‘ராஃப்ட்’ செயலி-போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும்

         பயணத்துக்கு டிக்கட் பதிவு செய்வதில் ஆரம்பித்து, தேவையான பொருட்கள் வாங்குவதுவரை எல்லாவற்றையும் ஸ்மார்ட் போனின் செயலிகளில்தான் பெரும்பாலானோர் செய்கின்றனர். இப்படிப் பெருகும் ஆப்ஸ் பயன்பாடுதான், சென்னை ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களான சித்தார்த், கிருஷ்ணா, அகிலேஷ் ஆகிய மூவரையும் ‘ராஃப்ட்’(Raft) செயலியை உருவாக்க வைத்திருக்கிறது. இவர்கள் இந்தச் செயலியை பொதுமக்களின் போக்குவரத்துக்கு உதவிசெய்யும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

ரயில், பஸ் பிடிக்க

மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்து இயக்கங்களை இந்தச் செயலியின் உதவியோடு எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம். இந்தச் செயலி இப்போது சென்னை, கோவை ஆகிய நகரங்களில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இந்த இலவச செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இதுவரை ஒரு லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.
ஒரு மாநகர பேருந்து, உங்கள் பேருந்து நிறுத்தத்துக்கு எந்த நேரத்துக்கு வருகிறது, ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல எந்தெந்த பேருந்துத் தடங்களை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் வசதியுடன் இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், அந்தப் பேருந்து வெள்ளை பலகையா, பச்சை பலகையா, டிலெக்ஸ் பேருந்தா, ஏசி பேருந்தா போன்ற தகவல்களையும் இந்தச் செயலி வழங்குகிறது.

இருந்த இடத்தில்
“சென்னையில் இருக்கும் ஆறாயிரம் பேருந்துநிறுத்தங்கள், ஆயிரத்து ஐந்நூறு பேருந்து தடங்கள் பற்றிய தகவல்களை ‘ராஃப்ட்’ வழங்குகிறது. அதேமாதிரி, கோவையின் இரு நூறு பேருந்து நிறுத்தங்கள் பற்றிய தகவல்களையும் சமீபத்தில் இணைத்துள்ளோம். இந்தத் தகவல்களை எல்லாம் ஒரு குழு அமைத்து நாங்களே திரட்டினோம். அதனால் தகவல்களும், பேருந்து வரும் நேரமும் பெரும்பாலும் துல்லியமாகவே இருக்கிறது. விரைவில் பெங்களூருவில் ‘ராப்ட்’ செயல்படவிருக்கிறது” என்கிறார் ராஃப்ட் செயலியை உருவாக்கிய வர்களில் ஒருவரான சித்தார்த்.
சென்னையில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலானோர் ‘கூகுள் மேப்ஸ்’ பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் அவ்வப்போது மாறுதல்கள் செய்யப்படுவதில்லை. இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்துத்தான் இவர்களுக்கு ‘ராஃப்ட்’ உருவாக்கும் எண்ணம் வந்திருக்கிறது. நகரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அவ்வப்போது ‘அப்டேட்’ செய்து ‘ராஃப்ட்’ செயலியை வெற்றிகரமாகச் செயல்படவைத்திருக்கின்றனர். சென்னையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் பேருந்து, மின்சார ரயிலுக்காகக் காத்திருக்கும் நேரத்தை இந்தச் செயலி பெருமளவுக்குக் குறைக்கிறது.

உடனடித் தீர்வு
“இந்தச் செயலியை நான்கு ‘எம்பி’ அளவைதான் உங்கள் போனில் எடுத்துக்கொள்ளும். அத்துடன், 2ஜியில் விரைவாகச் செயல்படும்படி இதை வடிவமைத்திருக்கிறோம். பேட்டரி பயன்பாடும் குறைவாகச் செலவாகும்படி வடிவமைத்திருக்கிறோம். அத்துடன், பயனாளிகள் தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யும் வசதியிருப்பதால், உடனுக்குடன் அவர்களுடைய கருத்துகளை பரிசீலித்துத் தீர்வுகளும் வழங்குகிறோம்” என்று சொல்கிறார் சித்தார்த்.
கூகுள் பிளே ஸ்டோரில் ‘ராஃப்ட்’ செயலியைத் தரவிறக்கம் செய்ய: http://app.letsraft.in/
மேலும் விவரங்களுக்கு: https://www.facebook.com/letsraft.in

source.hindu

Post a Comment

0 Comments