ரூ.1500 கோடிக்கு புதிய வரி

தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமையல் எண்ணெய், வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலை உள்ளிட்டவை உயருகின்றன.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாவது:

சமையல் எண்ணெய் மீதான மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீத வரி அதிகரிக்கப்படும்.

பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட வணிகர்கள், தொழில் கூட்டமைப்புகளுக்கான கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இதர கோரிக்கைகளின் அடிப்படையிலும் நுகர்வோருக்கு பயன் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

வரிச் சலுகைகள்

- கோதுமை மீது தற்போது விதிக்கப்படும் 2 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- ஒட்ஸ் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். 

- சுற்றுச்சூழலுக்கு உகந்த சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு (இ-பைக்) விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு காம்பேக்ட் ப்ளோரசண்ட் விளக்குகள் மற்றும் காம்பேட் ப்ளோசரண்ட் குழல் விளக்குகளுக்கு தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும். 

இன்சுலின் மீதான வரி முழுமையாக வாபஸ்

- பெருகி வரும் சர்க்கரை நோயினை கருத்தில் கொண்டு இன்சூலின் மருந்துகளின் விலையினை குறைக்கும் பொருட்டு, அதன் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் தொடர்ச்சியாக சானிடரி நேப்கின்கள் மற்றும் டயாபர்கள் தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- கையினால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் காம்புகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். 

ஹெல்மட் விலை குறையும்

- போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தலைக் கவசத்திற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments