இ காமர்ஸ் துறையில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள்

அடுத்த ஆறு மாதத்தில் இ-காமர்ஸ் துறையில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு 2009-ம் ஆண்டு 380 கோடி டாலராக இருந்தது. இது, 2013-ம் ஆண்டு 1,260 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் இந்த துறையின் வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் என்ற நிலையிலேயே இருக்கிறது.இந்தத் துறையில் முக்கியமான பணியாளர்களைத் தக்க வைப்பது மிகப்பெரிய சவால் என்று இன்ஹெல்ம் லீடர்ஷிப் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பிரசாந்த் நாயர் தெரிவித்தார்.

              பணியாளர்களுக்கு ஊதியம் முக்கியம் என்றாலும் அதைத் தாண்டி மற்ற துறைகளைப் போல புதுமைகள், வேலை சூழ்நிலை, அடுத்த கட்ட வளர்ச்சி ஆகியவற்றையும் எதிர்பார்ப்பதாக நாயர் தெரிவித்தார். பல இ-காமர்ஸ் நிறுவனங்கள், அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து திட்டங்கள் வைத்திருப்பதால், இந்தத் துறையை சேர்ந்த ஆலோசகர்களுக்கு தேவை இருக்கிறது என்றார்.
              வேகமாக வளர்ந்து வரும் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களால் சிறு வணிக நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து வருகின்றன. இருந்தாலும், இந்த நிறுவனங்கள் தங்களது யுக்திகளை மாற்றி அமைப்பதன் மூலம் இந்தத் துறையில் தொடர முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்காக இப்போது அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களை நாடுகிறார்கள் என்றார்.
  
                       இப்போது இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமானோர் பல வழிகளில் இணையத்தை பயன்படுத்துகின்றனர். தவிர, டெலிகாம் வசதிகள், புதுமையான மென்பொருள், இணையம் மூலம் பணம் செலுத்து வசதி உள்ளிட்ட காரணங்களால் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
விற்பனை அடிப்படையில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் துணி வகைகள் ஆன்லைனில் அதிகம் வாங்கப்படுபவையாக இருக்கின்றன.

source:hindu

Post a Comment

0 Comments