பொங்கல் பண்டிகைக்கு 1,000 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி 1,000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அனைத்து ரயில்கள், பஸ்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.

வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை ஒட்டி 
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ், ரயில்களிலும் முன் பதிவு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

வழக்கமான ரயில்கள் தவிர சிறப்பு ரயில்களும் நிரம்பி விட்டன. 2,000 அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் இடமில்லை. பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும் இடங்கள் எல்லாம் முன் பதிவு மூலம் நிரம்பிவிட்டன.

ஆன்லைன் மூலமும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் திறக்கப்பட்ட சிறப்பு கெளண்டர்கள் மூலம் பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடைசி நேர நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. 7 போக்குவரத்து கழகங்கள் சார்பிலும் சுமார் 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

12 மற்றும் 13ம் தேதிகளில் இந்தப் பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும்.

விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பஸ்களும், இதர போக்குவரத்து கழகத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படவுள்ளன.

கடைசி நேர கூட்டத்தை சமாளிக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் விரிவான ஏற்பாடுகள் பயணிகளுக்கு செய்யப்படுகிறது. சிறப்பு பஸ்களில் செல்ல விரும்புவோர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அன்றைய தினம் ரூ.10 செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

முன் கூட்டிய தகவலுக்கு நன்றி நண்பரே ! வாழ்த்துக்கள் !