நோட்டு வாங்காமல் ஓட்டு போடுங்கள் : பிரவீன்குமார் வேண்டுகோள்

வரும் லோக்சபா தேர்தலில் நோட்டு வாங்காமல் ஓட்டு போடுங்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் :

தமிழகத்தில் ஒரு கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது; அன்றைய தினமே ஆலந்தூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது; தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 18,58,504 வாக்காளர்கள் உள்ளனர்; குறைந்த பட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 11,88,738 வாக்காளர்கள் உள்ளனர்; ஆலந்தூர் தொகுதியில் 2,97, 631 வாக்காளர்கள் உள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் மார்ச் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம்; இதற்காக மார்ச் 9ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; வாக்காளர்கள், தங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதாக என சரிபார்த்துக் கொள்ளலாம்; பட்டியலில் பெயர் இல்லை என்றால் அவர்களிடம் கூறி சேர்த்துக் கொள்ளலாம்; பெயர் நீக்கம் செய்யப்பட மாட்டாது; தமிழகத்தில் 60,000 க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இந்த முறை கூடுதலாக 8000 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது; பறக்கும் படைகளும், கண்காணிப்பு படைகளின் எண்ணிக்கையும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது; சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும்.

நோட்டு இல்லாத ஓட்டு :

தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் யாரும் அதிகாரிகளை நியமிக்கவோ, இடமாற்றம் செய்யவோ, அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வோ கூடாது; அவ்வாறு நடைபெறுவது தெரிந்தால் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்; மக்கள் தங்களின் புகார்களை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தொடர்பு கொண்டு, புகார் எண்ணை பெற்று தங்களின் புகார்களை எஸ்.எம்.எஸ்.,ஆக அனுப்பலாம். யாரும் உரிய ஆவணங்கள் இன்றி அதிக பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்; ஓட்டுக்காக பணம் வாங்கினாலும் குற்றம்; பணம் கொடுத்தாலும் குற்றம்; நோட்டு இன்றி ஓட்டு போடுங்கள்; வேட்பாளர்கள் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு பிரவீன்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments: