விலங்கு கேக்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் கேக் நிபுணர் விக்கி ஸ்மித். சமீபத்தில் 100 மணி நேரங்களைச் செலவிட்டு, ஸ்லோத் என்ற விலங்கின் வடிவத்தில் ஒரு கேக்கை உருவாக்கியிருக்கிறார். கேக் என்பதே தெரியாமல் நிஜ ஸ்லோத் போலவே அற்புதமாக இருக்கிறது. ‘‘சாதாரணமாக 40 - 50 மணி நேரங்களில் ஒரு கேக்கை உருவாக்கி விடுவேன். ஸ்லோத் கேக் அதிக வேலை வாங்கிவிட்டது. ஸ்லோத் உடலில் இருக்கும் ரோமங்களைக் கூட நீங்கள் சாப்பிட முடியும். ஒவ்வொன்றையும் துல்லியமாக இதில் கொண்டு வந்திருக்கிறேன். அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது ஸ்லோத் இனம். அவற்றைக் காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக இந்த கேக் செய்திருக்கிறேன்.

நவம்பர் மாதம் வனவிலங்கு பாதுகாப்பு கண்காட்சியில் ஸ்லோத் கேக் இடம்பெறுகிறது. கண்காட்சிக்குப் பிறகும் இந்த கேக்கைச் சுவைக்க முடியாது. கேக் செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கும். கண்காட்சியில் தூசி, அழுக்கு எல்லாம் படிந்திருக்கும். சுவையாக, கஷ்டப்பட்டுச் செய்திருந்தாலும் கூட ஸ்லோத் கேக் பார்ப்பதற்கு மட்டுமே’’ என்கிறார் விக்கி ஸ்மித்.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்… அத்தனை அழகு!
கலிஃபோர்னியாவில் ‘17வது கதவு’ என்ற ஒரு திகில் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பயங்கரமான அனுபவத்தை இங்கே பெற முடியும் என்கிறார்கள். இந்த அறைகளுக்குள் ஒரு கற்பனை கதை நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்கிறார். அந்தக் கல்லூரியில் நடைபெறும் திகில் சம்பவங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்கள். ஒவ்வோர் அறையிலும் 90 நொடிகள்தான். ஆனால் பயத்தில் 90 நிமிடங்களாகத் தெரியும் என்கிறார்கள்.
கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் இறந்து போன நாய்கள், பன்றிகள், பேய் வேடம் இட்ட மனிதர்கள், அதிக வெப்பம், அதிகக் குளிர், நறுமணம், காணொளிக் காட்சிகள், அலற வைக்கும் இசை என்று கலங்க வைக்கிறார்கள். செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திகில் அரங்கை இதுவரை 350 பேர் பார்வையிட்டு, பத்திரமாகத் திரும்பியிருக்கிறார்கள். ‘‘30 நிமிடங்களில் பயங்கரத்தின் உச்சத்தைக் கண்டுவிட்டோம். ஒரு அறையில் என்னை யாரோ பிடித்து இழுத்தனர். திடீரென்று சிறிது வெளிச்சம் வந்தபோது ஒரு ரத்தக் காட்டேரி முகம் முழுவதும் ரத்தத்துடன் என்னை இழுப்பது தெரிந்தது. உயிரே போய்விட்டது போல உணர்ந்தேன்.
அங்கிருந்தபோது உயிர் பிழைத்து வெளியே வந்தால் போதும் என்று தோன்றியது. ஆனால் வெளியே வந்த பிறகு, எவ்வளவு அற்புதமான அனுபவம் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. இனி வாழ்க்கையில் எதைக் கண்டும் பயமில்லை’’ என்கிறார் ரெபேகா. ‘‘எங்களின் திட்டப்படி எல்லாம் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் சுவாரசிய மான பயங்கரத்தை அனுபவித்திருக்க முடியும். சில பயங்கரங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். 65 லட்சம் ரூபாயில் திகில் அரங்கை உருவாக்கியிருக்கிறோம்’’ என்கிறார் நிறுவனர் ஹெதர். 1,600 ரூபாயி லிருந்து 2,300 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதுவரை 20 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
அர்ஜெண்டினாவில் வசிக்கும் இளைய தலைமுறையினர் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்குப் பதிலாக ’போலி திருமண விருந்து’ கொடுத்துவிடுகின்றனர். இந்த விருந்தில் மணமக்கள் மட்டுமே போலிகள். விருந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் நிஜமானவை. 26 வயது மார்டின் அசெர்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு போலி திருமண விருந்தை நடத்தினார். அது வேகமாக அர்ஜெண்டினா முழுவதும் பரவிவிட்டது. ‘‘போலி திருமண விருந்து மிகவும் வெற்றிகரமான தொழிலாக வளர்ந்துவிட்டது. புதுப் புது இடங்கள், விதவிதமான உணவுகள், பூ அலங்காரம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று நிஜ திருமணத்துக்குச் செய்யும் அத்தனை வேலைகளும் இதற்கும் உண்டு. நிஜ திருமணத்துக்கு ஆகும் செலவுகளும் உண்டு.
600 முதல் 700 விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். ஒருவருக்கு 3,300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கிறார்கள். திருமண விருந்துகளுக்கு பெண்களே அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்கிறார் மார்டின். ‘‘போலி திருமண விருந்தில் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி நடக்கும். நண்பர்களுடன் கிண்டல், விளையாட்டு என்று உற்சாகமாக இருக்கும். திருமண வாழ்க்கை என்பது வாழ்நாள் கடமை. அதனால் இளைய தலைமுறையினர் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. போலி திருமண விருந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த மகிழ்ச்சியை விட நாங்கள் விரும்பவில்லை’’ என்கிறார் பாப்லோ போனிஃபேஸ்.
1990ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் 22 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். அவர்களில் 11,642 ஜோடிகள் 2013ம் ஆண்டுக்குள் பிரிந்துவிட்டனர். அதனால் நிஜத் திருமணங்களை விட போலி திருமணத்தில் மகிழ்ச்சி அதிகமாக இருப்பதாக மக்கள் நினைப்பதால், இந்தத் தொழில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது!

No comments: