ஒரு நாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றார் பான்டிங்

ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் நாடுகளின் கேப்டன் எல்லோருமே புகழுடனும், கெளரவத்துடனும் ஓய்வு பெற்றதாக சரித்திரம் இல்லை. எங்காவது அபூர்வமாகத்தான் அது நடக்கும். பெரும்பாலான கேப்டன்கள் அதிருப்தியுடனும், வருத்தத்துடனும், அவமரியாதையுடனும்தான் விடை பெற்றுச் சென்றுள்ளனர். ரிக்கியும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆஸ்திரேலிய அணியின் அருமையான கேப்டன்களில் ரிக்கியும் ஒருவர். அந்த அணியை இரும்புக்கோட்டை போல பல ஆண்டுகள் வைத்திருந்தவர். ஆனால் இன்று அவருக்கும் அவமரியாதை கிடைத்து அதன் விளைவாக அதிர்ச்சியுடனும், அதிருப்தியுடனும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து வெளியேறியுள்ளார் ரிக்கி.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் ரிக்கியும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவர் சரியாக ஆடவில்லை. இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு இன்னிங்ஸிலும் அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த கிரிக்கெட் வாரியம், அவரை அடுத்து வரும் போட்டிகளிலிருந்து நீக்கி முடிவெடுத்தது.

இது ரிக்கி பான்டிங்குக்கு பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டார். அதேசமயம்,டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த பான்டிங் கூறுகையில்,

ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன்.தேர்வு குழு தலைவர் என்னிடம் தெளிவாக கூறிவிட்டார். ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன்.

ஆனால் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். டாஸ்மேனியா அணிக்காகவும் தொடர்ந்து ஆடுவேன் என்றார் பான்டிங்.கடந்த 1995ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானவர் பான்டிங். இதுவரை 375 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,704 ரன் எடுத்துள்ளார். 30 சதமும், 82 அரை சதமும் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 42.03 ஆகும்.
ஒரு நாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் கடந்த சில வீரர்களில் ரிக்கியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: