கூடங்குளம்: மத்திய, மாநில அரசுகள் கூட்டு சதி

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக சதி செய்து மக்களை ஏமாற்றி வருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.


 சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக உள்ளது முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு. இடிந்தகரையில் 100 நாள்களாகப் போராடி வரும் மக்களை ஜெயலலிதா சந்திக்காதது ஏன்? அப்பகுதியில் பல்வேறு சட்ட விரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சதி உள்ளதோ என சந்தேகப்படுகிறேன்.


 நிலப் பறிப்பு விவகாரத்தில் ரகசிய கூட்டு? நிலப் பறிப்பு பிரச்னையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன. நிலப் பறிப்பு புகார் தொடர்பாக தி.மு.க.வினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளே தள்ளப்பட்ட அதேவேகத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். இதில், ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியவில்லையா அல்லது போலீஸôருக்கு சட்டம் தெரியவில்லையா என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளதாக சந்தேகப்படுகிறேன்.


 சட்டப் பேரவையில் கையை நீட்டக் கூடாது எனச் சொல்கிறார்கள். அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஏதாவது காரணம் சொல்லி என் பேச்சுக்குத் தடை விதிக்க முயற்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் தடை விதித்தால் என்ன, மக்கள் மன்றத்தில் இந்த ஆட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லுவேன். சட்டப் பேரவையில் எனக்குத் தடை விதித்தது தவறான முன்னுதாரணம். சட்டப் பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.


 மின்சாரம் இல்லாமல் இலவசம் எதற்கு? இலவச கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி கொடுத்து என்ன பயன்? மின்சாரம் இல்லாவிட்டால் இந்த இலவசங்கள் எல்லாம் வீண். எல்லாப் பிரச்னைகளுக்கும் கடந்த ஆட்சியே காரணம் என தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. 1991-ல் இருந்து இதே பல்லவியைத்தான் பாடி வருகின்றனர். எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு புதிய மின் திட்டங்களை உருவாக்காமல் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன.


 அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கடந்த 9 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை கேட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்ளில் பதிவு செய்துள்ளனர். இலவசமாக அது, இது என கொடுப்பதை விட்டு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.


 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம்: கடந்த தேர்தலில் பதவி ஆசைக்காக நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவில்லை. மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். கூட்டணி சேராவிட்டால் பணம் வாங்கிக்கொண்டு கூட்டணி சேரவில்லை என்பார்கள்.
 எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் விஜயகாந்த்.

No comments: