நம்பிக்கைதாங்க Life நம்புங்க Boss


''ஞ்சாப்பு வரைதான் படிச்சேன். நல்லாத்தான் படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்க ஊர் சி.ஜி.என்.கண்டிகை பள்ளிக்கூடத்தில் வாத்தி யாரா இருந்த ஒருத்தர், 'இந்த ஸ்கூல்ல எல்லாம் நீ படிக்கக் கூடாது. உங்கள மாதிரி ஆளுங்களுக்குன்னே மெட்ராஸ்ல தனியா ஸ்கூல் நடத்துறாங்க. அங்கே போய்ப் படி. இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது’னு தொரத்தி விட்டுட்டாரு. அதுக்கப்புறம் பள்ளிக்கூடம் போகலை. அன்னிக்கு அவரு  'உன்னால முடியும்மா. நல்லா படி’னு தட்டிக்கொடுத்திருந்தா இன்னிக்கு நானும் பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய லெவல்ல இருந்திருப்பேன் சார்!'' - வழியும் கண்ணீரைத் தோள் பட்டையில் துடைத்தபடியே பேசுகிறார் பரமேஸ்வரி.

 பிறவியிலேயே இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான இவர், திருத்தணியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள சி.ஜி.என்.கண்டிகையின் நம்பிக்கை நட்சத்திரம். யாருடைய உதவியும் இல்லாமல் தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு குடும்பத்துக்கும் உதவியாக இருக்கிறார். தீப்பெட்டியை உரசி அடுப்பு பத்த வைப்பதில் தொடங்கி சமையல் செய்வது, செல்போனில் எண்களை லாகவமாக அழுத்திப் பேசுவது என கால்களை  இலகுவாகப் பயன் படுத்துகிறார். அப்பா நடத்தும் டிபன் சென் டரையும் கவனித்துக்கொள்கிறார்.

''என் பேரு பரமேஸ்வரினுதான் இங்க எல்லாருக்கும் தெரியும். எனக்கு சர்ச்சுல வெச்சபேரு  ஸ்டெல்லா மேரி. அப்பா இந்து. அம்மா கிறிஸ்டியன். பிறந்ததிலேர்ந்தே எனக்கு ரெண்டு கையும் இல்லை. அப்பா, அம்மா கூடத்தான் இருக்கேன். அப்பா  டிபன் சென்டர் நடத்துறாரு. வர்ற வருமானம் வீட் டுக்கே சரியாப்போயிடும். என்கூட பொறந்த ரெண்டு தங்கச்சி, ரெண்டு தம்பிங்க நல்லாப் படிக்கிறாங்க. கால்லயே எல்லா வேலையும் செய்யறதைப் பார்த்துட்டு எங்க ஊர்ல இருக் கிற 'துளசி மகளிர்க் குழு’வுக்கு என்னைத் தலைவியாத் தேர்ந்தெடுத்தாங்க. மகளிர்க் குழுவுல எல்லாரும் மாடு, கன்னு வாங்கி பால் வியாபாரம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். என்னைப் பார்த்து பரிதாப்படுறவங்க, அடுத்த அஞ்சு நிமிஷத்தில் ஆச்சர்யப்பட ஆரம்பிச்சுடுவாங்க'' என்று சிரித்தபடி தொடர் கிறார்.
''சார் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, நான் டி.விக்கெல்லாம் பேட்டி கொடுத்திருக்கேன். ஆனா, எந்தச் சலுகையும் இதுவரை கிடைக்கலைங்க. ஆறு வருஷத்துக்கு முன்னே ஜெய லலிதா அம்மா என் நிலைமையைக் கேள்விப் பட்டு சந்திக்க வரச்சொன்னாங்க. போய்ப் பார்த்தேன். செயற்கைக் கை பொருத்த ஏற்பாடு செஞ்சாங்க. ஆனா, அந்த ரெண்டு செயற்கைக் கையும் ஆறு கிலோ எடை. அந்தக் கையைப் பொருத்தினதுக்கு அப்புறம் வெயிட் அதிகமாகி  அடிக்கடி குளிர் ஜுரம் வந்துச்சு. அதனால அந்தக் கையை எடுத்துட்டேன். அப்பதான் அரசாங்கத்தில் இருந்து அரசு உதவித் தொகை கிடைச்சுது. ஆனா, இப்ப வரைக்கும் எனக்கு இலவச பஸ் பாஸ் கிடையாதுங்க. தனியாத் தொழில் தொடங்க பேங்க்ல லோன் கேட் டேன். 'கை, கால் நல்லா இருக்கி றவனே கடனைக் கட்ட முடியாம சிரமப்படுறான். உன்னால் எப்படி கட்ட முடியும்?’னு லோன் தர மறுத்துட்டாங்க. லோன் கொடுத்துஇருந்தா எங்க ஊர்லேயே ஒரு ஷாமியானா பந்தல் சாமான்களை வாங்கிப் போட்டு தொழில் தொடங்கலாம்னு இருந்தேன். சமத்துவபுரம் வீடும் கேட்டேன். அதுவும் கிடைக்கலை.

என் நிலமையைப் பார்த்துட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர் வேலைக்குக் கூப்புட்டாங்க. அவ்வளவு தூரம் போய் வேலை செய்யறது சிரமம்னு விட்டுட்டேன். ஒரு சிலர் சினிமாவில் நடிக்கக்கூட கேட்டாங்க. 'தாராளமா நடிக்கிறேன்’னு சொன்னேன்.  'போன் பண்றோம்’னு சொல்லிட்டுப் போனவங்கதான். மறுபடியும் கூப்பிடவே இல்லை. அம்மா, அப்பாவுக்குப் பிறகு தம்பி, தங்கச்சிங்களை நம்பித்த£ன் வாழ வேண்டியிருக்கும்னு நினைச்சாலே மனசுக்குக் கஷ்டமா இருக்கு.
எனக்கு ஜெயலலிதா அம்மாதான் முன்னோடிங்க. அவங்களை மறுபடி யும் பார்த்து என் கஷ்டத்தைச் சொல்லப்போறேன். ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்னு சொல்வாங்க. அவங்க ஏதாவது அரசாங்க வேலைக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னா அதன் மூலமா நாலு பேருக்கு உதவி பண்ணிக்கிட்டு நானும் நல்லா இருப்பேன்.

சார் அப்புறம் என்னை ஸ்கூல்ல இருந்து துரத்திவிட்டாருனு ஒரு வாத்தியாரை சொன்னேன்ல, அவரு பேரை போட்றாதீங்க. அவரு பாவத்தை நாம ஏன் சுமக்கணும்? என்னை மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா அதுவே போதும்னு மட்டும் எழுதிக்குங்க'' என்றபடி சிரிக்கிறார் பரமேஸ்வரி.

அந்தச் சிரிப்பில் அன்பும் நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது.

Post a Comment

2 Comments

ADMIN said…
தன்னம்பிக்கை தாரகை..!!
ADMIN said…
வாழ்க்கையில் முன்னேற தளராத நம்பிக்கை இருந்தாலே போதும் என்கிறது இவரது கதை.. பகிர்வுக்கு நன்றி தோழரே...!!!

இங்கும் சில தன்னம்பிக்கை பதிவுகள் இருக்கிறது. இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!
எதிரிகளையும் துணையாக்கிக்கொள்ளுங்கள் !
ஆறே வயதான GABE MARSH ன் தன்னம்பிக்கை..!!!


மேலும் பல பதிவுகள் உங்கள் தன்னம்பிக்கை மேம்படுத்த....!!!