மன இறுக்கம் எப்படி?

சென்ற ஆண்டின் இடையில் அமெரிக்காவின் பர்க்லி பல்கலைக்கழகத்தின் சமூகஅறிவியல் மாணவர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எல்லாப் பிரிவினரிலிருந்தும் 20 வயதுக்கு மேற்பட்ட 5,000 பேரிடம் வினாத்தாளை வழங்கி விடையளிக்கச் சொன்னார்கள்.
             அந்த வினாத்தாளில் பின்வரும் கேள்விகள் இடம்பெற்றன. சின்னச் சின்ன விஷயங்கள்கூட உங்களுக்கு எரிச்சலூட்டுகின்றனவா? இரவில் சரியாகத் தூங்க முடியவில்லையா? காலையில் எழும்போது களைப்பாகவும் சிடுசிடுப்புடனும் இருக்கிறீர்களா? கவலைகள் அதிகமாக உள்ளனவா? பொறியில் சிக்கிய எலியைப் போல உணர்கிறீர்களா? எப்போதும் எதைப் பற்றியாவது குறைசொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அடிக்கடி எரிந்துவிழுகிறீர்களா? உங்கள் உடலில் ஏதாவது கோளாறு உள்ளதா?
மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதிலளித்தவர்கள்கூட ‘தீய இறுக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள்’ என முடிவுசெய்து, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 70% பேர் அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். நாம்கூட, நமக்கு நாமே அவ்வாறு சோதித்துக்கொள்ளலாம்.
இறுக்கத்திலும் இருவகை
அது சரி, இறுக்கத்தில் தீயது, நல்லது என்றுகூட உண்டா? உண்டு. வாழ்க்கையில் இறுக்கம் ஓர் இன்றியமையாத அம்சம். வீணையின் கம்பியில் இறுக்கமே இல்லாதிருந்தால் நாதம் எழாது. அளவுக்கு மீறிக் கம்பியை இறுக்கினால் அது அறுந்துபோகும். அதேபோல மனதிலும் அளவான இறுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நன்மை உண்டாகும்.
இறுக்கத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு செயலை வெற்றிகரமாக முடித்தே ஆக வேண்டும் என்று மேலதிகாரி கட்டாயப்படுத்துவது அல்லது நமக்கு நாமே கட்டாயப்படுத்திக்கொள்வது, அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அடுத்து மேற்கொள்கிற செயல்களும் அதே போல வெற்றிகரமாக முடிய வேண்டுமே என்று கவலைப்படுவது, குடும்பத்தினருடன் கருத்துவேறுபாடுகள், நடைமுறைக்குச் சரிவராத எதிர்பார்ப்புகள், ஏகப்பட்ட பேரைத் திருப்திப்படுத்த வேண்டியிருப்பது, தூக்கப் பிரச்சினைகள், பணத்தட்டுப்பாடு, சரியான இலக்குகளைத் தீர்மானிக்க முடியாமை, நல்லது - கெட்டதுபற்றிய குழப்பங்கள், சலன மனப்பான்மை போன்றவை அவற்றில் சில.
ஒருவருக்கு மன இறுக்கத்தை உண்டாக்கும் காரணி, வேறு ஒருவருக்கு ஊக்க மருந்தாக அமையக்கூடும். ஒரே காரணி, ஒரே நபருக்கு ஒரு சமயத்தில் இறுக்கத்தை உண்டாக்குவதாகவும், வேறு சமயத்தில் அவ்வாறானதாக இல்லாததாகவும் இருக்கலாம்.
நாளை மாலைக்குள் குறிப்பிட்ட ஒரு வேலையை முடித்துவிட வேண்டும் என்று மேலதிகாரி ஆணையிடும்போது, அதெப்படி முடியும் என்று கவலைப்பட்டு மன இறுக்கமடையலாம். இன்னொரு சிப்பந்தி அதையே ஒரு சவாலாக ஏற்று, “நாளை மாலை என்ன சார், நாளை காலையிலேயே முடித்துவிடுகிறேன்!” என்று உற்சாகமாகச் சொல்லலாம். வேறு ஒரு ஊழியர் “அதிகாரி அப்படித்தான் மிரட்டுவார். ஒரு நாள் தாமதமானால் தலையா போய்விடும்” என்று அலட்சியமாயிருப்பார். அவரே அந்தக் காரியத்தை முடித்துத்தந்தால்தான், உறவினர் திருமணத்துக்குப் போக விடுமுறை கிடைக்கும் என்ற சூழ்நிலையில் இருந்தால் மன இறுக்கமடைவார்.
உண்மையில், நாம்தான் நமது சொந்த விருப்புவெறுப்புகள் அல்லது பாதிப்புகளின் அடிப்படையில் மன இறுக்கங்களை நல்லவையாகவோ தீயவையாகவோ மாற்றிக்கொள்கிறோம். உண்மையில், மன இறுக்கங்கள் நடுநிலையானவையே.
வார நாட்களில் கடிகாரம் மணி 8.45 என்று காட்டினால், பதறி எழுந்து 9 மணி பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்று மன இறுக்கமடைகிறோம். விடுமுறை நாளில் கடிகாரத்தைப் பார்த்த பின் போர்வையை இழுத்துத் தலையை மூடிக்கொண்டு தூக்கத்தைத் தொடர்கிறோம். இவ்விதமாக ஒரே தகவல் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து இறுக்கத்தை உண்டாக்குகிறது அல்லது போக்கிவிடுகிறது.
அதீதமான, அநாவசியமான மன இறுக்கங்கள் இதயத்தையும் ஜீரண மண்டலத்தையும் பாதிக்கும். நட்புகளையும் உறவுகளையும் குலைக்கும். தீய இறுக்கங்களை முழுமையாகத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
மன இறுக்கத்தைத் தவிர்ப்பது எப்படி?
எதுவும் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும்; செய்கிற காரியம் நறுவிசாக இருக்க வேண்டும்; ஆண் பிள்ளைகள் பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்; பெண் பிள்ளைகள் பொழுது இருட்டுவதற்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளைத் தமக்குத் தாமே விதித்துக்கொண்டு அவதிப்படுகிற பெற்றோர்கள், அந்த நிபந்தனைகளை ஓரளவுக்குத் தளர்த்திக்கொண்டு, மன இறுக்கத்தைத் தணித்துக்கொள்ள முடியும். மேலதிகாரிகள் நாளைக்குள் முடி என்று ஒரு வேலையை இன்று கொடுப்பதைத் தவிர்த்து, இரண்டு நாள் அவகாசம் கொடுத்துச் சிப்பந்திகளுக்கும் தமக்கும் ஏற்படக்கூடிய மன இறுக்கங்களைத் தவிர்க்கலாம்.

அலுவலகத்துக்குக் காலை 9 மணிக்குப் போக வேண்டியிருப்பவர்கள் பயண நேரத்துக்கேற்ப அரை மணி முன்னதாகவே வீட்டைவிட்டுக் கிளம்பலாம். எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை முதல் நாள் மாலையிலேயே பையில் போட்டுவைத்துவிட்டால், பேனா எங்கே, வாட்ச் எங்கே என்று கிளம்புகிற சமயத்தில் பதற வேண்டியிருக்காது.

நமக்குத் தரப்பட்ட வேலையை நம்மால் முடிந்த அளவு பொறுப்புடன் செய்துவிட்டு, “கர்மண்யேவா அதிகாரஸ்தே, மாபலேஷு கதாசன!” என்ற கீதாசாரியனின் கூற்றை ஏற்று மன இறுக்கம் இல்லாமல் இருக்கலாம்.இசை, ஓவியம், விளையாட்டுகள் போன்றவை மன இறுக்கத்தைத் தணிக்க உதவும். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது நல்லது. எந்தக் காரியம் செய்ய முனைந்தாலும் அதைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியையும் ஒரு கால அட்டவணைப்படி செய்ய வேண்டும். பணி பெரியதாயிருந்தால் மற்றவர்களை உதவிக்கு அழைத்து சுமையைப் பங்கிட்டுக்கொள்ளலாம்.
தெரியாது, இயலாது ஆகிய சொற்களை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்திப் பல வேளைகளில் மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியும். தெரியாத வேலையைத் தெரியாது என்றும் இயலாத வேலையை இயலாது என்றும் மேலதிகாரியிடம் ஒப்புக்கொள்வதில் தவறேயில்லை. தெரியாத பணிகள் உள்ள பிரிவிலிருந்து தெரிந்த பணிகள் உள்ள பிரிவுக்கு மாறுதல் பெறலாம் அல்லது பணியைக் கற்றுத்தருமாறு கூறித் தெரிந்துகொள்ளலாம்.
சத்துமிக்க உணவுகளை உண்டு, உடல்வாகுக்கு ஏற்ற பயிற்சிகளை இடைவிடாமல் செய்துவந்தால் ஆரோக்கியம் அதிகரித்து, மன இறுக்கம் தோன்றவிடாது. நண்பர்கள் அல்லது நெருக்கமான உறவினர்களைக் கட்டியணைப்பதுகூட மன இறுக்கங்களைத் தணிக்க உதவும். என்ன நெருக்கடி வந்தாலும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற உறுதியான எண்ணத்தையும், நமக்கு உதவ உறவினர்களும் நண்பர்களும் உள்ளனர் என்ற துணிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இக்கருத்துகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல; எவருக்கும் பொருந்தும்!

கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு)

Post a Comment

2 Comments

stalin wesley said…
மன இறுக்கம் குறைந்தது