வாசு இயக்கத்தில் மீண்டும் ரஜினி?

பாபா படம் முடிந்த பிறகு, 'இறைவா நண்பர்களிடமிருந்து காப்பாற்று, பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்ற வரிகளுடன் அறிவிக்கப்பட்ட படம் ஜக்குபாய். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ஆனால், அந்தப் படத்தை பின்னர் பல்வேறு காரணங்களால் கைவிட்டார் ரஜினி. அதன் பிறகு சில நாட்கள் கழித்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி நடித்தார். அந்தப் படம் வரலாறு படைத்தது.

இப்போது கிட்டத்தட்ட அதே சூழ்நிலை உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். கோச்சடையானுக்காக ராணாவை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் ரஜினி. கோச்சடையான் முடிந்ததும் ராணா தொடங்கும் என கேஎஸ் ரவிக்குமாரும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வரும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்தான் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது.

கோச்சடையான் முடிந்ததும் ரஜினி ராணாவை எடுக்காமல், பி வாசு இயக்கத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ஒரு குறுகிய கால படம் ஒன்றை நடிக்க விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

35 நாட்கள் இந்தப் படத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் அதற்குள் படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், உதடுகளை இறுக மூடிக் கொள்கிறார்கள்!

No comments: