நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?

அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் ‘இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்’ பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். ‘உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்’ என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு நேரம் சரியில்லை. இந்திய மருந்துகளை தரமற்றவை என நிராகரிப்பது, மருந்து தொழிற்சாலைகளை மூடச் சொல்வது, தரச் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என உலக நாடுகள் அதிரடி காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் பலவும் ஏற்றுமதிக்கு தனியாகவும், உள்ளூருக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கின்றன. ஏற்றுமதித் தரமே இப்படி என்றால், உள்ளூரில் நாம் சாப்பிடும் மருந்து பாதுகாப்பானதா?

* கொழுப்பைக் குறைக்கும் ‘லிபிடர்’ என்ற மாத்திரையை அமெரிக்க மார்க்கெட்டிலிருந்து இந்தியாவின் ரான்பாக்ஸி நிறுவனம் திரும்பப் பெற நேர்ந்தது. மருந்தில் கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதாக புகார் எழுந்ததே காரணம். இதற்காக அந்த நிறுவனம் 186 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது.
* வாயுக் கோளாறு போக்கும் மருந்தான ‘ரானிடிடின்’ தயாரிப்புகளை ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம், அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெற நேர்ந்தது. ஆபத்தான நுண்ணுயிரிகள் மருந்தில் கலந்திருந்ததே காரணம்.
* வோக்கார்ட் நிறுவனத் தயாரிப்பான ஆஸ்பிரின் மருந்துகளை ‘தயாரிப்பு முறை சரியில்லை’ எனக் கூறி திரும்பப் பெறச் செய்தது அபுதாபி அரசு. இதேபோல இந்த நிறுவனத்தின் இன்னொரு மருந்தும் நிராகரிக்கப்பட்டது.


* மருந்துப் பரிசோதனை நடைமுறை சரியில்லை எனவும், தரமில்லாத மருந்துகளைத் தயாரிப்பதாகவும் குற்றம் சாட்டி, ரான்பாக்ஸி நிறுவனத்துக்கு 3100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமெரிக்கா.
* தரமற்ற தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுவதாகவும், சுகாதாரக் கேடு இருப்பதாகவும் குற்றம் சாட்டி, ரான்பாக்ஸியின் நான்கு இந்திய மருந்து ஆலைகளுக்கு ஏற்றுமதித் தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. இதேபோல வோக்கார்ட் நிறுவனத்தின் இரண்டு ஆலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* வோக்கார்ட் நிறுவனத்தின் நான்கு வலி நிவாரணிகள், ஒரு நீரழிவு நோய் மருந்து என ஐந்து மருந்துகளுக்குத் தடை விதித்த பிரிட்டன், அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு வழங்கிய தரச்சான்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.

கடந்த ஓராண்டில் இந்திய நிறுவனங்கள் மீது வெளிநாடுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு சிறு துளியே இவை. இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் முதலீடு ஈட்டித் தருவது வெளிநாட்டு ஏற்றுமதியே! ஆண்டுக்கு 93 ஆயிரம் கோடி ரூபாய் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. மிகக் குறைந்த விலையில் தரமான மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்து தருவதாக நல்ல மதிப்பு பெற்றிருந்தது. உலகத்தரமான தொழிற்கூடங்களை பல நிறுவனங்கள் அமைத்துள்ளன. அமெரிக்காவின் மருந்துத் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது இந்தியாதான்.
ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மருந்துகள் மீது நிறைய புகார்கள். கடந்த 2010ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வு ஒன்று, ‘இந்திய மருந்துகளில் 20 சதவீதம் போலி; 12 சதவீதம் கலப்படம்’ என்றது. இதைத் தொடர்ந்து பரிசோதனைகள் கடுமை ஆகின.

தங்கள் நாட்டுக்கு வரும் மருந்து எங்கு, எப்படிப்பட்ட சூழலில் தயாராகிறது என தொழிற்கூடங்களை வந்து பார்த்து ஆய்வு செய்வது அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வழக்கம். அப்படி சோதித்து திருப்தியடைந்த தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுப்பார்கள். அங்கு தயாராகும் மருந்துகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். அதே நிறுவனம், அதே மருந்தை அவர்களின் வேறொரு தொழிற்சாலையில் தயாரித்தால்கூட அதை ஏற்றுமதி செய்ய முடியாது. இதையெல்லாம் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அடிக்கடி ஆயுவு செய்வார்கள். முன்பெல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே ஆய்வுகளை நிகழ்த்துவார்கள். ஆனால் 2013ம் ஆண்டில் 160 இந்தியத் தொழிற்சாலைகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அந்த அமைப்பு கடந்த ஆண்டு கொடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்களில் பாதியைப் பெற்றது இரண்டு இந்திய நிறுவனங்களே!

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கமிஷனர் மார்கரெட் ஹம்பர்க் இந்தியாவுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுப்பயணம் வந்து, கடந்த வாரம் திரும்பிப் போனார். மருந்துத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, தரத்தை வலியுறுத்திய அவர், ‘‘நம்பி வாங்கும் அளவுக்கு பாதுகாப்பானதாக மருந்துகள் இருக்க வேண்டும். நாங்கள் எதிர்பார்க்கும் தரம் இருக்க வேண்டும். தரமற்ற இந்திய மருந்துகளால் அமெரிக்கர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்’’ என சொல்லிவிட்டுப் போனார். சமீப ஆண்டுகளாக மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக சீனா வளர்ந்திருக்கிறது. ‘‘இந்தத் தொழில் போட்டியில் இந்தியாவை வீழ்த்த உலக நாடுகள் செய்யும் சதியே இந்த தடைகளும் நடவடிக்கைகளும்’’ என இந்திய மருந்து நிறுவனங்கள் சொல்கின்றன.ஆனாலும் இங்கு மருந்து தயாரிப்பில் ஏராளமான பிரச்னைகள் இருப்பது உண்மை. ஒரு புதிய மருந்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அதை விலங்குகளிடம் சோதித்துவிட்டு, பிறகு மனிதர்களிடமும் சோதிக்க வேண்டும். இதை ‘டிரக் ட்ரையல்’ என்பார்கள். இதில் அப்பாவி நோயாளிகளை மோசடி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளால், கிட்டத்தட்ட டிரக் ட்ரையலுக்கே மத்திய அரசு தடை விதித்து விட்டது.

நம் ஊரில் இருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிலும் போதுமான அதிகாரிகள் இல்லை. அதனால் தரப் பரிசோதனை என்பதே பெரும் ஜோக் போல ஆகிவிட்டது.
இங்கேதான் அதிபயங்கரமான ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஏற்றுமதித் தயாரிப்புகளே இப்படி என்றால், நம் ஊரில் கிடைக்கும் மருந்துகள்?
கிட்டத்தட்ட அவை எத்தகைய கண்காணிப்புக்கும் உட்படாதவை. இந்தியா முழுக்க மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்கவும், தயாரிப்பு முறைகளை பரிசோதிக்கவும் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் டிரக் ஸ்டாண்டர்டு கன்ட்ரோல் ஆர்கனிசேஷனில் 5 ஆயிரம் அதிகாரிகள்கூட இல்லை. இதையெல்லாம் தாண்டி, ‘இந்த மருந்தை சாப்பிட்டால் நோய் குணமாகும்’ என்ற நம்பிக்கையே பலரைக் காப்பாற்றுகிறது. நம்பிக்கையும் பறிபோய், மருந்தும் தரமற்றதாக ஆகும் சூழ்நிலை ஆபத்தானது!

source.dinakaran

Post a Comment

0 Comments