""இந்தியாவில் படித்து, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் இன்ஜினியர்கள், அங்கு "டெக்னிக்கல்' கூலிகளாக உள்ளனர்,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
உலகப் புத்தக திருநாளை முன்னிட்டு, விஜயா பதிப்பகம் சார்பில் கோவையில் புத்தகக் கண்காட்சி நடந்தது. மேயர் வேலுசாமி, கண்காட்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மற்றும் தமிழக திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி கூறியதாவது:
குறைவு: தமிழில், மிகச் சிறந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தான் குறைவு. குறிப்பாக, மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களை படிப்பதில்லை. அதிகம் மதிப்பெண் பெற வேண்டி, பாடங்களை மனப்பாடம் செய்கின்றனர்; விஷயத்தை புரிந்து படிப்பதில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று, இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பலர், முதலாமாண்டு செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதற்கு பாடத்தை, புரிந்து படிக்காதது தான் காரணம். மனப்பாடக் கல்வி, அறிவை வளர்க்காது. இலக்கியம், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை படித்தால் தான், அறிவு விரிவடையும்.
கூலிகள்: இந்தியாவில் படித்து, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் இன்ஜினியர்கள், அங்கு "டெக்னிக்கல்' கூலிகளாகத் தான் வேலை பார்க்கின்றனர். இன்ஜினியரிங் படித்தவர்கள், அங்கு இன்ஜினியர்களாக இல்லை; அங்குள்ள ஐ,டி., கம்பெனிகளில், கம்ப்யூட்டர் புரோகிராமர்களாக உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், 20 சதவீதம் பேர் தான் வேலைக்குச் செல்கின்றனர்; 80 சதவீதம் பேர் சும்மாவாக உள்ளனர். நாம் டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர் என்று பட்டம் பெற்றால் மட்டும் போதாது; நல்ல மனிதர்களாக, நல்ல குடிமகனாக இருப்பது முக்கியம். இந்த சிந்தனை வளர வேண்டும் என்றால், சிறந்த புத்தகங்களையும், சாதனையாளர்களின் வரலாறுகளையும், உன்னதமான இலக்கியங்களையும் படிக்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.
0 Comments