் போனேன். போன நாள்ல இருந்து ஒரு நாள் கூட நல்ல சாப்பாடே எனக்கு போட்டதில்லை.

மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச கெட்டுப்போன சாப்பாட்டைதான் கொடுத்தாங்க. சரி சம்பளத்துக்குன்னு இவ்ளோ தூரம் வந்துட்டோம். சகிச்சுகிட்டு இருப்போம்னு இருந்தேன். மாசம் 300 டாலர் சம்பளம்னு சொல்லியனுப்பினாங்க. அங்க 900 ரியால் கொடுத்தாங்க. முதல் மாசம் சம்பளம் கொடுத்திட்டு என் பையனுக்கு போன் போட்டு கொடுத்தாங்க. 
அவன்கிட்ட 'சம்பளம் வாங்கிட்டேன்பா என்று சொல்லிவிட்டு, 'சரியான சாப்பாடு போடறதில்லைன்னு' மனக்குறையாக சொன்னேன். அவ்வளவுதான், மறுநாள் எனக்கு கொடுத்த காசையும் புடுங்கிட்டாங்க. என் செல்லையும் வாங்கிகிடுச்சு அந்த வீட்டம்மா. 

சாப்பாடு போடலைன்னாலும் சம்பளமாவது தந்தா போதும்னு இருந்தேன். கொடுத்த சம்பளத்தையும் புடிங்கிகிட்டதால பயம் வந்துவிட்டது. வீட்டுக்கும் பேச முடியாது. அவங்க பேசுறதும் எனக்கு புரியாது. அந்தம்மா கூட சைகையில்தான் பேசுவேன்.  'எனக்கு இங்க இருக்க புடிக்கலை... ஊருக்கே அனுப்பி வச்சிடுங்கமா' ன்னு ஒருமுறை அழுதுட்டே சைகையால கெஞ்சினேன். 

கோபமான அந்தம்மா,  'கழுத்தை அறுத்திடுவேன்' னு சைகை காட்டினாங்க. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. இங்க இனி இருந்தா நம்மளை எதாவது பண்ணிடுவாங்கன்னு, அவங்க பையன் வீட்ல வேலை செய்த நெய்வேலிக்காரர் ஒருத்தர்ட்ட நடந்த விஷயத்தை சொல்லி, 'என்னை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுருப்பா நான் அவங்க மூலமா ஊருக்கு போய்டுறேன்' னு அழுதேன்.

ஆனா அந்த பையன் நான் சொன்னதை அப்படியே அந்த வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டான். அப்புறம் சித்ரவதை ஆரம்பிச்சிட்டது. என்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, ஒருநாள் அந்த வீட்டின் மாடியில் இருந்து சேலையை கட்டி இறங்கப் பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கை ரொம்ப நசுங்கினதால வெட்டி எடுத்துட்டதா சொன்னாங்க." என்று பறிகொடுத்த கையின் தோள்பட்டையை தடவிப்பார்த்து கண்ணீர் சிந்தினார். 

"குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்க போனேன். இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம். குறைவான சம்பளத்துக்கு ஒரு ஆட்களை அனுப்ப இத்தனை லட்சம்,  இத்தனை ஆயிரம்னு ஏஜெண்டுங்க கமிஷன் வாங்கிக்கறாங்க. வீட்டுக்காரங்க அவ்ளோ செலவு செய்வதால், நமக்கு வேலை புடிக்கலைன்னாலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குறது நடக்குது. வீட்டை விட்டு எங்கயும் அனுப்பாததால், மற்ற இடங்கள்ல இருக்க நம்ம பொம்பளைங்க நிலை தெரியலை. ஆனால் அவங்களும் இப்படிதான் கொடுமை அனுபவிக்கறாங்கன்னு நினைக்கிறேன்." என்றார் கம்மிய குரலில்.
கஸ்துாரிக்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் நிவாரணத் தொகையாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதம் ரூ. 8000 வட்டிப்பணமாக வருவதாக சொல்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் அவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்வதற்கே அந்த தொகை சரியாகி விடுகிறது என்கிறார்.
மத்திய அரசு மற்றும் சவுதி அரசிடமிருந்து நஷ்ட ஈடு  கேட்டு கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

வெளிநாட்டு வேலையில் விருப்பம் இருப்பது தவறில்லை. சரியான தகுதிகளோடு, அனுபவம் வாய்ந்த,  முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் செல்வதே சரியாக இருக்கும்.  எதையும் ஆராயாமல் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை நம்பிபோனால் துயரங்களை சந்திக்கவேண்டிதான் இருக்கும்.
கஸ்துாரியின் வாழ்க்கை சொல்லும் படிப்பினை இதுதான்!

source.vikadan
கரங்களில் எல்லோரும்  ரோபோக்களைப் போல, முகத்தில் உணர்ச்சி அற்றவர்களாகவே திரிகின்றனர். எவ்வளவு கூட்ட நெரிசல் இந்த நியூயார்க் நகரில் என்று கேட்டால்,கேட்பவரை வேற்றுகிரக வாசியைப் போலத்தான் பார்க்க தோன்றும். 

ஆனால் உண்மையில் ஒருவருக்கு நியூயார்க் அவரச வாழ்க்கைக்குப் பழகிய மனிதர்களைப் பார்க்க வேற்றுக் கிரக மனிதர்களை நினைவுபடுத்துகிறதாம். அதே நேரத்தில் இவரும் பலருக்கு வேற்றுக்கிரக வாசியாகத் தோன்றலாம். அவர் பெயர் ஒடிஸ் ஜான்சன்.அமெரிக்கர்.

பல வருடங்கள் முன்பு இந்த சமூகத்தின் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட அவர், மீண்டும் பரபரக்கும் இந்த சமூகத்தில் இணைந்துள்ளார்.அதனால் அவருக்கு வேற்றுக் கிரக உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க இயலாதது தானே.
 விண்வெளிக்குச்  சென்று திரும்புவது போல் இவர் நியூயார்க் நகரில்  இருந்து நீக்கப்பட்டது 1975 ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 25. மீண்டும் இந்த சமூகத்திலே இணைந்து கொண்டது 2014 இல், 69 ம் வயதில்.இளைஞராக சிறை சென்றவர் முதியவராக வெளியே வந்துள்ளார்.காலம் சிறைக்கு வெளியே பல்வேறு மாற்றங்களைப் புதுமைகளைக் கொண்டு வந்துள்ளது.இவை எதுவுமே அறியாத மனிதராக ஜான்சன் வாழ்ந்துள்ளார்.

தனது வாழ்நாளின் இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த ஒடிஸ் ஜான்சன், ஒரு காவலரைக்   கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 44  ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து தற்போது திரும்பி உள்ளார். சிறையில் இருந்து திரும்பிய ஜான்சனிடம் வழங்கப்பட்டது 2 பஸ் டிக்கெட் மற்றும் நாற்பது டாலர்களுடன் அவரது வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் அவரது ஐடி கார்டு. தன் குடும்பம், சொந்தம் பற்றிய மொத்த விபரங்களும் மறந்து,தொடர்புகள் அறுந்து அனாதையாக தெருவில் நின்ற ஜான்சனுக்கு அடைக்கலம் கொடுத்தது, ஹார்லெமில் உள்ள ஃபர்ட்டியூன் சொசைட்டி என்கிற நிறுவனம். இது வாழ்நாட்களை சிறையில் கழித்து மீண்டவர்களுக்காக நடத்தப்படும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜான்சன் தனது அன்றாட பணிகளை, ஒரு வியப்பான அதிசய நோக்கோடுதான் செய்து வருகிறார்.உலகம் அவருக்கு கணம்தோறும் வியப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் மசூதியில் தொழுகை செய்கிறார். உடலின் வலுவைக் காக்க "தாய்ச்சி" என்ற உடற்பயிற்சி செய்கிறார்; தியானம் செய்கிறார். பிறகு நியூயார்க் நகர வீதிகளிலே காலாற நடந்து விட்டு தன் வசிப்பிடம் வந்து சேர்கிறார். பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான இடம் உருவாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பணம் திரட்டும் பணியிலும் தீவிரமாக இயங்கி வருகிறார் ஜான்சன்.


இதே போன்று பல நூறு ஜான்சன்கள் நியூயார்க் நகர வீதிகளிலே என்ன செய்வது என்றே தெரியாமலே திரிந்துவருகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள். ஆம், 2013 ல்  –ஏறத்தாழ 3,900 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள்! 

அடுத்த ஆண்டு நவம்பரில் 6,000  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா சிறைக்  கைதிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையாக, விடுதலை செய்யும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய ஒபாமா, " இப்பொழுதும்  காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவர்கள் தவறு இழைத்துவிட்டனர்.அது அவர்களுக்கு ஒரு மோசமான நேரம். உதவி கிடைக்கப்பெற்றால் அவர்கள் நல்ல வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்" என்று குறிப்பிட்டார்.

2014 ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் மக்கள் தொகை 2005 ல் சரிவைக் கண்டுள்ளது. அதே நிறத்தில், 1999  முதல்  2014 வரை 55 வயது நிரம்பிய  சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 250  சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 55  வயதிற்கு குறைவான சிறை கைதிகளின் எண்ணிக்கை 8  சதவீதமே கூடியுள்ளது. 1999 ல் மொத்த சிறை கைதிகளில் 3 சதவிகிதமாக இருந்த முதுமை வயது கைதிகளின் எண்ணிக்கை, 2014  ல்  10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் போதை பொருள் சமந்தமான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிதான நடைமுறையினால் 1,00,000 பேரில் 46,000 பேர் முன்னதாக விடுதலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் போதை பொருள் சமந்தப்பட்ட வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதுடன், கிரிமினல் குற்றத்திற்கான தண்டனையும் குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜான்சனைப் போன்ற முதுமை அடைந்த முன்னாள் சிறை வாசிகள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை, ஜான்சனைப் போல் ஒரு வசிப்பிடம் இல்லாமல் போகலாம். அல்லது அவர்களது பிள்ளைகளிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டே போக்கிடம் இல்லாமல் வாழ்ந்து வரலாம். பசியைப் போக்கிக்கொள்ள ஏதாவது வேலை பார்த்து வரலாம். ஏன் என்னை விடுதலை செய்தார்கள் என்று தனிமையில் மனம் நொந்து வாடலாம். விரக்தி முற்றி தற்கொலை செய்ய கூட முயலலாம்.

வலுவான கம்பிகளுக்குப் பின்னால் தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பல முன்னால் சிறை வாசிகளை பேட்டி கண்டுள்ள மரியக் லியம் என்ற ஆய்வாளர், வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் கடைகளில் காய்கறிகள் வாங்குவது வரை இவர்கள், பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதாகக்  கூறுகிறார். சிறையில் ஒவ்வொரு நாளின் வேலைகளும் முன்னரே தீர்மானித்து இருக்கும் பழக்கத்திற்கு வாழ்ந்த இவர்களுக்கு, தாங்களே ஒவ்வொரு நாளையும் முடிவு செய்வது கடினமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

சிறை கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்பது நல்ல விஷயமானாலும், அவர்களுக்கு சரியான போக்கிடம் இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்களை,நிற்கதியில்  விடுவதற்கு சிறைவாசம் எவ்வளோ மேல் என்று அவர்களை எண்ண வைக்காமல் அவர்களின்  புனர்வாழ்வுக்கான வழிவகைகளும் செய்யப்பட வேண்டும். 

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது போல் சிலர் போதாத காலத்தின் காரணமாக தவறு செய்து சிறை அனுபவித்தாலும், அவர்கள் திருந்தி வாழ ஒரு வழிவகை செய்தால் தான் சமூகம் மாறும்! 

source.vikadan
          தமிழகத்தின் பல பகுதிகளும், குறிப்பாகச் சென்னையிலும் மழை, வெள்ளம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள காலம் இது. மழைக்காலத்தில் அதிகமாகத் தேங்கியுள்ள மழைநீர்-கழிவுநீராலும், குடிதண்ணீர் மாசுபட்டிருந்தாலும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கிருமிகள் பெருகுவது வழக்கம். இப்படிப் பரவலாகும் நோய்களை எளிய சித்த மருந்துகள் மூலம் சுலபமாகக் குணப்படுத்த முடியும்.

சீரகத் தண்ணீர்
மழைக் காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் தண்ணீரில் கலந்திருக்க அதிக வாய்ப்பு உண்டு. இதனால் மஞ்சள்காமாலை, வாந்திபேதி, டைபாய்டு போன்ற நோய்கள் பரவலாம். சாதாரணமாகவே தண்ணீரைக் கொதிக்க வைத்து, வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது உலோக உப்புகள் ஆவியாகி விடுவதால், இந்தத் தண்ணீர் சுவையற்று இருக்கும். இதற்கு நல்ல மாற்றாகச் சீரகத் தண்ணீர் அமையும். சித்த மருத்துவத்திலும், தமிழக மக்களிடம் பன்னெடுங்காலமாகவும் பழக்கத்தில் உள்ள தண்ணீர் இது.
       ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 சீரகம் போதும். எண்ணிப் போட முடியாவிட்டாலும் தேக்கரண்டியில் சிறிதளவு எடுத்துப்போட்டு, அரை மணி நேரம் அல்லது 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தளதளவென்று வரும்வரை கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டிப் பயன்படுத்தலாம். இதனால் தண்ணீரில் உள்ள கிருமிகள் நீக்கப்படுகின்றன. இதற்குச் சீரகத்தில் கியூமினால்டிஹைடு என்ற வேதிப்பொருளே காரணம். அது மட்டுமில்லாமல் சீரகத்தில் உள்ள வேதிப்பொருட்கள் கலந்து தண்ணீரின் சுவையைக் கூட்டுகின்றன. இந்தத் தண்ணீர் செரிமானத் திறனை அதிகரிக்கும். இது ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடண்ட்டும்கூட. பெயருக்கேற்ப சீரகம், உடலை (அகத்தை) சீராக வைக்கும்.

கட்டிடச் சீரழிவு நோய்
அதிக மழையால் வீட்டின் உட்புறச் சுவர்வரை நனைந்திருக்கும் நிலைமையுடன், வீட்டுக்குள் நீர் புகுந்ததாலும் பூஞ்சைகள் வளர்வதைக் காணலாம். இதற்குக் காரணம் Gloeocapsa Magma என்ற பாக்டீரியா. இதனால் வீட்டின் உட்புறக் காற்று மாசுபடுவதால் கட்டிடச் சீரழிவு நோய் உருவாகி (Sick building syndrome) மூக்கு, கண், தொண்டை பகுதியில் எரிச்சல், தலைவலி, உடல்வலி, ஆஸ்துமா போன்றவற்றை ஏற்படலாம். உலகச் சுகாதார நிறுவனம் கட்டிடச் சீரழிவை நோய் என்று வரையறுத்துள்ளது. இந்த நோயை எதிர்கொள்வதற்கான வழிகள்:
1. வீட்டுக்குள் சுத்தமான காற்று சென்று வர, மழை நின்றிருக்கும்போது கதவு, ஜன்னல்களைத் திறந்து வைப்பது.
2. ஃபார்மால்டிஹைடு, ஸைலீன், நைட்ரஜன் ஆக்சைடு போன்றவற்றால் ஏற்பட்ட நச்சுக் காற்றை நீக்க மருள் (sansevieria) எனும் தாவரத்தை வீட்டுக்குள் தொட்டியில் வளர்க்கலாம். ‘இருள் நீக்கும்' என்று சித்தர்களால் பெருமைப்படுத்தப்பட்ட இந்தத் தாவரம் பற்றி, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் சுட்டிக்காட்டியுள்ளது.
3. வீட்டுக்குள்ளும், மொட்டை மாடிகள், சுவர்களில் கருப்பு நிறம் படிந்திருப்பதற்கு gloeocapsa magma என்ற பாக்டீரியாவே காரணம். இதை குளோரின் தூள் அல்லது பிளீச்சிங் தூள் கொண்டு கழுவி நீக்கலாம்.
4. நொச்சி இலை அல்லது வேப்ப இலை மூலம் வீட்டுக்குள் புகைபோட்டால் நச்சுக்காற்று நீங்கி, ஆரோக்கியம் பெருகும்.

கட்டிடச் சீரழிவு நோய்க்கு மருந்து
நொச்சி இலை, பூண்டு, கிராம்பு, மிளகு ஆகியவற்றைச் சரிசமமாக எடுத்து, அரைத்து ஐந்து கிராம் வீதம் வெந்நீரில் கலந்து காலை, மாலை உட்கொண்டுவந்தால் இந்த நோய் கட்டுப்படும்.
நொச்சி இலையைச் சுடுதண்ணீரில் இட்டால் வரும் ஆவியைக் குறைந்தபட்சம் 20 முறை காலை மாலை சுவாசித்துவந்தால், ஆஸ்துமா நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

பூஞ்சைத் தொற்று
ஈரமான ஆடைகளை அணிவதாலும், நன்றாக ஈரம் உலராத உள்ளாடைகள் அணிவதாலும் படை உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கக் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு சம அளவு எடுத்துக் கலந்து, சோப்புக்குப் பதிலாகத் தேய்த்துக் குளிக்கலாம். குளித்த பின் மூன்று நிமிடங்களில் (நீரிலிருந்து அகன்ற பின், தோலின் புற அடுக்கில் 3 நிமிடம் வரைதான் தண்ணீர் தங்கும்) செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை உடலில் லேசாகத் தேய்த்துவிட்டால் காளான் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அது மட்டுமில்லாமல் சூரியப் பாதுகாப்பு காரணியையும் (SPF Sun Protecting Factor) இது கொண்டிருப்பதால், புறஊதாக் கதிர்கள் தோலில் ஏற்படுத்தும் சுருக்கமும் தடுக்கப்படும். தேங்காய் எண்ணெய், தோல் உதிர்வைத் தடுப்பதில் சிறந்ததும்கூட.
இதை மீறிப் படை வந்துவிட்டால், சீமை அகத்தி களிம்பைப் பூசலாம். நாகமல்லி (Rhina Canthus Masutus) 10 இலைகள், ஒரு மிளகு ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தடவி வரலாம்.

தலையணை உறை
மழைக் காலத்தில் வீட்டுக்குள் நிலவும் குளிர்ந்த காற்றோட்டத்தால் மெத்தை விரிப்புகள், பாய்கள், தலையணை உறையைப் பூஞ்சை தொற்றுகளுக்கும், படுக்கை உண்ணி (Bed mite) என்ற சிறுபூச்சிகளும் பல்கிப் பெருகி இருக்கும். வெளியே செல்ல அணியும் ஆடைகளை தினமும் கசக்கிக் கட்டுகிறோம். அதே அளவுக்கு இரவில் நம் உடலுடன் ஒட்டியிருக்கும் தலையணை உறை மற்றும் மெத்தை விரிப்புகளை மாதக்கணக்கில் துவைக்காமல் இருப்பது எப்படிச் சரியாகும்? இதனால் சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இரையாகிறோம். தலையணை உறை, மெத்தை விரிப்புகளை வாரம் ஒருமுறை சுடுதண்ணீரில் இட்டுத் துவைத்துப் படுக்கை உண்ணியை விரட்டுவோம்.

குழந்தைகளுக்கு
அதிக மழையில் குழந்தைகள் சளியால் அவதிப்படுவார்கள். வழக்கமாகத் தலைவலிக்கான களிம்புகளைக் குழந்தையின் மூக்கு, முதுகு, நெஞ்சில் தடவுவது வழக்கமாக இருக்கிறது. இது தவறு. குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இப்படிச் செய்யக் கூடாது என்று சர்வதேச அளவில் வலியுறுத்தப்படுகிறது. ஏனென்றால், இந்தக் களிம்புகள் குழந்தையின் மூக்குக்குள் அதிகச் சுரப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் சுவாசப் பாதையில் சளியை வெளியேற்றும் முடிகளை உடைய செல்கள் இல்லாததால், சளி வெளியேறாமல் போய் நோய் நிலைமை மோசமாகக் கூடும்.
கற்பூரவல்லி இலை அல்லது நவரை பச்சிலை என்ற இலையின் சாற்றை 2.5 மி.லி. வெந்நீரில் கலந்து இரண்டு வேளை புகட்டுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் சித்த மருத்துவர் ஆலோசனைப்படி உரை மாத்திரையை வழங்கலாம்.

பிரளி
தண்ணீர் அசுத்தத்தாலும், கைகளையும் காய்கறிகளையும் நன்றாகக் கழுவிப் பயன்படுத்தாததாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பச்சை நிறக் கழிச்சலுக்குப் பிரளி (Giardiasis) என்று பெயர். இதற்கு மருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்தும் பிரளிக்காய் என்ற வலம்புரிக்காய். இதைச் சட்டியில் பொன் வறுவலாக வறுத்து ஐந்து கிராம் அளவு எடுத்து, 100 மி.லி. தண்ணீர் சேர்த்து, அது 25 மி.லி.யாக வற்ற வைத்துக் காலை, மாலை கொடுத்துவந்தால் உடல் சீரடையும். அதேபோல, வாந்தி பேதிக்கு இணை உணவாக நெற்பொரியைக் கஞ்சியாக வழங்கி வரலாம்.
இப்படியாக மழைக் காலத்தில் நோய் தாக்காமலும், நோய் தாக்கினாலும் எளிய சித்த மருத்துவ வழிமுறைகள், சித்த மருந்துகளால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com
source.hindu