சில முதலுதவி டிப்ஸ்''தினமும் வேலைக்கு அடையாறு டு கேளம்பாக்கம் ரூட்லதான் போவேன். அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். ஒவ்வொரு விபத்தைப் பார்க்கிறப்பவும் ஏதாவது செய்யணும்னு மனசு பதறும். ஆனா, 'நேரம் இல்லை’, 'நம்மால் என்ன செய்ய முடியும்’னு காரணம் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்திக்குவேன். ஒரு நாள் 'இது தப்பு. நம்மால முடிஞ்சதைச் செஞ்சிருக்கணும்’னு குற்ற உணர்வு ரொம்பவே அழுத்துச்சு. அதே மனநிலையில் இருந்த நண்பர்களை ஒண்ணு சேர்த்தேன். 'அலெர்ட்’ ஆனோம்!''
ஒரு நொடி விபத்து எத்தனை பேரின் எதிர்காலத்தை, நம்பிக்கையை, வாழ்க்கையைச் சிதைக்கிறது? விபத்து நடந்தால், தொலைவில் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அருகில் இருப்பவர்கள், 'அச்சச்சோ’ என்கிறார்கள். இதைத் தவிர்த்து நாம் என்ன செய்ய முடியும்? 'இயன்றதைச் செய்ய முடியும்!’ என்கிறது அலெர்ட்!
 விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவுவதை முழு நேரப் பணியாகக்கொண்டு இருக்கும் அலெர்ட் அமைப்பு உதயமான கதை சொல்கிறார் அதன் நிறுவனர் கலா.
அலெர்ட் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜேஷ் தொடர்கிறார்... ''ஒரு சர்வே எடுத்தோம். விபத்து சமயம் மக்கள் உதவத் தயங்குவதற்கு சில காரணங்கள் தெளிவாச்சு. போலீஸ், நீதிமன்ற வழக்கு, சாட்சி விசாரணை நடைமுறைகள். 'நாம என்ன டாக்டரா? நம்மால் என்ன உதவ முடியும்?’ என்ற இயலாமை மனப்பான்மை, 'வேற யாராவது உதவுவாங்க!’ என்ற மனநிலை.
ஆனால், ஒரு உண்மை தெரியுமா? 'விபத்து நடந்த இடத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருந்தால், விபத்து தொடர்பான வழக்கில் போலீஸார் உங்களைச் சாட்சியாக அழைக்க முடியாது’னு ஒரு சட்டம் இருக்கு. அப்புறம், ஒரு உயிரைக் காப்பாத்த நீங்க டாக்டராகத்தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த இரண்டையும் புரிஞ்சுக்கிட்டா, உங்களால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்!''  
ஆமோதிப்பாகத் தலை அசைக்கும் கலா புன்னகையுடன் முடிக்கிறார்... ''ஆரம்பிச்ச அஞ்சு வருஷத்துல 15 ஆயிரம் பேருக்கு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மருத்துவர்கள் மூலம் முதலுதவிப் பயிற்சி கொடுத்துஇருக்கோம். சாலை விபத்து மட்டுமே எமர்ஜென்ஸி இல்லை. வீட்ல யாராவது திடீர்னு மயங்கி விழுந்தாலும் அது எமர்ஜென்ஸிதான். ஒரு தொலைபேசி அழைப்பு போதும்... உங்க இடத்துக்கே வந்து முதலுதவிப் பயிற்சிகள் அளிப்போம். ஒரு உயிரைக் காப்பாத்தும் சந்தோஷத்துக்கு வேற எதுவும் ஈடு இணை இல்லைங்க!''

டிப்ஸ்...

முதலுதவிக்குப் பயிற்சி உண்டு. பயிற்சி பெறாதவர்கள் 'பார், கவனி, உணர்’ என்னும் முறையில் உதவி செய்யலாம். பாதிக்கப்பட்டவருடைய இதயம் ஏறி இறங்குகிறதா என்று பாருங்கள். நாசித் துவாரத்தின் அருகில் காதைக் கொண்டுசென்று சுவாசத்தைக் கேளுங்கள். பாதிக்கப்பட்டவரின் மணிக்கட்டை லேசாகப் பிடித்து உயிர்த்துடிப்பை உணருங்கள். இவை ஓரளவு உயிர்ப்பாக இருந்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம்!
 பாதிக்கப்பட்டவரின் காதுக்கு அருகே ஏதாவது ஒலி எழுப்புங்கள். அல்லது அவருடைய தோள்பட்டைகளில் மெள்ளத் தட்டுங்கள். அவர் பதில் சொல்ல முயற்சித்தால், ஓரளவு உணர்வோடு இருக்கிறார் இல்லையெனில், அவர் சிக்கலான நிலையில் இருக் கிறார் என்று அர்த்தம்.
 பாதிக்கப்பட்டவரின் உறவினரை அழைப்பதற்கு முன் ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுங்கள். உறவினர்கள் வந்து என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களும் ஆம்புலன்ஸைத்தானே அழைக்க வேண்டும்?
 பாதிக்கப்பட்டவர் மயக்கத்தில் இருந்தால் குடிக்க எதுவும் கொடுக்காதீர்கள்!
 மொபைலில் ICE (In Case of Emergency) என்று குறிப்பிட்டு உங்களுக்கு நெருக்கமானவர்களின் எண்ணைச் சேமித்துவையுங்கள். விபத்தின்போது நீங்கள் பாதிக்கப்பட்டால் அவர்களைத் தொடர்புகொள்ள இது உதவும்!
*************************************
அலெர்ட் அமைப்பைத் தொடர்புகொள்ள : 99440 66002.
                            ************************************
source.vikadan


No comments: