முன்னாள் விஞ்ஞானிகள் மீது அரசு நடவடிக்கை


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் உள்பட நான்கு விண்வெளி விஞ்ஞானிகள், அரசுப் பணி எதையும் மேற்கொள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது.
இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆந்த்ரிக்ஸுக்கும் தனியார் நிறுவனமான டேவாஸுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பத்தில், மாதவன் நாயர் உள்ளிட்டோரின் பங்கு குறித்து ஆய்வு நடத்திய பிறகு அரசு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மாதவன் நாயர், இஸ்ரோ தலைவராக இருந்த காலகட்டத்தில், ஆந்த்ரிக்ஸுக்கும் டேவாஸுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எஸ் பேண்ட் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, கடந்த ஆண்டு மே இறுதியில், முன்னாள் கண்காணிப்பு ஆணையர் பிரத்யூஸ் சின்ஹா தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தார் பிரதமர். அந்தக் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மாதவன் நாயருடன், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர் கே. பாஸ்கர நாராயணா, ஆந்த்ரிக்ஸின் முன்னாள் மேலாண் இயக்குநர் கே.ஆர். ஷ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போதைய இஸ்ரோ தலைவரான கே. ராதாகிருஷ்ணன்தான் காரணம் என்றும், இந்தப் பிரச்சினையில் அரசாங்கத்தை அவர் தவறாக வழி நடத்தியிருப்பதாகவும் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், அதில் விஞ்ஞானிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நிர்வாகத்துறையில் உள்ளவர்களை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டேவாஸுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்றும், ஆனால், தற்போதைய விதிகளின்படி இஸ்ரோ அவ்வாறு செய்யக் கூடாது என்றும் நாயர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments