மும்பையின் லோகமான்ய திலக் நகராட்சி மருத்துவமனையின் பிரேதக் கிடங்கு பணியாளர்கள், அங்கு கொண்டுவரப்பட்டிருந்த 'பிரேதம்' ஒன்று பிரேதப் பரிசோதனை நடப்பதற்கு சற்று முன் எழுந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அந்த மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு 50 வயதான, வீடற்ற ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர் ஒருவர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, உடனே அவரது 'உடலை' , மருத்துவமனை விதிகளுக்கு மாறாக உடனடியாக பிரேதக் கிடங்குக்கு அனுப்பிவிட்டனர்.
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட எந்த ஒரு நோயாளியையும், மருத்துவமனை வார்டிலேயே இரண்டு மணிநேரம் வைத்திருக்கவேண்டும் என்பது விதி. அப்போதுதான் மருத்துவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா என்று கண்டறியமுடியும்.
பிரகாஷ் என்ற இவர் பிரக்ஞையின்றி தெருவில் விழுந்து கிடந்திருக்கிறார். அவரை போலிசார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சுய நினைவின்றி காணப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.
மருத்துவமனையின் டீன், டாக்டர் சுலைமான் மெர்ச்சண்ட், திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரகாஷ் மதுவுக்கு அடிமையானவர் என்றும், சரியாக தன்னை கவனித்துக்கொள்ளாததால், அவர் முகத்திலும் காதுகளிலும் ஈ மொய்த்து, ஈக்களின் லார்வாக்கள் காணப்பட்டன என்றும் கூறினார்.
"ஈக்களின் லார்வாக்கள் மனித திசுக்களை உண்டுவிடும். பொதுவாக இறந்தவர்களின் உடல்களிலேயே இந்த ஈ லார்வாக்கள் காணப்படும். அவர் இது போன்ற நிலையில் குறைந்தது ஆறு அல்லது ஏழு நாட்களாவது இருந்திருக்கவேண்டும் ", என்றார் மெர்ச்சண்ட்.
பிரகாஷைப் பரிசோதித்த மருத்துவர், அவரது நாடித்துடிப்பு, சுவாசம் மற்றும் இதயத்தைப் பரிசோதித்தார் என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் மருத்துவமனை மரபுகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து மருத்துவமனை விசாரணை ஒன்றைத் துவக்கியிருப்பதாக டாக்டர் மெர்ச்சண்ட் கூறினார்.
இப்போது பிரகாஷின் நிலை ஸ்திரமாக இருக்கிறது. அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார். காது தொற்று மற்றும் போஷாக்கின்மைக்காக அவருக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மெர்ச்சண்ட் கூறினார்.
source.bbc
0 Comments