பிரதமராகும் ஆசை எனக்கில்லை: ராகுல் காந்தி

பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது,

எனக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பாபா ராம்தேவ் குண்டர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உத்தர பிரதேச அரசு மக்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை. கடந்த 22 ஆண்டு காலமாக அவதிப்படும் இந்த மாநில மக்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படவே நான் பாடுபடுகிறேன்.

வெளிப்படையாக கூறுவது என்றால் தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு கவலை இல்லை. கடந்த 22 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருவது பெரும் குற்றமாகும். மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நமது கடமையாகும்.

மாநில மக்கள் மீது ஆட்சியாளர் விளையாட்டு நடத்தி உள்ளனர். மாநிலத்தின் மக்களின் கவுரவத்தை மீட்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாநிலத்தில் மக்களின் சக்தியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

உத்திரபிரதேசத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2012, 14 தேர்தல்களில் இதற்காக முயல்வேன். உத்திரபிரதேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்கும் வரை ஓயமாட்டேன்.

இதற்கிடையே, ராகுலுக்கு எதிராக தான் யாரையும் ஏவிவிடவில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ராகுல் ஏன் கருப்புப் பணத்தை பற்றி பேசவேயில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: