'மார்பிள் மாபியா' பாணியில் ராமஜெயம் கொலையா?

ராஜஸ்தானில் மார்பிள் தொழில் நடத்துவோர் தங்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த சோராபுதீன் ஷேக்கை எப்படி ஒன்று சேர்ந்து பெரும் பணத்தைச் செலவு செய்து, குஜராத் போலீஸ் மூலம் கொலை செய்தனரோ, அதே பாணியில் ராமஜெயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையை வைத்து ராமஜெயத்தைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ராமஜெயம் ஒரு சாதாரண என்ஜீனியர்தான். ஜனனி குரூப் ஆப் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார். அவரது அண்ணன் நேரு அரசியலில் பெரியவராக உருவெடுத்த பின்னர் அவரது வலதுகரமாக மாறினார். தனது முழு நேரப் பணிகளை சைடு பிசினஸ் போல மாற்றி விட்டு கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் அவர் தீவிரம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

நேருவின் அரசியல் பணிகள், காண்டிராக்ட், குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட தொழில்களை கவனித்து வந்தார் ராமஜெயம். இதில் ரியல் எஸ்டேட் தொழிலில்தான் அவருக்கு நிறைய எதிரிகள் உருவாகினர். காரணம், அடாவடியாக பலரது நிலங்களையும் ராமஜெயம் தரப்பு வளைத்துப் போட்டதுதான் என்கிறார்கள். இதனால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக அவரது பொறியியல் கல்லூரிக்குத் தேவையான நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்து எடுத்துக் கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரியல் எஸ்டேட்காரர்கள் கடந்த வருடம் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டனர். இதில் ராமஜெயத்தின் பெயர் அடிபட்டது. ஆனால் அப்போது நடந்தது திமுக ஆட்சி. எனவே அடிபட்டதோடு சரி, அதன் பிறகு அது அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

இப்படி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும், ராமஜெயத்துக்கு எதிராக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த பலர் எதிரிகளாக உருவாகி வந்தனர். இப்படி ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் புள்ளிகள் அனைவரும் இணைந்து கூலிப்படையை ஏவி ராமஜெயத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொலைக்குப் பழி தீர்க்கும் வகையிலும் இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகப் பார்வையும் விழுந்துள்ளது.

மேலும் ராமஜெயத்தின் நடமாட்டத்தை மிக மிக உன்னிப்பாக கவனித்துக் காத்திருந்து போட்டுள்ளனர். அவர் எப்போது தனியாக சிக்குவார் என்பதைக் கவனித்து ஆளைத் தூக்கியுள்ளனர். மேலும் நேற்று அவர் தனியாக வருவார் என்பதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்து கொண்டு டிராவலர் வேனில் கடத்திச் சென்று கொலை செய்துள்ளதைப் பார்க்கும்போது கொலை செய்வதில் மிக மிக நேர்த்தியாக செயல்படும் கை தேர்ந்த கொலைகாரக் கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எனவே கொலைகாரக் கும்பல் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அல்லது வேறு மாநிலத்திலிருந்து கூட்டி வரப்பட்டவர்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments