டைட்டானிக் கப்பல் பிஸ்கட்

                  டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கிடைத்த பிஸ்கட் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் டைட்டானிக். மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு பிரிட்டனின் சவுத்டாம்பனில் இருந்து நியூயார்க் புறப்பட்டது. ஆனால் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறையில் மோதி முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலக வரலாற்றில் மிகப்பெரிய கப்பல் விபத்தாக இது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.அதன்பின், டைட்டானிக் கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில், அந்த கப்பலில் வழங்கப்பட்ட பிஸ்கட் நேற்று ஏலம் விடப்பட்டது. ‘ஹென்டிரி ஆல்டிரிஜ் அண்ட் சன்ஸ்’ ஏல நிறுவனம் டைட்டானிக்கில் கிடைத்த பொருட்களை கடந்த சனிக்கிழமை ஏலம் விட்டது.
                   கிரீஸ் நாட்டை சேர்ந்த அரிய பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர் 15 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.15 லட்சம்) கொடுத்து அந்த பிஸ்கட்டை ஏலம் எடுத்துள்ளார். இந்த பிஸ்கட்தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பிஸ்கட் என்று கூறப்படுகிறது.‘ஸ்பில்லர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் பைலட்’ என்ற நிறுவனத்தின் பெயருடன் அந்த பிஸ்கட் உள்ளது. டைட்டானிக் படகு மூழ்கிய போது, உயிர் காக்கும் படகுகளிலும், கடலில் குதித்தும் சிலர் தப்பினர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி பயணிகள் தத்தளித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ‘ஆர்எம்எஸ் கார்பத்தியா’ என்ற பயணிகள் கப்பல் சென்றுள்ளது.
                      அந்த கப்பலில் இருந்தவர்கள்தான், டைட்டானிக் கப்பல் பயணிகளை காப்பாற்றி உள்ளனர். அப்போது உயிர் காக்கும் படகில் இருந்த ஒரு பையை (கிட்) கார்பத்தியா கப்பல் பயணி ஜேம்ஸ் பென்விக் என்பவர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த பையில்தான் பிஸ்கட் இருந்துள்ளது. அந்த பிஸ்கட்டை ஒரு கவரில் போட்டு அதன் மீது, ‘டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் படகில் இருந்து கிடைத்த பைலட் பிஸ்கட் - ஏப்ரல் 1912’ என்று குறிப்பு எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான போது கிடைத்த புகைப்படம் ஒன்று 21000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

No comments: