தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம்

உயர் தொழில் நுட்பங்களான வானூர்தி பராமரிப்பு, கப்பல் துறை பிரிவுகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம் அமைக்க ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், தொழிற்சார்ந்த திறன் பெறும் பயிற்சி அளிப்பதன் மூலம், தமிழகத்திற்குத் தேவைப்படும் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என்பதையும் உணர்ந்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு சங்கத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் மொத்தம் 40,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் 15,000 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிக்க 6 கோடியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 25,000 மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி அளிக்க 7 கோடியே 50 லட்ச ரூபாயும், பயிற்றுநர்களுக்கான பயிற்சி திட்டத்திற்கு ரூ.50 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில் நுட்பங்களான வானூர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை, கப்பல் துறை மற்றும் அது சார்ந்த சேவை பிரிவுகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையத்தை தனியார் பங்களிப்புடன் அமைக்க ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் அறிவுத்திறன் மேம்பட மின்னணு பாட முறை மற்றும் பணிச்சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சியினை அறிமுகப்படுத்த ரூ.50 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தரம் மிக்க பயிற்றுநர்களைத் தொடர்ந்து உருவாக்கும் நோக்குடன் பயிற்றுநர் மேம்பாடு பயிற்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க, முதற்கட்டமாக ரூ.25 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து பராமரிக்கவும், தமிழ்நாடு மாநில திறன் பதிவுத் தொகுப்பு ஒன்றை ஏற்படுத்தவும், தனியார் துறையில் பதிவுதாரர்கள் பணி நியமனம் பெறும் வகையில் மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஒரு தனியார் துறை பணி நியமன உதவிப் பிரிவு தொடங்கப்படும்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலேயே, தனியார் துறையினர் ஊழியர்களைத் தேர்வு செய்ய உட்கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தொழில்நுட்பக் கல்லூரி/தொழிற்பயிற்சி நிலையம் இளங்கலை பட்டம், பொறியியல், பல்/பொது மருத்துவம் போன்ற தொழிற்கல்வியை பயிலும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியான ரூ.250ஐ, 500 ரூபாயாக உயர்த்தி படிப்பு காலம் முழுமைக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைகளினால் மனித வளம் மேம்பாடு அடைந்து வருங்காலத்தில் திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் உருவாக வழி ஏற்படும். இதனால் தமிழகத்தின் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments