உள்ளூர் டிவியில் அதிமுக பிரசாரம் : கரூர் கலெக்டரிடம் திமுக புகார்

கரூரில், தேர்தல் விதிகளை மீறி அதிமுக பிரசாரத்தை ஒளிபரப்பும் உள்ளூர் சேனல்களை தடைசெய்யவேண்டும் என்றும், மீறினால் ஐகோர்ட்டை நாடுவோம் என்றும் கலெக்டரிடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னயூர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் சண்முகம், பிரபு உள்ளிட்டோர் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயந்தியிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் தேதியை கடந்த 5ம்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய நாள் முதலே தேர்தல் விதிமுறைகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக சின்னசாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால், உள்ளூர் தொலை க்காட்சிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பதும், பொதுமக்களிடம் பேசுவதும் தினமும் ஒளிபரப்பப்படுகின்றன. சில தொலைக்காட்சிகளில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரமும், ஸ்குரோலிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சேனல்கள் எல்லாம், அதிமுக வேட்பாளரின் விளம்பர நிறுவனங்களாகவும், அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் கிளை செயலாளர்கள் போலவும் செயல்படுகின்றன. இவை, தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. 

எனவே, சட்டத்திற்கு புறம்பாக அதிமுக தேர்தல் விளம்பரங்கள், அதிமுக வேட்பாளரின் சொற்பொழிவுகளை ஒளிபரப்பும் உள்ளூர் தொலைகாட்சி சேனல்களை உடனே தடை செய்ய வேண்டும். இதையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுமானால் உயர்நீதிமன்றத்தை மாவட்ட தி.மு.கழகம் நாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments