Pakistan vs West Indies Full Match Highlights World Cup 2011

உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி சுலபமாக முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் சுழலில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 112 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக வெளியேறியது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள மிர்புர் நகரில், நேற்று நடந்த முதலாவது காலிறுதியில் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
மூன்று மாற்றம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. கிறிஸ் கெய்ல், சந்தர்பால், கீமர் ரோச் வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பதிலாக எட்வர்ட்ஸ், பென், ஆன்ட்ரி ரசல் நீக்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ரெஹ்மானுக்கு பதிலாக சயீத் அஜ்மல் வாய்ப்பு பெற்றார்.
சுழல் ஜாலம்:
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல், டேவன் ஸ்மித் ஜோடி துவக்கம் கொடுத்தது. உமர் குல் வேகத்தில் கெய்ல் (8) நடையை கட்டினார். ஹபீஸ் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் டேவன் ஸ்மித் (7), டேரன் பிராவோ (0) அவுட்டானார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்த சர்வான் (24), போலார்டு (1), டேவன் தாமஸ் (0) உள்ளிட்டோர் அப்ரிதி சுழலுக்கு பலியாகினர். பின், சயீத் அஜ்மல் சுழலில் கேப்டன் சமி (1), பிஷூ (0) வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 27.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து திணறியது.
சந்தர்பால் ஆறுதல்:
பின் இணைந்த அனுபவ சந்தர்பால், கீமர் ரோச் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக தடுத்து ஆடிய இந்த ஜோடி படுமந்தமாக ரன் சேர்த்தது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது கீமர் ரோச் (16), அப்துல் ரசாக் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த ரவி ராம்பால் (0), அப்ரிதி சுழலில் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டது. சந்தர்பால் (44) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 4, முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல் தலா 2, உமர் குல், அப்துல் ரசாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அசத்தல் வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்தை வெளுத்து வாங்கிய ஹபீஸ், ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய இந்த ஜோடி 20.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கம்ரான் அக்மல் (47), ஹபீஸ் (61) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது குறைந்தபட்சம்
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 112 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, <உலக கோப்பை அரங்கில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கென்யா (93 ரன்கள், 1996), ஆஸ்திரேலியா (110 ரன்கள், 1999) அணிகளுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
* இது, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 9வது குறைந்த பட்ச ஸ்கோர். கடந்த 2004ல், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 54 ரன்களுக்கு சுருண்டதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஸ்கோர். ஐந்து முறை 100 ரன்களுக்கும் குறைவாக சுருண்டது.
---
ஏழாவது முறை
நேற்று வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் ஏழாவது முறையாக (1979, 83, 87, 92, 96, 99, 2011) காலிறுதிக்கு முன்னேறியது.
* இதில் கடந்த 1979, 83, 87ல் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, கடந்த 1992ல் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 1996ல் காலிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, 1999ல் பைனல் வரை முன்னேறியது. கடந்த 1975, 2003, 2007ல் நடந்த தொடர்களில் முதல் சுற்றோடு வெளியேறியது.
---
முதன்முறை
வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக யு.ஏ.இ., (1996), நியூசிலாந்து (1999) அணிகளுக்கு எதிராக தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நியூசிலாந்து (1986), வங்கதேசம் (2008) அணிகளுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வருகிறது பாக்.,
கடந்த 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணி, தனது பயணத்தை ரத்துசெய்தது. இதனால் இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் உட்பட அனைத்து வித விளையாட்டு போட்டிகளும் ரத்தானது. அதன்பின், இரு அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் நடக்கவே இல்லை. தவிர, பாகிஸ்தான் அணியும் இந்தியா வரவில்லை.
இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையில் நடந்தன. இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்த உலக கோப்பை காலிறுதியில் வென்ற பாகிஸ்தான், வரும் 30ம் தேதி, நடக்கும் அரையிறுதியில் பங்கேற்க இந்தியா வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்று முன்னதாகவே நினைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, இந்திய செல்வதற்கு தூதரகத்திடம் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்தனர்.


Post a Comment

0 Comments