ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் ஏர்டெல் நிறுவனத் தலைவர்


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல். மொபைல் போன்களில் இணையப் பயன்பாட்டை இந்தியா உட்பட உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்ல மார்க் விரும்புகிறார். ஆனால், அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், இந்தியச் சந்தையில், தங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதுதான் சுனில் மிட்டலின் கோபத்துக்குக் காரணம்.


‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ (internet.org) என்னும் அமைப்பை 2013 ஆகஸ்ட் 20-ல் தொடங்கினார் மார்க் ஸக்கர்பெர்க். அதன்படி உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனங்களுடன் இணைந்து, மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு இலவச இணையச் சேவையை அளிப்பது அவரது திட்டம். இலவசம் என்றால், குறிப்பிட்ட அலைபேசி சேவையைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள், ஃபேஸ்புக் உட்பட குறிப்பிட்ட சில இணையதளங்களைக் கட்டணமில்லாமல் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருந்த மார்க் ஸக்கர்பெர்க், இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு இணையத்தைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். உலகம் முழுவதும் 500 கோடிப் பேருக்கு இணையத்தைக் கொண்டுசெல்வது அவரது இலக்கு. கடந்த அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் புது டெல்லியில் நடந்த ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ மாநாட்டில் பேசிய மார்க், ஆங்கிலம் தவிர, பிற மொழிகள் பேசும் மக்களும் இணையத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று குறிப்பிட்டார்.
100 கோடி லட்சியம்!
ஜாம்பியா, தான்சானியா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டே ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ பயன் பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
மார்க் ஸக்கர்பெர்கின் கணக்குப்படி இந்தியாவில், தற்போது 24.3 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 கோடிப் பேர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள். அதேசமயம், இணையம் பயன்படுத்தாத மீதி 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இணையத்தைக் கொண்டுசேர்ப்பது தனது லட்சியம் என்கிறார் மார்க். மாபெரும் சந்தையான இந்தியாவில், இந்தத் திட்டம் வெற்றிபெறுவது முக்கியம் என்று அவர் கருதுகிறார். “உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்கு முதலில் நாம் இந்தியாவுடன் தொடர்புகொள்வது அவசியம்” என்று ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’யின் ஃபேஸ்புக் தளம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், பிப்ரவரி 10-ம் தேதி, இந்தியாவில் ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முதல் கட்டமாக, தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் ரிலையன்ஸ் செல்பேசிச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். ‘ஆஜ் தக்’, ‘பிபிசி நியூஸ்’, ‘இந்தியா டுடே’, ‘விக்கிப்பீடியா’உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இதன் மூலம் இலவசமாகப் பயன்படுத்த முடியும். ஆனால், செல்பேசிச் சேவைகளில் ஏகத்துக்கும் முதலீடு செய்யும் செல்பேசி நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.
எதிர்ப்புக் குரல்கள்
“இணையத்தை இலவசமாக வழங்க முடிவுசெய்துவிட்டால், முழுமையாக தானதர்மம்தான் செய்ய வேண்டும். இதன் தொடர்ச்சியாக, அலைக்கற்றையை அரசு இலவசமாகத் தந்துவிடலாம். ஆனால், இதெல்லாம் நடக்கின்றனவா? ஏற்கெனவே தகவல்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றும் பெரிதாகச் சம்பாதித்துவிடவில்லை. இந்த நிலையில், இணையத்தை இலவசமாகத் தருவது என்ன நியாயம்?” என்று கொந்தளிக்கிறார் சுனில் மிட்டல். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் சென்ற வாரம் நடந்த ‘மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்’ மாநாட்டில் கலந்துகொண்ட மிட்டல், தனது ஆட்சேபத்தை மார்க்கிடமே தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 62,162 கோடி அரசுக்கு வருவாயாகக் கிடைத்தது. இந்த ஆண்டு தொடங்கிய அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 82,000 கோடி இலக்காக வைக்கப்பட்டிருந்தாலும், நான்கே நாட்களில் ரூ.86,000 கோடி ஏலம் மூலம் கிடைத்தது. 7-வது நாளில் ஏலத்தொகை ரூ. 96,000 கோடியை எட்டியிருக்கிறது. இதன் பின்னணியில் பார்த்தால், செல்பேசிச் சேவை நிறுவனங்கள் எந்த அளவுக்கு முதலீடு செய்கின்றன என்பதை மதிப்பிட முடியும் என்பது சுனில் மிட்டல் தரப்பின் வாதம்.

வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விட்டோரியோ கோலாவின் கருத்தும் இதேதான். “இணையத்தை இலவசமாகத் தருவதாகக் கூறிக்கொண்டு தானதர்மத்தைச் செய்கிறார் மார்க். ஆனால், அதை என் காசில் அல்லவா செய்கிறார்” என்கிறார் அவர்.
“மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதுதான் எங்கள் நோக்கம். தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்பதுடன், மருத்துவம், கல்வி தொடர்பான விஷயங்களைப் பெறுவதும் இதன்மூலம் சாத்தியமாகும். இணையப் பயன்பாடே இல்லாத மக்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்யும் திட்டம் இது” என்கிறார் மார்க்.

இந்தியாவில் இந்தத் திட்டத்தை எதிர்த்தாலும், கானாவில் இந்தத் திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர் சாட்சாத் ஏர்டெல் நிறுவனம் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். மக்கள் தொகை, சந்தை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டால் கானாவை விட இந்தியா எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. மிட்டலின் எதிர்ப்பின் பின்னணி இதுதான் என்று கருதப்படுகிறது.
எப்படிப்பட்ட சேவை!
“உண்மையில், மார்க் கொண்டுவந்திருக்கும் இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது. இதற்கு முன்னர் இணையத்தைப் பயன்படுத்தியிராத ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரும் பயனை அடைந்திருக்கிறார்கள்” என்கிறார் நவீனத் தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம்குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சைபர் சிம்மன்.
“பெரும்பாலான வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் சந்தையை விரிவுபடுத்த, வெறும் வணிக நோக்குடன் செயல்படுவதில்லை. அந்தந்த நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான திட்டங்களுடன்தான் தங்கள் வணிகத் திட்டங்களையும் அவை கொண்டுசெல்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை” என்கிறார் சைபர் சிம்மன்.
அந்த வகையில், ‘தானதர்மம்’ செய்வதாக மார்க் ஸக்கர்பெர்கை விமர்சிக்கும் சுனில் மிட்டல் மனதில் இருக்கும் ‘வணிகக் கோபம்’புரிந்துகொள்ளக் கூடியதுதான்! அதேசமயம், குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் (மிக முக்கியமாக ஃபேஸ்புக்!) இலவசமாக வழங்கும் மார்க் ஸக்கர்பெர்கின் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் வணிக நோக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது, அவர்கள் கொடுக்க விரும்பும் இணையதளங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும். பயனாளிகளின் இணைய சுதந்திரம் இதனால் முற்றிலும் பறிபோய்விடும் அபாயமும் இருக்கிறது. இலவசமாகக் கொடுக்கப்படுவதுதானே என்று கேள்வி எழுப்பலாம். இலவசம்தானே நவீன யுகத்தின் மாபெரும் வியாபாரத் தந்திரம் என்பது நமக்குத் தெரியாதா, என்ன?

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கும் இளம் தொழிலதிபரான மார்க், சேவை என்ற போர்வையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறார் என்ற விமர்சனத்தை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது!

courtesy:hindu
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan@thehindutamil.co.in 

Post a Comment

0 Comments