1,275 யுஏஇ பணக்காரர்களிடம் ரூ.15.30 லட்சம் கோடி சொத்து

ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) சேர்ந்த 1,257 மிகப் பெரும் பணக்காரர்களிடம் 25,500 கோடி டாலர் சொத்து உள்ளதாக வெல்த் எக்ஸ் அறிக்கை கூறியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 15.30 லட்சம் கோடியாகும்.

உலக பணக்காரர்களைப் பட்டியலிடும் அமைப்பான வெல்த் எக்ஸ் உலக அளவில் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட தனிநபர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடு களைச் சேர்ந்த மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 20 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பங்குச் சந்தை கடந்த ஆண்டு 20 சதவீத அளவுக்கு சரிவை கண்டிருந்தது. வெல்த் எக்ஸ் ஆய்வின்படி அதிக சொத்து மதிப்பைக் கொண்ட தனிநபர்கள் பொருளாதார சரிவில் பாதிக்கப்பட்டாலும், 2015 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளனர். முக்கியமாக உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் தொடர்ந்து மேலும் அதிக சொத்துகளை சேர்த்துள்ளனர் என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான வெல்த் எக்ஸ் இயக்குநர் டேவிட் அவைட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வின்படி 57 சதவீத ஐக்கிய அரபு அமீரக பெரும் பணக்காரர்கள் புதிய தொழில்கள் மூலம் வருமானத்தை ஈட்டியுள்ளனர். 8 சதவீதம்பேர் தங்களது பரம்பரை தொழில்கள் மூலமும், 35 சதவீதம்பேர் பகுதியளவில் பரம்பரை தொழில் மூலம் சொத்துகளை ஈட்டியுள்ளனர்.
இதில் முக்கியமாக 3 சதவீத பெரும் பணக்காரர்கள் மட்டுமே எண்ணெய், எரிவாயு மற்றும் பயன்படுத்தத்தக்க எரிபொருள் மூலம் வருமானத்தை ஈட்டியுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்த 1257 பெரும் பணக்காரர் களில் சுமார் 1000 பேர் இரண்டு நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக அபுதாபியை சேர்ந்தவர்கள் 450 பேர், துபாய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் 495 பேர்.

வெல்த் எக்ஸ் பணக்காரர்கள் பட்டியல்படி மிகப்பெரும் சொத்து மதிப்பு கொண்டவர்களின் நாடுகள் பட்டியல்படி ஐக்கிய அரபு அமீரகம் 22வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 17வது இடத்திலும், குவைத் 32வது இடத்திலும் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 995 பில்லியன் டாலர்களாகும்.

source.hindu

Post a Comment

0 Comments