மந்திர சொம்புக்கு ரூ.3 லட்சம் 'சதுரங்க வேட்டை' டைப் மோசடி!


 மந்திர சொம்பு எனக் கூறி 3 லட்ச ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், தேவாரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
'சதுரங்க வேட்டை' படத்தில் நடிகர் இளவரசுவை  இரட்டை தலை மண்ணுளி பாம்பு (இரட்டை மணியன் பாம்பு) மருத்துவ குணம் வாய்ந்தது எனக் கூறி, பணத்தை நாயகன்  ஏமாற்றுவதைபோல இந்த வாரம் தேனி மாவட்டத்தில் ஒரு ஏமாற்றுவேலை நடந்துள்ளது. இங்கே நடந்த சம்பவத்தில் இளவரசுவிற்கு பதில் பணத்தாசைகொண்ட இருவர், மண்ணுளி பாம்பிற்கு பதிலாக மந்திர சொம்பு.
 தேவாரத்தை சேர்ந்த நாகராஜ், "மந்திர சொம்பு ஒன்று என்னிடம் உள்ளது. பித்தளை செம்பில் இடி தாக்கியதால் முழுவதும் இரிடியமாக மாறியுள்ளது. இது சக்தி வாய்ந்தது. தமிழ்நாட்டில் மதிப்பு குறைவு, கேரளாவில் விற்றால் கோடிக்கணக்கில் தேறும்" என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவந்துள்ளார். மேலும் அந்த செம்பை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும் கூறி, தன்னிடம் உள்ள செம்பை ஐந்து லட்சத்திற்கு விற்க விருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாகராஜனின் நண்பரான சங்கர லிங்கம், வருசநாடு மாளிகைப்பறை கோயிலுக்கு செல்லும்போது விருதுநகரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் பழக்கமாகியுள்ளார். சங்கர லிங்கம் மந்திர செம்பு குறித்த தகவல்களை கூற, மாரியப்பனுக்கு செம்பின் மேல் மோகம் அதிகமாகியுள்ளது. பின் விருதுநகரில் இருந்த தன்னுடைய நண்பரான நந்தகுமாரிடம் மந்திர செம்பு பற்றி கூறியிருக்கிறார் மாரியப்பன்.தன் நண்பன் சொல்வதைக்கேட்ட நந்தகுமாரும் மந்திர செம்பை வாங்க முடிவு செய்து தன்னுடைய வீட்டில் இருந்த மனைவியின் நகையை அடகு வைத்து மூன்று லட்சத்தை ஏற்பாடு செய்துள்ளார். பின் மந்திர செம்பை வாங்குவதற்காக மூன்று லட்சம் பணத்துடன் சங்கரலிங்கத்திடம் செல்ல, அவர் நாகராஜை கை காட்டியிருக்கிறார். மூவரும் சேர்ந்து நாகராஜ் வீட்டிற்கு வந்து பணத்தை கொடுத்துள்ளனர். மீதம் இரண்டு லட்சம் வேண்டும் என நாகராஜ் கேட்டுள்ளார். அவர்களும் இப்போது இல்லை விரைவில் தருகிறோம் என்று கூறி சென்றுள்ளனர்.

மேலும் இரண்டு லட்சம் பணத்தை கட்ட முடியாததால், செம்பை கொடுங்கள், அதை விற்றுவருகிற பணத்தில் 2 லட்சத்தை கட்டிவிடுகிறேன் என நந்தகுமார் தரப்பு நாகராஜை அணுகியுள்ளனர். அதற்கு நாகராஜ் இரண்டு லட்சம் வேண்டும் எனவும், அதை தன் நண்பரான கருமலை கணேசனிடம் கொடுத்துவிட்டு அவரிடம் உள்ள செம்பை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாரியப்பனும், நந்த குமாரும் இரண்டு லட்சம் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு கூடவே வண்டியில் ஆயுதங்கள், அடியாட்கள் என விருதுநகரில் இருந்து தேவாரத்திற்கு வந்துள்ளனர். பணத்தை கொடுத்து உடனடியாக செம்பை வாங்குவோம். அல்லது பணத்தை தராமல் அவர்களிடமிருந்து செம்பை பறித்துவிடுவோம் என்கிற திட்டத்தில் நாகராஜையும், கருமலை கணேசனையும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துள்ளனர்.
நாகராஜூயும், கணேசனும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை தேவாரம் காவல் நிலையத்தில் அருகில் நிறுத்திவிட்டு, அவர்களுடைய காருக்கு செல்ல உள்ளே ஒரு கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. தயங்கிய படியே ஏறிய இருவரும் கொஞ்ச தூரம் வண்டியில் சென்றுள்ளனர். பின் நாகராஜூம், கணேசனும் செம்பை எடுத்து வந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிகொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு  பாதிவழியிலேயே வண்டியிலிருந்து இறங்கி சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் வராமல் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த நந்தகுமார், மாரியப்பன் தரப்பினர் நாகராஜை தேடி தேவாரம் நகருக்குள் அடிக்கடி சுற்றிவர, சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில்களை தர, விசாரித்தில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.பின் வண்டியில் இருந்த நந்தகுமார், மாரியப்பன் ஆகியோருடன் உடன் வந்திருந்த பாண்டியன், ஸ்டாலின்ராஜ், ரவிச்சந்திரன், கணேஷ்குமார், தமிழரசன் ஆகியோரையும் சங்கரலிங்கத்தையும் தேவாரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர்.நாகராஜ் மற்றும் கணேசனை தேடி வருவதாகவும் விரைவில் பிடிப்போம் என்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வக்குமார் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களில் தேனியில் மட்டும் மூன்றாவது முறையாக இத்தகைய மந்திர செம்பு மோசடி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

courtesy.vikatan

No comments: