எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்


 பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, எந்த சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார் என்று அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.
டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். 'The Underachiever - India needs a reboot' என்ற தலைப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் விமர்சித்துள்ளனர். மன்மோகன் சிங் சாதிக்கத் தவறி விட்டதாகவும் அதில் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலை செயல்படுத்தியவர் மன்மோகன். ஆனால் தற்போது அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திருப்ப உதவும் சீர்திருத்தங்களை செய்யத் தயங்குவதாக டைம் கூறியுள்ளது.
இந்தியப் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பொருத்தமானவர்தானா என்றும் டைம் கேட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலை, பெருமளவில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, வீ்ழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெருகி வரும் ஊழல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார் மன்மோகன் சிங்.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெரும் பெரும் ஊழல்களையெல்லாம் மறைக்கும் செயலிலேயே அக்கறை காட்டுகிறது. மாறாக பொருளாதாரத்தை நிமிர்த்தி நேராக்குவதில் அவர்கள் அக்கறை செலுத்தாமல் உள்ளனர் என்று கூறியுள்ளது.
உள்ளூர் முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியாவில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாக்காளர்களும் இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். பணவீக்கம் ஒருபக்கம் எகிறிக் கொண்டே போகிறது. தொடர்ந்து எழுந்து வரும் ஊழல் புகார்களால் அரசு நம்பகத்தன்மை இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய புகழுடன் இருந்து வந்த மன்மோகன் சிங் தற்போது அந்த புகழேணியிலிருந்து விழுந்து விட்டார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெருத்த அமைதி காத்து வருகிறது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்த தவறி வருகிறார்.
அவரது அமைச்சர்களையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. பல்வேறு முக்கியச் சட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அனைத்தும் நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

Post a Comment

1 Comments