புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை இந்தியாவிற்கு


புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்து ஒன்றை இந்தியாவிலேயே தயாரித்து குறைந்த விலையில் விற்பதற்கான அனுமதியை இந்திய அரசு செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது.
நெக்ஸாவர் என்கிற புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் நிறுவனத்திடம் இருக்கிறது. இனிமேல் அந்த மருந்தின் பொதுமையான வடிவத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு இந்தியாவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேசமயம், இந்த மருந்தின் விற்பனையில் வரும் லாபத்தொகையின் ஆறு சதவீத தொகையை, இந்த மருந்துக்கான சர்வதேச காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமைத்தொகையாக இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த குறிப்பிட்ட மருந்தின் 120 மாத்திரைகளை இந்தியாவில் வாங்கவேண்டுமானால் சுமார் இரண்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும்போது இதே அளவு மாத்திரைகள் வெறும் ஒன்பதாயிரத்துக்கும் குறைவாக கிடைக்கும்.
இந்த பெருமளவிலான விலைக்குறைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று ஒரு பகுதி மருத்துவர்களும் சுகாதார செயற்பாட்டாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றமளிப்பதாக இந்த மருந்துக்கான காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காப்புரிமை பிரச்சினைகள்
காப்புரிமை பிரிச்சினைகள் இல்லாத பொதுமை மருந்துகளை தயாரித்து குறைவான விலைக்கு விற்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. ஆனால் காப்புரிமைக்குட்பட்ட மருந்தை தயாரிக்கும் உரிமையை, இந்திய அரசு இந்திய மருத்துவ நிறுவனத்திற்கு அளிப்பது இதுவே முதல்முறை. இந்திய அரசின் புதிய காப்புரிமை சட்டத்தின் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு தேவைப்படும் அளவுக்கோ, அல்லது கட்டுப்படியாகும் விலையிலோ இந்த மருந்தை அளிப்பதில் பேயர் நிறுவனம் தவறிவிட்டதாக இந்திய காப்புரிமை அலுவலகம் தனது அனுமதி உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

இந்திய அரசின் இந்த முடிவை பொதுசுகாதாரத்திற்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்றிருக்கிறார்கள். இந்த மருந்தைபோல உயிர்காக்கும் மற்ற மருந்துகளையும் குறைவான விலையில் கிடைக்கச்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் பேயர் நிறுவனம் இந்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துவருவதாக தெரிவித்திருக்கும் நிலையில் இந்த முடிவு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.
எயிட்ஸ் மருந்துகள் உள்ளிட்ட பலவிதமான பொதுமை மருந்துகளை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியா, மருந்து காப்புரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சர்வதேச மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன
இந்த பின்னணியில், இந்திய அரசின் இன்றைய முடிவு புற்று நோயாளிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் சங்கர் ஸ்ரீனிவாசன். அதேசமயம், சர்வதேச அளவில் இது பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.


No comments: