சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை


 முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீட்டு மனையை முறைகேடாகப் பெற்றதாக இந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் வினோதன், கணேசன் ஆகியோர் உள்ளனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான முகப்பேர் கோட்டத்தில் உள்ள காலி வீட்டு மனையை பெற இந்த அதிகாரிகள் 3 பேரும் கடந்த 6-3- 2008-ல் விண்ணப்பம் செய்தனர். அரசின் விருப்புரிமையின் கீழ் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் 10-3- 2008-ல் அரசாணை மூலம் இவர்களுக்கு தலா 2 கிரவுண்டு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த வீட்டு மனையை அவர்கள் முறைகேடாக பெற்றதாகப் புகார் எழுந்தது.
வீட்டு வசதி வாரியத்தில் உள்ள வீடுகள் சிலவற்றை அரசு விருப்புரிமையின் கீழ் விதவைகள், சமூக சேவகர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கீடு செய்யலாம். அந்த வகையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை சமூக சேவர்களாக அடையாளம் காட்டி வீட்டு வசதி வாரிய மனையை வாங்கியதாக இந்த மூன்று காவல்துறை அதிகாரிகளின் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த வீட்டுமனைக்கான முறையான உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே அந்த மனைகளை தனியாருக்கு விற்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த அதிகாரிகள் தலா ரூ. 19 லட்சம் பணப் பயனை அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
வீடுகளில் சோதனை: இந்தப் புகார்களின் பேரில் ஏமாற்றுவது, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துதல், கூட்டுச் சதி செய்தல் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அந்த 3 அதிகாரிகளின் வீடுகளிலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை செய்தனர்.
டி.எஸ்.பி. வீட்டில் பூட்டு: மயிலாப்பூர் கச்சேரி சாலை காவல் துணை கண்காணிப்பாளர் குடியிருப்பில் உள்ள டி.எஸ்.பி. பாண்டியனின் வீட்டுக்கு காலை 7 மணிக்கு கூடுதல் எஸ்.பி. சுப்பையாவின் தலைமையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சென்றனர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீஸார் அங்கு சிறிது நேரம் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வீட்டு உரிமையாளர்கள் யாரும் வராததால் போலீஸார் அங்கிருந்து திரும்பியதாக அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர் வீட்டில் சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கே.கே. நகர் ஏ.பி. பேட்ரோ சாலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வீடு உள்ளது. இதைத் தவிர நெசப்பாக்கத்திலும் அவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. இந்த இடங்களில் எஸ்.பி. துரைக்குமார் தலைமையில் போலீஸார் சோதனை செய்தனர்.
அதே போல கே.கே. நகர் 9-வது செக்டார் 49-வது தெருவில் உள்ள இன்ஸ்பெக்டர் வினோதனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
6 இடங்களில்...
சென்னை, மார்ச் 2: சென்னையில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகள் உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனையை முறைகேடாகப் பெற்றதாக திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளான டி.எஸ்.பி. பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், வினோதன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த அதிகாரிகளால் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனையை வாங்கியதாக பத்மா,கௌரி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
சோதனை நடைபெற்ற இடங்கள்:
1. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள டி.எஸ்.பி. பாண்டி
யனின் வீடு.
2. கே.கே. நகர் ஏ.பி. பேட்ரோ சாலையில் உள்ள இன்ஸ்பெக்டர் கணேசனின் வீடு.
3. கணேசனுக்கு சொந்தமான நெசப்பாக்கத்தில் உள்ள மற்றொரு வீடு.
4. கே.கே. நகர் 9-வது செக்டாரில் உள்ள இன்ஸ்பெக்டர் வினோதனின் வீடு.
5. நீலாங்கரையில் உள்ள பத்மாவின் வீடு.
6. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கௌரியின் வீடு.
இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: