புத்தரின் வாழ்க்கையும் தேடலும் போதனைகளும்

அரச போகத்தின் அத்தனை சுகங்களையும் அனுபவித்த சித்தார்த்தரின் பிறந்த இடம் லும்பினி எனும் ஊர். கி.மு 563 ஆம் ஆண்டு (2500 ஆண்டுகளுக்கு முன்). மே மாதம் பெளர்ணமி விசாக தினத்தில் பிறந்தார். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது தினத்தில் அவருடைய அன்னை மகாமாயா இறந்து போனார். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னர் சுதோதனர். இவர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். மகாமாயாவின் தமக்கை மகா பஜபதி கோதமி அன்னைக்கு அன்னையாய் இருந்து சித்தார்த்தரை வளர்த்தார். அரசாங்க சோதிடர்கள் சொன்ன ஆருடம் சுதோதனரை கலங்கச் செய்தது. தன் மகன் நோயுற்றவர், வயோதிகர், மரணமுற்றவர், முற்றும் துறந்தவர் இவர்களில் யாரேனும் ஒருவரைக் காண நேரந்தாலும் சித்தார்த்தர் துறவறம் மேற்கொள்வார் என்றபடியாகையால் சித்தார்த்தரை மிகவும் பத்திரமாக வளர்த்தார். ஒரு கணமும் அரண்மனையை விட்டு அவர் வெளியேறாத வண்ணம் பார்த்துக் கொண்டார். மிக இளம் வயதிலேயே உறவுப் பெண் யசோதராவை மணம் முடித்து வைத்துவிட்டார். அவர்களுக்கு ராகுலன் என்ற அழகிய மகன் பிறந்தான்.
துன்பம் துயர் போன்ற மானுட வாதைகள் ஏதும் அறியாத ஒரு உலகத்தில் வாழ்ந்த சித்தார்த்தர் உண்மையைத் தேடி தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து, மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஞானம் அடைந்து புத்தராகிறார். இடைப்பட்ட காலத்தில் காடு மேடுகளில் அவருடைய வலிமிகுந்த நீள் பயணத்தில் கண்டைந்த சத்தியம் அவரின் ஒளி விளக்காகியது. வீட்டை விட்டு வெளியேறிவிடுவது சுலபம் ஆனால் உண்மைக்கான தேடலில் பாதையும் புத்தனாகவே ஆகிவிடுவது மிகவும் கடினம். ஆனால் அதுவும் சாத்தியம் தான். தீவிரமான சாதனை, அமைதியான உள்ளொளிப் பயணம் இவற்றின் துணையோடு தன்னை உணர்ந்து கொள்ளலாம்.
காட்டின் சப்தங்கள் புத்தரின் அமைதியை குலைப்பதில்லை. அருவியின் பேரிரைச்சல் ஒருபோதும் அவர் மெளனத்தைக் குறைப்பதில்லை. இடி மின்னல் மழை புயல் என எந்தவொரு இயற்கை சீற்றமும் அவர் வைராக்கியத்தை மாற்றுவதில்லை. தியானத்தில் அமர்ந்த புத்தர் ஒன்றை மட்டுமே உணர்ந்தார். அது இந்த உடல் கடந்தது. அது எல்லாம் மாறும் என்ற நிலை. தனக்குள் நிகழ்பவை தான் தனக்கு வெளியேயும் நிகழ்கிறது. ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வுடன் அமைதியாக அவை கடந்து போவதை எவ்வித பற்றும் பிடிப்பும் இல்லாமல் பார்க்கத் தெரிந்தால் அதுவே ஞானத்தின் உயர் நிலை என்ற பேருண்மையை போதி மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி அறிந்தார். தான் அறிந்தவற்றை ஒவ்வொருக்கும் எடுத்துக் கூறினார். புத்தர்.
புத்தரைப் பார்க்க ஒரு இளைஞன் வந்தான். கருணைக் கடலான புத்தரைக் கண்ட நொடிமுதல் அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. அவனுடைய துயரம் தோய்ந்த முகத்தைப் பார்த்த புத்தர் அவன் அமைதியாகும் வரைக் காத்திருந்தார். அவன் அழுகையை நிறுத்தியதும் புத்தர், ‘ சகோதரா நீ எங்கிருந்து வருகிறாய்? ஏன் இப்படி கலக்கமாக இருக்கிறாய்? என்று கனிவுடன் கேட்டார்.
அதற்கு அவன் தயக்கத்துடன், ‘பகவானே, ஒன்றா இரண்டா என்னுடைய துன்பங்களை நான் கூற ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்று சொல்ல, புத்தர் மாறாத புன்சிரிப்புடன், ‘ பகிர்ந்து கொண்டாலே உன்னுடைய பாரம் பாதியாகக் குறைந்துவிடும். தயங்காமல் சொல்’ என்றார்.
’நான் பார்த்துக் கொண்டிருந்த தொழில் நொடித்துப் போய்விட்டது. கடந்த வருடம் இயற்கை சீற்றத்தில் சிக்கி சிரமத்துடன் நான் கட்டிய வீடு இடிந்து போய் விட்டது, குடிலில் இருந்த மனைவி மக்கள் பெற்றோர் யாவரும் இறந்துவிட்டனர் புத்த பிரானே. வாழ வழியில்லாது வேலையும் இல்லாது ஆறுதல் கூற உற்றவர் இல்லாது மிகவும் மனம் உடைந்து போய் விட்டேன். இனி எனக்கென்று என்ன உள்ளது? எதற்கு வாழ வேண்டும்?’ என்று கண்ணீர் பொங்க கூறினான்.
புத்தர் அன்புடன் அவன் தலையை வருடிக் கொடுத்தார். ‘நீ எங்கிருந்து வருகிறாய் அப்பா’ என்று கேட்க, வெகு தூரத்திலிருந்து வருவதாக அவன் சொன்னான்.
‘நீ மிகவும் களைத்துக் காணப்படுகிறாய். முதலில் தண்ணீர் பருகு’ என்று சொல்லியபடி புத்தர் குடிலினுள் சென்று ஒரு சிறிய குவளையில் நீரும் கொஞ்சம் உப்பும் கொண்டு வந்தார். அவனிடம் தந்து, ’இந்த உப்பை தண்ணீரில் கரைத்துவிட்டு அதைப் பருகு’ என்றார். புத்தர் சொன்னபடி செய்தவன் ஒரு வாய் தண்ணீரைக் குடித்ததும் முகம் கோணி அதற்கு மேல் குடிக்க இயலாமல், அந்த தண்ணீர் குவளையை கீழே வைத்துவிட்டான்.
’தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் மகா ஞானியே, என்னால் இந்த நீரை இதற்கு மேல் பருக முடியவில்லை, மிகவும் கரிக்கிறது’ என்றான்.
புத்தர் அவனிடம், ‘பரவாயில்லை சகோதாரா இந்தா இது அதே அளவு உப்பு” என்று மீண்டும் குடிலிருந்து எடுத்து வந்த உப்பை அவனிடம் தந்தார். அவன் வியப்புடன் புத்தரைப் பார்க்க, அவர் அதே அமைதியுடன், ‘ அதோ எதிரில் இருக்கும் குளத்திற்குச் சென்று இந்த உப்பைக் கரைத்து, நீரைப் பருகி விட்டு வா’ என்று சொல்லவே அவனும் குளத்தில் உப்பைக் கரைத்து அதன் பின் நீரை கையில் முகந்து குடித்தான்.
புத்தர் அவன் அருகில் வந்தவுடன் இப்போது அந்த நீரைக் குடிக்க முடிந்ததா என்று வினவ, ஆம் நன்றாகப் பருகிறேன். தாகம் தீர்ந்து களைப்பும் நீங்கியது பெருமானே’ என்றான் திருப்தியுடன்.
புத்தர் புன்னகைத்தார். ‘சகோதரா, வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், துயரங்கள் எல்லாம் உப்பைப் போன்றவை தான். நம் மனம் இருக்கிறதே அது தண்ணீரைப் போன்றது’ என்றார்.
இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவரே தொடர்ந்து, ‘நீ முதலில் சிறிய குவளையிலும் பின்பு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். குவளை சிறியதாகையால் அதிகம் கரித்தது. உன்னால் அந்த நீரைப் பருக முடியவில்லை. ஆனால் அதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்படிருந்தும் அந்த நீரை தாகம் தீர நீ பருகினாய். உனக்கு அது கரிக்கவில்லை. உப்பின் சுவை சிறிதும் கூட உனக்குத் தெரியவில்லை. உண்மை தானே? என்றான்.
உண்மை தான் பகவானே. ஆனால் இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இந்த மூடனுக்கு விளங்கவில்லை பகவானே. தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள் என்று புத்தர் பாதம் பணிந்தான்.
‘சிறிய குவளையில் இருந்த நீரைவிட எண்ணற்ற மடங்கு அதிக நீர் குளத்தில் இருந்தது. சகோதரா, நம் வாழ்வில் இன்ப துன்பங்கள் என்பவை உப்பைப் போன்றது. இவை வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். இவற்றை தவிர்க்கவே முடியாது. ஆனால் நம் மனத்தை விசாலமாக்கிக் கொள்ள முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப் போலத்தான் இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கையின் சிரமங்கள் உனக்கு இந்த அளவுக்கு துயரத்தை தருகின்றன. நீ நிறைந்த அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனத்தை விசாலமாக்கு. அதை நன்றாக வலுப்படுத்து. அதன் பின் உன் துயரங்கள் யாவுமே குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலாகிவிடும். அவரை கரைந்து காணாமாலாகிவிடும். அந்தத் தெளிந்த நிலையில் தான் புதிய வழிகள் உன் கண்களுக்குப் புலப்படும்.அவ்வழிகளைப் பின்பற்றி நீ உயர்வடைவாய்’ என்றார் புத்தர்.
மனம் தெளிவடைந்த இளைஞன் புத்தரின் பாதம் வணங்கி விடைபெற்று மகிழ்வுடன் சென்றான்.
வாழ்வின் நிலையாமையை மட்டும் புத்தர் போதிப்பதில்லை வாழும் நாட்களில் எப்படி மனத்தை கையாள்வது என்பதையும் மானிடருக்கு உணர்த்தினார்.
ஒரு முறை அசோக மன்னர்  புத்த பிரானின் காலில் விழுந்து வணங்கியதைக் கண்டு அவர் அமைச்சர் ஆத்திரப்பட்டார்.  "நாட்டையே ஆளும் பேரரசர் கேவலம் ஒரு பரதேசியின் காலில் விழுவதா..? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது..?' என்று ஆத்திரத்துடன் அசோகரிடம் தமது கோபத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோகர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல்,  வினோதமான ஒரு கட்டளையைப் பிறப்பித்தார்.

‘ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே''என்றார் அசோகர். மன்னரின் கட்டளை ஆயிற்றே அடுத்த சில மணி நேரத்தில் அவற்றைக் எடுத்துக் கொண்டு வந்தனர்.
 
மூன்றையும் பார்த்த மன்னர் அமைச்சரிடம், ‘பலே, இப்போது இந்த மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்.'’ என்றார். அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனடியாக விற்பனை ஆகிவிட்டது என்றும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார். ‘அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை என்றார் அமைச்சர்.

இப்போது அசோகர்... ’ அமைச்சரே..! இப்போதாவது உமக்குப் புரிந்ததா? மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்.. இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்னவெல்லாம் பேசுகிறது. எப்படி எல்லாம் ஆட்டம் ஆடுகிறது.! இறந்த பின்னர்  நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்றுஉணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி..!'' என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்.
புத்தரின் வாழ்க்கையும் தேடலும் போதனைகளும் ஞானத்தின் நுழைவாயில்கள்.

No comments: