கோஹ்லி- 50 சதவீத சம்பளம் அபராதம்

இந்திய வீரர் விராத் கோலி ஆட்டத்தின் இடையே பார்வையாளர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டி கோபப்பட்டதற்காக அவருக்கு 50 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுல்லது.

ஆஸ்திரேலியா, இந்தியா கிரிக்கெட் போட்டிகள் என்றாலே சர்ச்சைக்கு குறைவு இருக்காது. கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்ஸ், இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இடையிலான வாக்குவாதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் ஷேவாக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே சர்சைக்குரிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் 'மேட்டர்' பெரிதாக இல்லாததால் யாருக்கும் அபராதமே எதுவும் விதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராத் கோலி கைவிரல் காட்டியதால் அபராத வலையில் சிக்கி உள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் 1 விக்கெட் மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 366 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வந்தது. அப்போது விராத் கோலி, போட்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களையும், அம்பயர் ரஞ்சன் மடுகல்லேவையும் நோக்கி தனது நடுவிரலை உயர்த்தி காட்டினார்.

அதன்பிறகு தனது செயலுக்கு வருந்திய கோலி, பீல்டு அம்பயரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். எனினும் ஆடுகளத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டதாக விராத் கோலியின் போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய அணியின் ஊடக மேலாளர் ஜி.எஸ்.வாலியா கூறியதாவது,

கோலி ஆவேசத்தில் தனது விரலை காட்டிவிட்டார். அதன்பிறகு தனது செயலுக்காக அம்பயரிடம் சென்று வருத்தம் தெரிவித்தார். அதோடு அந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்றார்.

விரலைக் காட்டுவது முக்கியமல்ல கோலி, வித்தையைக் காட்ட வேண்டும், அதற்கு முயற்சியுங்கள். இதுவரை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உருப்படியாக ஒரு ஆட்டத்தையும் கோலி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

Post a Comment

0 Comments