பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல்

பணம், புகழுக்காக மட்டும் நடிக்க வந்திருந்தால், சினிமாவில் இவ்வளவு காலம் என்னால் நிலைத்திருக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல் தற்போது }ஹீரோவாக நடித்து, இயக்கி, தயாரித்து வரும் படம் விஸ்வரூபம். மிகப்பெரும் பொருட்ச்செலவில் உருவாகி வரும் இப்படத்த‌ில் கமல் ஜோடியாக பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். 

இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மற்றும் இந்தியில் விஸ்வரூபம் படம் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் சோனாக்ஷி தான் இந்தபடத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் திட்டமிட்டப்படி படம் தொடங்காததால், அவரின் கால்ஷீட் வீணாகி போனது. இதனால் அவர் நடிக்க வில்லை. ஹேராம், தசாவதாரம் போன்ற என்னுடைய படங்கள் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஆனால் வசன காட்சிகளில் டப்பிங் சரியாக அமையவில்லை. அதனால் தான் விஸ்வரூபம் படத்தை இரண்டு‌ மொழியிலும் எடுக்கிறேன். 

நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. நடிப்பில் சலிப்பு ஏற்படவில்லையா என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. வெறும் பணம் மற்றும் புகழுக்காக நான் சினிமாவில் நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் என்னால் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது. கேமரா முன் நிற்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. அதனால் தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். அதுவும் என்னுடைய வயசுக்கு ‌ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments: