அண்ணா தொழில்நுட்ப பல்கலை இணைப்பு சிக்கலால் மாணவர்கள் குழப்பம்


அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளை இணைப்பது தொடர்பாக தெளிவான முடிவுகள் எடுக்கப்படாததால், 6 லட்சம் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், இக்கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 2007 பிப்ரவரியில் திருச்சி, கோவையிலும், செப்., மாதத்தில் நெல்லையிலும், 2010ல் சென்னை, மதுரை என 5 இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் துவங்கப்பட்டன. இப்பல்கலைக்கு உட்பட்டு, தற்போதுள்ள 550 தொழில்நுட்ப கல்லூரிகளில், 6 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
புதிய ஆட்சி வந்தபின், இப்பல்கலைகள் ஒன்றாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பான தெளிவான முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. பல &'செமஸ்டர்கள்&' முடித்துள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகாலம் ஜூனில் முடிவடைகிறது. அதற்குபின், தொழில்நுட்ப பல்கலைகள் ஒன்றாக இணைக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படும்போது மதிப்பெண் சான்றுகள் மதுரை, திருச்சி, நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் இருந்தும், இணைப்புக்கு பின் சென்னை அண்ணா பல்கலையில் இருந்தும் டிகிரி சான்றுகள் வழங்க வாய்ப்புள்ளது.
அதாவது, மதிப்பெண் சான்று ஒரு பெயரிலும் (அண்ணா தொழில்நுட்ப கிளை பல்கலைகள்), டிகிரி சான்று வேறொரு பெயரிலும் (சென்னை அண்ணா பல்கலை) வழங்கப்படும். இரு பெயர்கள் கொண்ட சான்றிதழ்களுடன், உயர் கல்விக்காக வெளிநாட்டில் சென்று படிக்க செல்லும் மாணவர்களை, அங்குள்ள பல்கலைகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கிளை பல்கலைகள் ரத்து செய்யப்படும் நிலையில், இங்கு படித்து வெளிநாடு அல்லது பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும்போது உண்மை தன்மை சான்று பெறுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
முதல் பருவ தேர்வு
பி.இ., எம்.இ., படிப்புக்கான முதல் பருவ தேர்வை கடந்த ஜனவரியில் அனைத்து கிளைகளுக்கும் சேர்த்து சென்னை அண்ணா பல்கலையே நடத்தியது. ஒவ்வொரு பல்கலை கிளைக்கும் துணைவேந்தர் அந்தஸ்தில் ஒருவர் இருக்கும்போது, உரிய அறிவிப்பின்றி கிளை பல்கலைகளை ஒன்றாக இணைக்காமல், அனைத்து கிளைக்கும் சேர்த்து சென்னை அண்ணா பல்கலை பருவமுறை தேர்வை நடத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பங்களால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments