போலீஸார் சுட்டதில் ரெüடி ஒருவர் உயிரிழந்தார்

மதுரை , மார்ச் 12: திண்டுக்கல்லில் திங்கள்கிழமை இரவு போலீஸாருக்கும் ரெளடிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸார் சுட்டதில் ரெüடி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.


 இதுகுறித்த விவரம்:


 ராமநாதபுரம் மாவட்டம் போகலூரைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்ம கும்பல் கடந்த மாதம் கடத்திச் சென்று ரூ. 2 கோடி கேட்டு சுமார் 8 மணி நேரம் துன்புறுத்தினராம்.


 ரூ. 2 கோடி பணம் தன்னிடம் இல்லை என அவர் கூறியதைத் தொடர்ந்து, கையில் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு அவரை மதுரை விமான நிலையம் அருகே வீசிவிட்டு, சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டனராம். இதுகுறித்து மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 12 ஆம் தேதி அவர் புகார் செய்தார்.


 இதனைத் தொடர்ந்து மதுரை திருநகர் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 25 பேர் கொண்ட 3 தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. ஜே.கே. ரித்தீஷிடமும் காவல் கண்காணிப்பாளர் நேரடி விசாரணை நடத்தினார்.


 இதையடுத்து, தனிப்படையினர் தொடர்ந்து விசாரித்தபோது, தி.மு.க. பிரமுகர் கடத்தலில் வரிச்சியூர் செல்வம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.


 இதற்கிடையே, வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த தனிப் படையினர் அந்த தங்கும் விடுதியின் அறை எண் 101, 111 ஆகியவற்றின் கதவுகளைத் தட்டியுள்ளனர். அப்போது அந்த கும்பல் போலீஸாரை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சித்தனராம். அதில் ஒருவர், தனிப்படை ஆய்வாளர் ஜெயச்சந்திரனின் கழுத்தை இறுக்கி தாக்குதலில் ஈடுபட்டபோது, தற்காப்புக்காக அவரது இடது கை தோள்பட்டைக்கு கீழே போலீஸôர் சுட்டனராம். இதில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
 மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இறந்தவர் குறித்து விசாரிக்கையில், அவர் கேரளத்தைச் சேர்ந்த சினோஜி (30) எனத் தெரியவந்தது. இவரைப் பற்றிய முழு விவரம் உடனடியாகத் தெரியவில்லை.


 இந்தப் போராட்டத்தின்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிஜூ என்பவர் தப்பியோடிவிட்டார். பின்னர், வரிச்சியூர் செல்வம், அஜீத் மற்றும் வர்கீஸ் ஆகிய 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 நவீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிபட்ட மூவரையும் தனிப்படை போலீஸார் மதுரைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
 பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு சுமார் 7.20 மணி அளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்துபோனது, திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

1 Comments

இந்த போலிஸ் அராஜகத்திற்கு ஒரு முடிவே இல்லையா...?