3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்

           2015-ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் லிண்டால், இங்கிலாந்து விஞ்ஞானி பால் மோட்ரிச், துருக்கி விஞ்ஞானி அஜிஸ் சன்கார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, சேதமடைந்த டி.என்.ஏ.-வை செல்கள் எவ்வாறு சரிசெய்கிறது என்பதை மூலக்கூறு மட்டத்தில் ஆராய்ச்சி செய்து நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு வேதியியல் நோபல் அளிக்கப்பட்டுள்ளது. 

உயிருடன் இருக்கும் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய அடிப்படை அறிவை இவர்களது கண்டுபிடிப்பு வழங்குகிறது. புற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறைகளில் இவர்களது கண்டுபிடிப்புகள் பெரும் பங்கு வகிக்கும் என்று நோபல் அகாடமி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புற ஊதாக்கதிர்கள், ஜதையாக அல்லாமல் தனியாக இருக்கும் மூலக்கூறுகள் மற்றும் பிற புற்றுநோய் உருவாக்க சக்திகளினால் நமது டிஎன்ஏ சேதமடைகிறது. ஆனால் இத்தகைய புறத் தாக்குதல்கள் இல்லாமலும் டிஎன்ஏ சேதமடைந்து வருகிறது. டிஎன்ஏ-யின் தன்மையிலேயே ஒரு நிலையற்ற தன்மை உள்ளது. 

செல்களின் மரபணுவில் தினசரி ஆயிரக்கணக்கான மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்து வருகின்றன. மேலும் செல்கள் பிரியும் போது டிஎன்ஏ நகலெடுப்பு செயல்பாட்டில் குறைபாடுகள் ஏற்படுவதும் வழக்கமானது. இந்த நடைமுறைகள் மனித உடலில் தினமும் பல லட்சக்கணக்கான முறை நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால், இந்தச் செயல்பாட்டில் நமது மரபணுக்கள் முழுதும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. காரணம் நம் உடலில் இயங்கும் நிறைய மூலக்கூறு அமைப்புகளின் செயல்பாடுகள் டிஎன்ஏ அமைப்பு சேதமடைவதை தானே பழுது பார்த்து சரி செய்து விடுகிறது. 

டிஎன்ஏ சேதமடைவதைத் தடுத்து, சரிசெய்யும் பல்வேறு நடைமுறைகளை மூலக்கூறு மட்டத்தில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர் இந்த 3 விஞ்ஞானிகள், இதற்காகவே அவர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1970-ம் ஆண்டுகளில் டிஎன்ஏ மிகவும் நிலைத்தன்மை வாய்ந்தது என்றே கருதி வந்துள்ளனர். ஆனால் தற்போது நோபல் வென்றுள்ள விஞ்ஞானி லிண்டால் பூமியில் உயிர்கள் மேலும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்று நம்பும் அளவுக்கு டி.என்.ஏ சேதமடைகிறது என்பதை நிரூபித்தார். இதனையடுத்தே மூலக்கூறு அமைப்புகள் எப்படி ஒருங்கிணைந்து டிஎன்ஏ சேதத்தை பழுது பார்த்து சரி செய்கிறது என்ற கண்டுபிடிப்பும் சாத்தியமாகியுள்ளது. 

இதில் துருக்கிய விஞ்ஞானி அஜிஸ் சன்காரின் பங்களிப்பு என்னவெனில் புற ஊதாக்கதிர்களினால் சேதமடையும் டி.என்.ஏ. எப்படி உள்ளார்ந்த முறையில் சரி செய்யப்படுகிறது என்பதே. உடலின் இயற்கையான இந்த பழுது பார்க்கும் தன்மை பிறப்பிலேயே இல்லாதவர்களை சரும புற்று நோய் தாக்குகிறது. அதாவது சூரிய ஒளியினால் இத்தகையோருக்கு சரும புற்றுநோய் ஏற்படுகிறது. 

இங்கிலாந்து விஞ்ஞானி பால் மோட்ரிச், செல்கள் பிரியும் போது டிஎன்ஏ தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஏற்படும் பழுதுகளை செல்கள் எப்படி சரி செய்கின்றன என்ற நடைமுறையை கண்டுபிடித்தார். 

எனவே நோய்களுக்கு, குறிப்பாக புற்றுநோய்களின் சிகிச்சையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: