சசிகலா குடும்பத்தினர் வெளியேற காரணம்:ஜாதகம்

by 5:51 AM 0 comments


சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.
 
குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முதல்வர் யார்?தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: