வயதான நடிகர்களுக்கும் கதை எழுதுங்கள்

சினிமாவில் நாளுக்கு நாள் இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக நிறைய இளம் கதாசிரியர்கள் அறிமுகமாகி சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, இன்றைய இளம் கதாசிரியர்கள், இளைஞர்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், வயதான நடிகர்களுக்கும் சேர்த்து கதை எழுதுங்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மும்பையில், விசிலிங் உட்ஸ் இன்டர்நேஷனலில் நடந்த 7வது பட்டமளிப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசிய கமல்ஹாசன், இந்திய சினிமாவில் எல்லா மொழிகளிலும் நிறைய இளம் கதாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படத்திற்கு கதை எழுதும்போது வயதான நடிகர்களையோ, வயதானவர்களை மையப்படுத்தியோ கதை எழுதுவது கிடையாது, முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்தே கதை எழுதுகின்றனர். அப்படியே அவர்கள் படம் இயக்கினாலும் ஒருவரது வாழ்க்கை வரலாற்றையே படமாக எடுக்கின்றனர். ஆனால் ஹாலிவுட்டில் அப்படி கிடையாது. நிறைய இளம் கதாசிரியர்கள், வயதான நடிகர்களுக்கும் கதை அமைக்கிறார்கள்.

ஆனாலும், தற்போது நிலைமை மாறி வருகிறது. இந்தியில் அமிதாப் பச்சன் அதற்கு நல்ல உதாரணம். அவரின் வயதுக்கு ஏற்ற வகையில் கதைகளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை பார்க்கும்போது எனக்கும் சினிமாவில் இன்னும் 15 ஆண்டுகள் வாய்ப்பு கிடைக்கும். நான் 5 வயதாக இருக்கும் போது, 20 வயது ஆனது போன்றும், 20வயதில் 40 வயது ஆனது போன்றும், 40 வயதில் 60 வயது ஆனது போன்றும் உணர்ந்தேன். தற்போது எனக்கு 60 வயதாகிறது, ஆனால் 20 வயதாக உணருகிறேன். சினிமாவிற்கு வயது என்பது ஒரு தடையே கிடையாது.

நடிகர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள் உள்ளிட்ட திறமையான பலரை சினிமாவில் கொண்டு வர விசிலிங் உட்ஸ் இன்டர்நேஷனல் இருக்கிறது. இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments