நிழலாய்த் தொடரும் வினைப்பயன்கள்

                   உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர்.
அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது.
         அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம் தாங்கிய ஒரு நடனமிடும் கலைஞனாக அவன் பங்கேற்கிறான். அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு பால்தரும் இளந்தாயின் ஆடைவிலகிய அந்தக் கணத்தில் அவன் மனம் சஞ்சலப்படுகிறது.சிலநாட்களில் மடத்திற்கு சொந்தமான பகுதிகளில் ஊர்ப்பயணம் மேற்கொள்கிறார்கள் லாமாக்கள். மடத்திற்கு சொந்தமான நிலத்தைப் பயிரிடும் விவசாயியின் குடும்பத்தில் அவர்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. விருந்துணவும் உபசரணையும் சிறப்பாகவே அமைகின்றன. அங்கிருந்து புறப்படும்போது விவசாயி மகள் பீமாவின் கண்களோடு தாக்ஷியின் கண்கள் கலக்கின்றன. பலரும் அறியவே இந்த விபத்து நடந்தேறுகிறது.
இமய மலையில் உள்ள மடத்திற்கு வந்தபிறகும் அவன் மனம் அந்தப் பார்வையில் கிடைக்கும் இளைப்பாறுதலுக்காக ஏங்குகிறது. அவனது இந்நிலை சக பருவத் துறவியின் மூலம் மடத்தின் மூத்த பிக்குகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. சிலகாலம் அவனை வெளியுலகிற்கு அனுப்பிவைக்க மடத்தின் நிர்வாகம் முடிவு செய்கிறது. அதன்படி, அவன் செல்லவேண்டிய பாதை, சந்திக்கவேண்டிய மனிதர்கள் என உரிய வழிகாட்டுதல்களும் தரப்படுகின்றன. அவனும் செல்கிறான். ஆனால் அந்தப் பயணம் என்றென்றைக்குமாய் தூயநெறிக்கு திரும்ப முடியாதவாறு நிலைத்து விடுகிறது.
ஓர் அற்புதமான காட்சி இப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்நிலை தியானத்திற்குப் பிறகு, புத்த மடத்திற்கு வந்ததிலிருந்து அவனுடன் எப்போதும் அழகும் துடிப்பும் மிக்க ஒரு நாய்க்குட்டி சுற்றிக்கொண்டேயிருக்கும். அவன் மடத்தைவிட்டு புறப்படும்போது அந்த நாய்க்குட்டியும் அவனுடன் புறப்படும். அவன் செல்லும் பாதையெங்கும் உடன் செல்லும். அவன் ஆற்றங்கரைக்கு வந்து ஒருமுறை மூழ்கி எழுவான். பிறகு மடத்தில் அணியப்படும் துவராடைகளைக் களைந்து நாட்டுபுற குடியானவன் போன்ற துணிகளை அணிந்துகொள்வான். பிக்குகளுக்கேயுண்டான மொட்டைத் தலையையும் மறைத்து தலைப்பாகை அணிந்துகொள்வான்.

அவனுடைய திடீர் மாற்றத்தை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி திகைக்கிறது. அவனைப் பார்த்து ''லொள்லொள்'' என்று குலைத்துவிட்டு அந்தக்கணமே அவனிடமிருந்து விலகி ஓடிவிடுகிறது. அந்த நாய்க்குட்டியின் பெயர் 'காலம்'.
'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிற புத்தமொழிக்கான திரைக்கதைக் காட்சிகள், வானிலையை தீவிரமாக்கும் மேகங்களைப்போல திரண்டெழுந்து வருகின்றன இத்திரைப்படமெங்கும். அவை யாவும் உருவகத் தன்மையோடும் யதார்த்த வாழ்வின் அடர்த்தியோடும் சில இடங்களில் மோகத்தின் குளிர்சாகரமாகவும் அலையடிக்கின்றன.
கோதுமை கொள்முதல் செய்யவரும் வியாபாரிகளின் பேராசையில் விளைந்த அவர்களின் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்துவான். அதற்காக பழிவாங்கப்படுகிறான். பின்னர் நகரத்திற்குச் சென்று அவர்களிடமே சண்டைக்குச் சென்று தோற்கிறான்.
கிராமத்தில் இன்னுமொரு அழகான பெண்ணை தாக்ஷி காணுவான் . வயல் வேலைகள் செய்ய வரும் அந்தப் பெண்ணின் மீதும் தாக்ஷிக்கு ஆசை முளைக்கும். பூவுக்குப் பூ தாவும் பட்டாம்பூச்சியாய் அவன் மனம் படபடக்கும். இவன் மனைவி வெளியூர் செல்லும் நாளில் அந்த 'ஆசை' நிறைவேறவும் செய்யும்.
           மனைவி என்கிற உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவளைக் கடந்து மனம் தடுமாறி தடுக்கிவிழுந்ததை நினைத்து வருந்துவான். மனைவியும் அவளும் இப்பவும் தோழிகள்தான். இத்தகைய விஷயங்களை மறைத்து வாழும் நிலைக்கு அவன் தள்ளப்படுவான். இந்நிலையில் வாழ்வின் கசப்பை உணர்ந்தவனாகிறான். இந்த கேவலப்பட்ட பிழைப்புக்காகவா ஆழ்நிலை தியானம் எனும் உயர்நிலை தகுதி அடைந்தோம் என்றெல்லாம் அவன் மனம் விகசிக்கும். ஒரு நீண்ட இரவெங்கும் விழித்திருப்பான். மீண்டும் புத்தமடத்திற்கு சென்றுவிட அவன் தீர்மானிப்பான். பின்னிரவில் புறப்பட்டுவிடுவான்.
வெயில் ஏறிய காலையில் நதிக்கரையை அடைவான். அங்கு வழக்கம்போல தனது குடியானவனுக்கு உண்டான தோற்றங்களைக் களைந்து புத்த பிக்குகளுக்கான துவராடையை அணிந்து தலையையும் மழித்துக்கொள்வான். அதைத் தொடர்ந்து முற்றிலும் மாறுபட்டவனாய் இமாலய மலையின் மடியில் அமைந்துள்ள புத்த மடலாயத்தை நோக்கி பீடுநடை போடுவான். புத்த மடாலய அடிவாரத்தில் கல்லடுக்குகள் நிறைந்து மதிலாக நீண்டிருக்கிற எல்லைபோன்ற வாயில் பகுதி திருப்பத்தை அடையும்போது அவனுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருக்கும்.
'எண்ணங்கள், ஆசைகள் யாவும் மனத்தினாலே உண்டாக்கப்படுகின்றன. ஒருவன் தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டியைப் போல அவனுடைய அடிச்சுவடிகளைப் பின்பற்றித் தொடர்கின்றன' எனும் தம்மபதத்தின் யமக வர்க்க ஸ்லோகம்போல அங்கு அவன் மனைவி நின்றிருப்பாள்.
அவன் அங்குவந்து சேர்வதற்கு முன்பாகவே அந்த இளங்காலையில் அவன் மனைவி அங்கு குதிரையில் வந்து காத்துக்கொண்டிருப்பாள். அவளைக் கண்டதும் பேச்சின்றி நின்றுவிடுவான். அவள் அவன் அருகில் வந்து அவனைச் சுற்றிவந்தவாறே பேச முற்படுவாள்.
சித்தார்த்தன் நள்ளிரவில் மனைவியை விட்டுச் சென்ற கதையைத்தான் அப்போது அவள் சொல்வாள். யசோதரா நிலை அதற்கப்புறம் என்ன ஆனது என்று யாராவது இதுவரை யோசித்திருக்கிறார்களா என்றும் கேட்பாள். அல்லது அதன்பிறகு மனைவி யசோதராவும் குழந்தை ராகுலும் என்ன ஆவார்கள் என்று புத்தனாவதற்கு முன் அந்த சித்தார்த்தன் அதை யோசித்தாரா என்றும் அவள் கேள்விகள் தொடரும். நோய்வாய்ப்படும்வரையில் துன்பம் என்றால் என்னவென்று அறியாதவர்தானே அந்த புத்தர். அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்து அவரை உயிர்ப்பிழைக்க வைத்த யசோதராவுக்கு அவர் செய்த நன்றி என்ன? என்றும் தொடரு ம் பீமாவின் கேள்விகள் தாக்ஷியின் மனதைக் குத்திக் கிழிக்கும்.

மேலும் ஒரு ஆணுக்கு இது செல்லுபடியாகும். இதையே ஒரு பெண் செய்திருந்தால்? யசோதரா நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி இருந்தால் இந்த உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்குமா? என்று அவள் கேட்பாள். மேலும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியே கிளம்பும்போதும் அவனுக்கு அந்த காவித்துணிக்குள் கட்டித்தரும் சாப்பாட்டுக் கிண்ணத்தை இப்பொழுதும் கொண்டுவந்து அவன் முன் தரையில் வைப்பாள். அதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்படுவான்.

சித்தார்த்தன் ஞானம் பெற காட்டுக்குப் போன பின்பு யசோதரா வாழ்ந்த வாழ்க்கைக்கு உலகம் கொடுக்கும் பட்டம் என்ன தெரியுமா? வாழாவெட்டி. உண்மையில் தவறு யாருடையது? என மேலும் அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் தரமுடியாமல் அவன் மெல்ல நிலைகுலைந்து மண் தரையில் உட்கார்ந்துவிடுவான். கடைசியாக இன்னொன்றையும் அவள் கேட்பாள்.
அப்படி புத்தனாகப் போவது என முடிவெடுத்துவிட்டது சரிதானென்றால் இதுவரை என் வாழ்க்கையிலும் என் உடலிலும் நீங்கள் ஆட்சிசெலுத்தியதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்பாள். நிலைகுலைந்து ''பீமா பீமா'' என மண் புழுதியில் விழுந்து அழற்றுவான். வாழ்வியல் அனுபவமற்ற தியான யோகநிலைகள் எதுவும் சாரம் அற்ற சக்கையாக வீழ்ந்ததுபோலாகிறது. ''நான் வீட்டுக்கு திரும்ப வர்றேன்.'' என்பதை இரண்டுமுறைகூறுவான். அவள் சடுதியில் அங்கிருந்து மறைந்துவிடுவாள்.
அவன் வானத்தைப் பார்ப்பான். அப்போது படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட கழுகு ஒன்று வானில் சுற்றிக்கொண்டிருக்கும். வரையாட்டின் மீது அது காலில் கவ்வி எடுத்துவந்த கல்லை வானிலிருந்து அதன் தலையில் போட்டு கொன்றுவிடும். ஒரு வினைப்பயனை உணர்த்தும் அக்காட்சியின் தொடர்ச்சியாகவே அங்கிருந்த கல்லடுக்குகளின் மதில் மீது கிடக்கும் அந்தக் கூழாங்கல்லைக் கையில் எடுப்பான். அதில் எழுதப்பட்டிருக்கும் ''விழுந்த மழைத்துளி பிறகு என்னவானது'' எனும் வாசகத்தை படித்தவாறே மனதின் ஊசலாட்டத்தோடு நின்றுவிடுவான்.
எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கப்படுபவை.. ஒருவன் தூய எண்ணங்களோடு அல்லது தீய எண்ணங்களோடு காணும் எந்தக் காட்சிக்குமான விளைவுகள் நிழல்போல அவனைத் பின்தொடரும் எனும் புத்தரின் போதனையை இயக்குநர் பால் நலின் ஒரு தைலவண்ண ஓவியம் போல தீட்டிக்காட்டிவிட்டார்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்த இப்படத்தின் இயக்குநர் பான் நலின் இத்தாலிய புகழ்பெற்ற இயக்குநர் பெர்னாண்டோ பெட்டலூர்சியிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதனால்தானோ என்னவோ உலகின் மிகப்பெரிய மதத்தின் பிதாமகனான புத்தரின் செயல்பாட்டை விமர்சிக்க அறிவுத்துணிவோடு ஒரு கதையை உருவாக்க முடிந்திருக்கிறது அவரால். மேலும், 'வாழ்வியல் அனுபவம் சாராத எந்த கல்விக்கும் மதிப்பில்லை' என்ற அரிய செய்தியையும் இத்திரைக்கதைக்குள் பொதிந்து வைத்திருப்பதற்கு பெட்டலூர்சியிடம் இவர் பெற்ற பயிற்சி கைகொடுத்திருக்கிறது எனலாம்.

இதில் நடித்த கலைஞர்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பும் சிறந்த ஒளிப்பதிவும் சிறந்த கலைஇயக்கமும் சிறந்த இசையும்கூட இப்படத்தை காலத்தின் பெட்டகமாக நிலைபெற்றுவிட்டதற்கான முக்கிய காரணிகள்.இத்திரைப்படத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்படவிழாக்களின் விருதுகளை கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது, மெல்போர்ன் உலகத் திரைப்படவிழாவில் பெற்ற பார்வையாளர் சிறப்பு விருது.

source.hindu

Post a Comment

0 Comments