100 ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு நிகழ்ச்சி, குருசாமிபாளையத்தில் கோலாகலமாக நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், சிவசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 11ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 19ம் தேதி ஸ்வாமிக்கு திருக்கல்யாணமும், திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தொன்று தொட்டு நடந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமிபாளையத்தில், கைத்தறி நெசவு முக்கிய தொழிலாக விளங்குகிறது. அப்பகுதியில், கைத்தறிக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் பிளேக் நோயால் இவ்வூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம் மதத்தினர் சிலர் ஊருக்கு பொதுவான இடத்தில் சென்டா மரம் என்று அழைக்கப்படும் புளியமரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "பாத்தியா ஓதி' பொட்டுக் கடலையும், நாட்டு சர்க்கரையும் வழங்கினர். அதை தொடர்ந்து நோய் குணமானதாக கூறப்படுகிறது. இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. மேலும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகவும், முஸ்லிம் மதத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன், ஊர் பெரிய தனக்காரர் கேசவமூர்த்தி தலைமையில், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளி வாசலுக்கு, தேங்காய் பழத்தட்டுடன் சென்று விழாவுக்கு அழைப்பர். முஸ்லிம் மதத்தினரும் விழாவில் பங்கேற்று, வீடு தோறும் சந்தனம் பூசுவார்கள். அந்நிகழ்ச்சி நேற்று நடந்தது,

சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து கிழக்கு தெரு பள்ளி வாசல் நிர்வாகி ஹனிபா தலைமையில், அப்துல் அஜிஸ், கவுன்சிலர் காதர்பாஷா உள்ளிட்டவர்கள், குருசாமிபாளையம் வந்தனர். சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, வெள்ளைக்கொடி ஏந்திச் சென்று வீடுகள் தோறும் சுவர்களில் சந்தனத்தை பூசினர். தொடர்ந்து, பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடி ஏற்றினர். அப்போது ஊர் பெரியதனக்காரர் கேசவமூர்த்தி கைகளில், பள்ளி வாசல் ஹனிபா சந்தனம் பூசினார். அவருக்கு கேசவமூர்த்தி சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் மாலைகள் மாற்றி கொண்டனர். தொடர்ந்து "பாத்தியா ஓதி' முஸ்லிம்கள் நாட்டு சர்க்கரையும், பொட்டுக் கடலையும் வழங்கினர். நிகழ்ச்சியில், முஸ்லிம் மதத்தினர், நெசவாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருவதால், உலக அமைதி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments