தீராத ஆச்சரியங்கள்

நம்முடைய உடலைப் பற்றி நமக்கு நிறையத் தெரியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உடலைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்களே அதிகம். அப்படிப்பட்ட சில விஷயங்களை பார்ப்போமா?

நாக்கு ரேகை
ஒன்று தெரியுமா, நமது கைரேகையை வைத்து மட்டுமல்ல, நாக்கை வைத்தும் நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முடியுமாம். ஒவ்வொருவருடைய நாக்கில் உள்ள ரேகைகளும் தனித்தன்மை கொண்டவை. என்ன, அதை ஒப்பிட்டு வேறுபாடு கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் கஷ்டம்.
தும்மலின் வேகம்
நம்முடைய தும்மலின் வேகம் 160 கி.மீ. (ஒரு மணி நேரத்துக்கு).
20 முடிகள்
ஒரு சராசரி மனிதருக்கு 1 லட்சம் மயிர்க்கால்கள் இருக்கும். ஒரு மனிதரின் வாழ்நாளில் ஒரு மயிர்க்காலில் இருந்து 20 முடிகள் முளைக்கலாம்.
தோல் துணுக்கு
நம்முடைய தோல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 லட்சம் நுண்ணிய துணுக்குகளை இழந்துவிடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள தூசிக்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 700 கிராமை இப்படி மனிதர்கள் இழக்கிறார்கள். ஒரு மனிதர் 70 ஆண்டுகள் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால், இந்த எழுபது ஆண்டுகளில் 47 கிலோ தோல் கழிவை அவர் இழந்துவிடுவார்.
வயிற்று அமிலம்
நமது இரைப்பை ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை புதிய மேற்பூச்சைப் பெற்றுவிடும். ஒருவேளை மேற்பூச்சு பெறவில்லை என்றால், இரைப்பையில் உள்ள கடுமையான அமிலங்கள், நமது இரைப்பையையே அரித்துவிடும்.
50 ஆயிரம் நறுமணம்
நாயின் மூக்குதான் மோப்பம் பிடிப்பதிலேயே சிறந்தது அல்லவா? அதுபோலவே நம்முடைய மூளைக்கும் 50,000 வேறுபட்ட மணங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய திறன் உள்ளது.
எவ்வளவு நீளம்?
நம்முடைய சிறுகுடல் சராசரி மனிதனின் உயரத்தைப்போல நான்கு மடங்கு நீளமாக இருக்கும். 18 முதல் 23 அடி நீளம் கொண்ட அது, நம்முடைய வயிற்றுக்குள் பாம்பு போலச் சுருங்கிக் கிடக்கிறது.
மூன்று கோடி
இன்னொன்று தெரியுமா? நம்முடைய ஒவ்வொரு சதுர அங்குலத் தோலிலும் 3 கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. நல்லவேளையாக அவற்றில் பெரும்பாலானவை தீங்கு செய்யாதவை.
அரை லிட்டர்
நமது உடல் முழுக்க வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. இருந்தாலும், இரண்டு கால்களில் மட்டும் 5 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை இரண்டும் அரை லிட்டர் வியர்வையை ஒரு நாளில் சுரக்கின்றன.
ஒரு லட்சம் கி.மீ.
நமது உடலில் உள்ள நரம்புகளை ஒன்றாக இணைத்து நீட்டி வைத்தால், அது கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோ மீட்டர் நீளம் இருக்கும். உடலில் மிகக் கடுமையாக உழைக்கும் உறுப்பு இதயம்தான். ஒரு நாளில் ரத்தக் குழாய்களின் வழியாகப் பம்ப் செய்யும் ரத்தத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட 7,500 லிட்டர்.
இரண்டு நீச்சல் குளம்
ஒரு மனிதருடைய வாய்க்குள் அவருடைய வாழ்நாள் முழுவதும் சராசரியாக 25,000 லிட்டர் எச்சில் சுரக்கிறது. இதைக்கொண்டு இரண்டு நீச்சல் குளங்களையே நிரப்பி விடலாமாம்.
கால்வாசி தலை
ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் கால்வாசி பகுதி தலைதான் இருக்கும். அதேநேரம் வளர்ந்த பிறகு நமது உடலில் எட்டில் ஒரு பாகம்தான் தலை இருக்கிறது (ஒரு சாண்). அதனால், குழந்தைக்குத் தலை பெரிதாக இருப்பது போலத் தெரியலாம்.
11 நாள்
பல வாரங்களுக்குச் சாப்பிடாமல்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், தொடர்ச்சியாக 11 நாட்களுக்கு மேல் தூங்காமல் வாழ முடியாது.

No comments: