கரூர் - குதூகலத்தில் வாக்காளர்கள்!

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியத் தொகுதியில் 'கரன்ஸி மழை' தொடங்கி விட்டதாம். கொளுத்தும் கடும் வெயிலுக்கு மத்தியில் வந்துள்ள இந்த 'மாமழை'யைப் பார்த்து மக்கள் மகிழ்ந்து போயுள்ளனராம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில்தான் இந்த கரன்சி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறதாம். இந்த மாவட்டத்தில் கரூர், அவரக்குறிச்சி, கிருஷ்ணராபுரம், குளித்தலை என நான்கு தொகுதிகள் உள்ளது.

இதில் உள்ள ஒரு தொகுதியில் இந்திய பணக்காரர்களில் ஒருவராக உள்ள ஒருவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பலர் களம் இறங்கி இரவு பகலாக வேலை செய்து வருகின்றார்களாம்.

'மாலை 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது' என்று வடிவேலு படத்தில் வசனம் வரும். ஆனால் இந்த தொகுதியிலோ ஆறு மணிக்கு மேல்தான் சுறுசுறுப்பாக பணியில் இறங்குகிறார்களாம்.

குழு குழுவை கிராமங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள தங்களுக்கு ஆதரவானவர்களை சந்தித்து கரன்சிகளை கையில் அழுத்தி, மறக்காதீர் என்று கேட்டு தங்களது சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி திரும்புகிறார்களாம்.

இது குறித்து எதிர் தரப்பு வேட்பாளர், தேர்தல் அதிகாரியான கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு சென்றாராம். ஆனால் சரிவர நடவடிக்கை இல்லையாம். இதனால் கலெக்டர் மீதே குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளனவாம்.

No comments: