தமிழக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்


முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்தின் உரிமையை எக்‍காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என்றும், அணையை பாதுகாக்‍க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைக்‍க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தின் விவரம்:
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுநர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து, அதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து, 142 அடியாகவும், எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டபின், 152 அடியாகவும் உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.


பிறகு, அந்த ஆணையை, இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை, முற்றிலும் அவமதிக்கும் வகையில், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006 என்ற சட்டத்தை இயற்றி, அந்த சட்டத்திற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று பொய்ப் பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி விட்டு, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடி யாக, குறைக்கவேண்டும் என்று 9.12.2011 அன்று கேரள சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றியுள்ள கேரள அரசு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.


எனினும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டமன்றத்தை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால், அந்த தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தினை தெரிவிப்பது என்றும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறது.


இதையொட்டி, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய தொழிற் பாதுகாப்புப் படையை, அதாவது சி.ஐ.எஸ்.எப்.-ஐ அந்தப்பகுதிக்கு உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும்;


உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும்;


அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதன் தொடர்ச்சியாக, இந்தத் தீர்மானத்தின் மீது திமுக, தேமுதிக உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதித்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.


அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த பின்பு, முதல்வர்   ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். பின்னர், அனைத்துக் கட்சி ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments