கை கழுவுவது எப்படி?

                   
 ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகள் எத்தனை அவசியமோ, அந்த அளவுக்கு அவர் சுகாதாரமாக இருப்பதும் அவசியம். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் ஆகியவற்றுடன் 80 சதவிகித தொற்று நோய்கள் ஏற்படுவதற்கும் கைகளின் சுத்தமின்மையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடல் உறுப்புகளில் அதிகம் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ள இடமும் கைகள்தான். ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ் என்ற கிருமிகள்தான் இப்படி கைகளில் தங்கி பல நோய்களை ஏற்படுத்துகிறதாம்.

மேலை நாடுகளில் கரண்டிகள் மூலம் உணவு உட்கொள்வதால், கைகளின் மூலம் பரவும் நோய்கள் அங்கு குறைவு. தனிமனித சுகாதாரம் மிகவும் அதலபாதாளத்தில் இருக்கும் நம் நாட்டிலோ, கைகளின் மூலமே உணவு உண்கிறோம். உணவு தயாரிப்பிலும் நேரடியாகக் கைகளைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நகத்தை முறையாக வெட்டி, நகக்கண்களை சுத்தமாகப் பராமரிப்பவர்களும் குறைவுதான். அதனால் கைகளின் சுத்தம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அக்டோபர் 15ம் தேதியை ‘சர்வதேச கை கழுவும் தின’மாகக் கொண்டாடி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

எப்போதெல்லாம் கைகளை சுத்தமாகக் கழுவுவது மிகவும் அவசியம்?

கழிவறை சென்று வந்த பிறகு...
குழந்தைகளை சுத்தம் செய்த பிறகு...
உணவு உண்ணும் முன் அல்லது குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்...
உணவு சமைக்கும் முன்...
செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு...
குழந்தைகள் கைகளை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வார்கள். அதனால் விளையாடிய பிறகு... 
குழந்தைக்கு உடை மாற்றிய பின்...
நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் முன்... 
மருத்துவமனையில் நோயாளியைப் பார்த்து விட்டுத் திரும்பிய பிறகு...

சாப்பிடப் போகும் முன் தண்ணீரில் கையை நனைத்துவிட்டுச் செல்வதற்கு ‘கை கழுவுவது’ என்று பெயர் இல்லை. கைகளை கழுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் முறை இதுதான்...

கால அளவு: 40 முதல் 60 வினாடிகள் 2வது கட்டத்திலிருந்து 7வது கட்டம் வரை முக்கியமான கட்டம். 15 முதல் 20 வினாடிகள் இதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

1. கைகளை ஈரமாக்கிக் கொள்ளுங்கள்.
2. தேவைப்படுகிற சோப் அல்லது கிருமிநாசினியை கைகளின் மேற்பரப்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள்.
3. உள்ளங்கைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துத் தேய்க்கவும்.
4. வலது கையின் பின்புறத்தின் மேல் இடது உள்ளங்கையை வைத்து விரல்களோடு கோர்த்தபடி, விரல்களின் இடுக்குகளில் தேய்க்க வேண்டும். இதே முறையில் இடது உள்ளங்கையின் பின்புறத்தின் மேல் வலது கையை வைத்து விரல்களின் இடுக்குகளில் தேய்க்க வேண்டும்.
5. உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்தபடி தேய்க்க வேண்டும்.
6. இடது கை விரல்களை மடித்து, வலது உள்ளங்கை மீது தேய்க்க வேண்டும். இதேபோல, வலது கை விரல்களை மடித்து இடது உள்ளங்கை மீது வைத்துத் தேய்க்க வேண்டும்.
7. இடது கையின் கட்டை விரலை வலது கையால் மூடி தேய்க்க வேண்டும். இதே போல் வலது கையின் கட்டை விரலை இடது கையால் மூடி தேய்க்க வேண்டும்.
8. இடது உள்ளங்கை மீது வலது கை விரல்களால் காம்பஸில் வட்டம் போடுவது போல தேய்க்க வேண்டும். இதே முறையில் வலது உள்ளங்கை மீது இடது கை விரல்களால் வட்டம் போடுவதுபோல தேய்க்க வேண்டும்.
9. இப்போது கைகளை நன்றாக தண்ணீரால் கழுவுங்கள்.
10. சுத்தமான துண்டால் கைகளை துடைத்துக் கொள்ளுங்கள்.
11. கஷ்டப்பட்டுக் கழுவிய கையால் பைப்பை மூடாதீர்கள். துண்டைப் பயன்படுத்திக் குழாயை மூடுங்கள்.
12. இப்போதுதான் உங்கள் கைகள் பாதுகாப்பானவை!


         செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்திய கைகளை கழுவாமல் சாப்பிடக் கூடாது.  வெறும் தண்ணீரால் கைகளை கழுவுவதில் பயன் இல்லை. கிருமிநாசினி அவசியம். வெளியிடங்களில் கழிவறைகளுக்கு அருகில் இருக்கும் முதல் குழாயையே பலரும் பயன்படுத்துவார்கள். அதனால், அடுத்த குழாயைப் பயன்படுத்துங்கள். 

கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது என்பதற்காகவே, கை காட்டியவுடன் நீர் வரும் குழாயை ஹோட்டல்கள் போன்ற இடங்களில் வைத்திருக்கிறார்கள்.  நாம் ஆரோக்கியக் குறைவோடு இருப்பது நாம் அதிகம் நேசிக்கும் நம்மைச் சுற்றியுள்ள வர்களுக்கும் சிரமத்தைத் தரும் என்பதை மறக்க வேண்டாம். குழந்தைகளுக்கு வரும் உடல்நலக்குறைவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கும் கைகளின் சுகாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

courtesy.dinakaran

No comments: