ரூ. 1.34 கோடி சம்பளத்தில் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை


சமூக இணையதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் இணையதளம்,  ரூ. 1.34 கோடி ஆண்டு சம்பளத்திற்கு அலகாபாத் என்ஜினியரிங் மாணவரை பணிக்கு எடுத்திருக்கிறது. இந்திய அளவில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரும் இந்த அளவு அதிக சம்பளம் பெற்றதில்லை.
இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி கூறியதாவது:
எங்களது நிறுவனத்தில் பி.டெக். படித்துவரும் மாணவரைத்தான் பேஸ்புக் நிறுவனம் பணிக்கு அழைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட வேண்டாம் என அம்மாணவர் கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை இங்கே சொல்ல முடியவில்லை.
மார்ச் 27-ம் தேதி பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பணி நியமன ஆணை அம்மாணவருக்கு கிடைத்தது. ஆண்டுக்கு 2,62,500 அமெரிக்க டாலர் சம்பளமாக  (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.34 கோடி) வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு அக்டோபர் துவங்கியது. மின்னஞ்சல் மூலம் பேஸ்புக் விண்ணப்பம்  அனுப்பி இருந்தது. அதன் பிறகு 9 முறை தொலைபேசியில் இண்டர்வியூ நடத்தப்பட்டது. அனைத்து இண்டர்வியூவிலும் இம்மாணவர் வெற்றி பெற்றதால் வேலையில் வந்து சேருமாறு பேஸ்புக் இணையதளம் அழைப்பு விடுத்தது.
கான்பூரில் வசித்து வரும் இம்மாணவர்  தனது இன்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க்கில் பணியாற்ற இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: